பஞ்ச காவ்யா என்பது பயிர்களின் வளர்ச்சிக்கு ஊட்டச் சத்தாகவும், பூச்சிகளை விரட்டுவதற்கும் பயன்படுகிறது. கால் நடைகளுக்கும் கொடுத்தால் அவற்றின் நோய் எதிர்ப்பாற்றல் பெருகுகிறது.
பஞ்ச காவ்யா தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.
20 லிட்டர் பஞ்ச காவ்யா தயாரிக்க தேவையான பொருட்கள்
புதிய சாணம் – 5 கிலோ
கோமியம் – 3 லிட்டர்
மாட்டுப்பால் – 2 லிட்டர்
தயிர் – 2லிட்டர்
நெய் – 1 கிலோ
இளநீர் – 3 லிட்டர்
முட்டை – 5
வாழைப்பழம் – 10
கள் – 2லிட்டர்
நாட்டுச் சர்க்கரை – 1 கிலோ அல்லது கரும்புச்சாறு – 3 லிட்டர்
தயாரிப்பு முறை
சாணத்தை ஒரு பாத்திரத்தில் இட்டு அதில் நெய்யை ஒரு சேரக் கலக்கவும். பாத்திரத்தின் வாயைத் துணியால் கட்டவும். இந்த கலவையை ஒரு நாளைக்கு 2 முறை என 3 நாட்களுக்கு தினமும் இரு வேளை கலக்கி விடவும்.
நான்காவது நாள் கோமியம், மாட்டுப்பால், தயிர், இளநீர், முட்டை, வாழைப்பழம், கள், நாட்டுச் சர்க்கரை அல்லது கரும்புச்சாறு ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்க்கவும். ஈ மொய்க்காமல் இருக்கும் பொருட்டு துணியால் பாத்திரத்தின் வாயைக் கட்டி நிழலில் வைக்கவும்.
இந்தக் கலவையை ஒரு நாளைக்கு இரு முறை கலக்கவும். (50 முறை இடப்புறமாகவும் 50 முறை வலப்புறமாகவும் கலக்கவும்) பஞ்ச காவ்யாவை 20-வது நாள் பயன்படுத்தத் தொடங்கலாம். இந்தக் கலவையை சுமார் 6 மாதம் வைத்திருக்கலாம். இதனை காலை, மாலை இரு வேளையும் நன்றாக கலக்கி விடவேண்டும்.
எல்லா வகையான தாவரங்களுக்கும் பஞ்ச காவ்யா தெளிக்கலாம். 200 மில்லி லிட்டர் பஞ்சகாவ்யாவை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கவும்.
பஞ்சகாவ்யா தெளிப்பதனால் கொய்யா, எலுமிச்சை, வாழை போன்ற பழவகைகளில் விளைச்சல் இரட்டிப்பாகும். வாணிகப் பயிர்கள், மஞ்சள் போன்றவற்றிலும் அதிக மற்றும் திரட்சியான விளைச்சலைப் பெறலாம்.
மல்லிகைப்பூவானது அதிக நறுமணத்துடன் வருடம் முழுவதும் பூக்கும். காய்கறிகள் நல்ல சுவையாகவும், மணமாகவும் இருக்கும். விளைச்சல் இரட்டிப்பாகும். காய்கறிகள் ஆரோக்கியமாகவும், மேல் தோல்கள் பளபளப்புடனும் இருக்கும்.
பஞ்ச காவ்யாவை தாவரங்களின் மேல் தெளிப்பதன் மூலம் இலைகள் மற்றும் தண்டுகளின் மேல் மெல்லிய சவ்வு போன்ற படலம் உருவாகும். இதனால் நீர் ஆவியாதல் குறைந்து விடும்.
செடிகளில் உருவாகும் ஆழமான மற்றும் விரிவான வேர்கள் வறண்ட காலங்களில் அதிகமான நாட்கள் தாங்கி நிற்கும். இதனால் முப்பது சதவீதம் நீர்பாசனம் மிச்சப்படுத்தப்பட்டு கடினமான வறட்சியையும் தாவரங்கள் தாங்கக்கூடியதாகவும் உள்ளன.
நுண்ணுயிரி, பாக்டீரியா, பூஞ்ஞை, புரதச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச் சத்து, அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், நொதிப்பொருள், வளர்ச்சி ஊக்கக்கூறு, நுண்ணூட்டச்சத்து, முழுத்தடுப்பாற்றலை அதிகப்படுத்தும் காரணிகள் ஆகியவை பஞ்சகவ்யாவில் மிகுந்துள்ளன.
விலங்குகள் மற்றும் மனிதர்களில் பஞ்ச காவ்யாவில் இருக்கும் நுண்ணுயிரிகள் முழுத்தடுப்பாற்றலைத் தூண்டி உடம்பினுள் கொண்டு செல்லும் நுண்ணுயிரிகளுக்கு எதிராக அதிகப்படியான நோய் எதிர்ப்பொருளை உருவாக்கும். இது நோய்த்தடுப்பாற்றல் மருந்தினை போல் செயல்படும்.
பஞ்ச காவ்யா விலங்குகள் மற்றும் மனிதர்களின் முழுத்தடுப்பாற்றலை அதிகப்படுத்தும். நோய் தாக்குதலில் இருந்து பாதுகாத்து குணப்படுத்த உதவும். முதிர்ச்சியைக் கட்டுப்படுத்தி நீண்ட நாட்களுக்கு இளமையாக வைத்திருக்க உதவும்.
பஞ்ச காவ்யாவில் இருக்கும் காரணிகள் பசியார்வம், ஜீரணத்தன்மை, தன்மயமாதல் மற்றும் நச்சுத்தன்மையை உடலில் இருந்து அகற்றுதலில் உதவி புரியும். மலச்சிக்கலை முழுமையாகக் குணப்படுத்திவிடும். பஞ்ச காவ்யாவை பயன்படுத்துவதால் விலங்குகள் மற்றும் மனிதர்களின் முடி மற்றும் தோல்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
– இரா.அறிவழகன்
Comments
“பஞ்ச காவ்யா – இயற்கை பயிர் ஊக்கி” மீது ஒரு மறுமொழி