பஞ்ச குண சிவ மூர்த்திகள்

கருணா மூர்த்தி – சோமஸ்கந்தர்

பஞ்ச குண சிவ மூர்த்திகள் எனப்படுவது ஐந்து குணங்களை வெளிப்படுத்தும் ஐந்து வகையான சிவ மூர்த்திகள் ஆவர்.

ஆனந்தம், சாந்தம், கருணை, வசீகரம், ருத்திரம் ஆகியவை பஞ்ச குணங்கள் ஆகும்.

ஆனந்தத்தின் வடிவமாக நடராஜரும், சாந்தத்தின் வடிவமாக தட்சிணாமூர்த்தியும், கருணையின் வடிவமாக சோமஸ்கந்தரும், வசீகரத்தின் வடிவமாக பிச்சாடனாரும், ருத்திரத்தின் வடிவமாக பைரவரும் போற்றப்படுகின்றனர்.

இனி பஞ்ச குண சிவ மூர்த்திகளைப் பற்றிப் பார்ப்போம்.

 

ஆனந்த மூர்த்தி – நடராஜர்

ஆனந்த மூர்த்தி - நடராஜர்
ஆனந்த மூர்த்தி – நடராஜர்

 

சிவனின் ஆனந்த வடிவமாக நடராஜர் வழிபடப்படுகிறார். இவர் ஆடல்கலையின் தலைவராகவும் வணங்கப்படுகிறார்.

இவர் தனது ஆடல்கலையின் மூலம் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்து தொழில்களைச் செய்கிறார் எனக் கருதப்படுகிறது.

இவர் வலது காலை முயலகன் மீது ஊன்றியும், இடது காலை உடலுக்கு குறுக்காக தூக்கிய ஆடிய நிலையிலும் காட்சியளிக்கிறார்; வலது மேற்கையில் டமருகமான உடுக்கையையும், இடது மேற்கையில் அக்னியையும் ஏந்தியுள்ளார்.

இவரின் வலது கீழ்கை அடைக்கலம் தரும் நிலையிலும், இடது கீழ்கைகளின் விரல்கள் தூக்கிய திருவடியை சுட்டியபடியும் இருக்கும்.

இவரது கூந்தல் மற்றும் ஆடைகள் காற்றில் ஆடியபடி இருக்கின்றன.

தலையில் கங்கை, நாகம், பிறைச்சந்திரன் ஆகியவற்றை அணிந்துள்ளார்.

முகத்தில் புன்சிரிப்புடன் காண்போரை கவர்ந்திழுக்கின்றார் நடராஜர்.

நடராஜர் உருவம் பஞ்சபூதங்களையும் தன்னுள் கொண்டுள்ளது. அதாவது ஊன்றிய திருவடி நிலத்தினையும், தலையிலுள்ள கங்கை நீரினையும், இடதுமேற்கை அக்னி நெருப்பினையும், அசைந்தாடும் கூந்தல் காற்றினையும், தூக்கிய திருவடி ஆகாயத்தையும் குறிக்கின்றது.

இவரின் ஆனந்த தாண்டவமே உலக இயக்கத்திற்கு காரணமாகக் கருதப்படுகிறது.

ஆடல்வல்லான், ஆடலரசன், சிற்றம்பலன், சபேசன், அம்மபலத்தான், கூத்தன் என்றெல்லாம் நடராஜர் அழைக்கப்படுகிறார். இம்மூர்த்தியை வழிபட எல்லையில்லா பேரானந்தம் கிடைக்கும்.

 

சாந்த மூர்த்தி – தட்சிணாமூர்த்தி

சாந்த மூர்த்தி – தட்சிணாமூர்த்தி
சாந்த மூர்த்தி – தட்சிணாமூர்த்தி

 

சிவனின் சாந்த வடிவமாக தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி வழிபடப்படுகிறார். இவர் சிவாலயங்களில் மூலவருக்கு தெற்கே கல்லால மரத்தின் கீழ் தென்முகமாக அருள்பாலிக்கிறார்.

இவர் ஞானம், அறிவு, தெளிவு ஆகியவற்றின் வடிவமாகப் போற்றப்படுகிறார்.

இவர் வலது காலை அபஸ்மரனின் மீது ஊன்றியும், இடது காலை மடித்து அமர்ந்து தியான நிலையில் உள்ளார்; வலது மேற்கையில் பாம்புடன் கூடிய உடுக்கை ஃ ருத்திராட்ச மாலையும், இடது மேற்கையில் அக்னியையும் கொண்டுள்ளார்.

இவரது இடது கீழ்கையில் ஓலைச்சுவடி உள்ளது. வலது கீழ்கையில் உள்ள பெருவிரலுடன், ஆட்காட்டி விரலை இணைத்து ஏனைய விரல்கள் நேராக வைத்து சின்முத்திரை காட்டி அருளுகிறார்.

இடையில் புலித்தோலினையும், தலையில் பிறைச்சந்திரனையும் அணிந்து அருளுகிறார்.

பிரம்மாவின் குமாரர்களான சனகர், சதானந்தர், சனாதனர், சனத்குமாரர் ஞானத்தைத் தேடி அலைந்தனர். அவர்கள் தேடிய ஞானம் எங்கும் புலப்படவில்லை.

அப்போது தென்முகம் நோக்கி இறைவனான சிவபெருமான் கல்லால மரத்தின் கீழ் சின்முத்திரை காட்டியவாறு தியானத்தில் அமர்ந்திருந்தார்.

இதனைக் கண்ட சனகாதி முனிவர்கள் பசுவாகிய ஆன்மாவானது ஆணவம்;, கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை ஒழித்து பதியாகிய இறைவனை அடையும்போது ஞானம் (மோட்சம்) கிடைக்கும் என்பதை உணர்ந்து கொண்டனர்.

சிவனின் இத்திருக்கோலம் தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறது.

இவர் ஆலமர் கடவுள், ஆலமர் செல்வன், குருபகவான், தென்முகக் கடவுள் என்றெல்லாம் போற்றப்படுகிறார். இவரை வழிபட அறியாமை என்ற அஞ்ஞானம் நீங்கி மெய்யறிவான ஞானம் கிடைக்கும்.

 

கருணா மூர்த்தி – சோமஸ்கந்தர்

கருணா மூர்த்தி – சோமஸ்கந்தர்
கருணா மூர்த்தி – சோமஸ்கந்தர்

 

சிவனின் கருணா வடிவமாக சோமஸ்கந்தர் வழிபடப்படுகிறார். சோமானான சிவபெருமான் ஸ்கந்தர் எனப்படும் முருகன், உமையம்மையுடன் இணைந்து இருப்பதால் சோமஸ்கந்தர் என்று அழைக்கப்படுகிறார்.

இவ்வடிவில் இறைவன் அன்பான கணவனாகவும், பாசமிகு தந்தையாகவும் இருக்கிறார். குடும்ப உறவின் உன்னத நிலையை இவ்வடிவம் உணர்த்துகிறது.

சிவபெருமான் வலதுபக்கத்திலும், உமையம்மை இடது பக்கத்திலும் இவ்விருவருக்கு இடையில் முருகப்பெருமானும் காட்சியளிகின்றனர்.

சூரபத்மனின் கொடுமைகளிலிருந்து இவ்வுலகைக் காக்கும் பொருட்டு இறைவனார் தம் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு நெருப்பு பொறிகளை உருவாக்கினார். அந்நெருப்பு பொறிகளை அக்னிதேவனும், வாயுதேவனும் சரவணப்பொய்கையில் சேர்த்தனர்.

நெருப்பொறிகள் ஆறு தாமரைமலர்களில் ஆறுகுழந்தைகளாக மாறினர். அவர்களை கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி வளர்த்தனர். குழந்தைகளைக் காண வந்த உமையம்மை ஆறுகுழந்தைகளை அணைத்த போது அறுவரும் ஒரே குழந்தையாக மாறினர். இவரே கந்தன் என்று அழைக்கப்பட்டார்.

கந்தன் அம்மைக்கும், அப்பனுக்கும் இடையில் இருந்து உலகத்திற்கு காட்சியளித்தார். இவ்வுருவமே சோமஸ்கந்தர் என்றழைக்கப்படுகிறது.

குழந்தைநாயகர், சச்சிதானந்தம், சிவனுமைமுருகு, இளமுருகு உடனுறையும் அம்மையப்பர் என்றெல்லாம் இவர் போற்றப்படுகிறார். இவரை வழிபட நல்ல குடும்ப வாழ்க்கையும், குடும்ப ஒற்றுமையும் கிடைக்கும்.

 

வசீகர மூர்த்தி – பிட்சாடனார்

வசீகர மூர்த்தி – பிட்சாடனார்
வசீகர மூர்த்தி – பிட்சாடனார்

 

சிவனின் வசீகர வடிவமாக பிட்சாடனர் வழிபடப்படுகிறார். இவ்வடிவம் சிவபெருமான் பிச்சை ஏற்கும் வடிவிலான திருக்கோலமாகும். இவ்வடிவனத்தில் இறைவனார் பெரும் அழகோடு எல்லோரையும் வசீகரிக்கிறார்.

வசீகர மூர்த்தி இடது காலை ஊன்றி வலது காலை வளைத்து நடந்து செல்லும் நிலையில் உள்ளார். முன்வலது கையில் அருகம்புல்லால் மானை ஈர்த்தும், பின்வலது கையில் உடுக்கை ஏந்தி காதுவரை நீண்டும் இவர் காட்சியளிக்கிறார்.

பின்இடது கையில் பாம்புடன் திரிசூலமும், முன்இடது கையில் பிச்சை பாத்திரமும் கொண்டிருப்பார். ஆடையேதுமின்றி இடையில் பாம்பை அணிந்து விளங்குவார்.

தலையில் சடாபாரம், நெற்றியில் முக்கண்ணும், கருணை பொழியும் கண்களும், காண்போரை மயக்கும் கட்டழகுடனும் அருளுவார்.

வலக்காலில் வீரக்கழலும், திருவடிகளில் பாதுகைகளும் காணப்படும். இவரின் இடப்பக்கத்தில் தலையில் பிச்சை பாத்திரம் கொண்ட குறட்பூதமும், மோகினியும் காணப்படுவர்.

தாருகாவனத்தில் முனிவர்கள் வேள்விகளிலும், வேதமந்திரங்களிலும் தங்களைவிடச் சிறந்தவர்கள் யாரும் இல்லை எனச் செருக்குற்றிருந்தனர். முனி பத்தினிகளும் கற்பில் தாங்கள் சிறந்தவர்கள் என்று ஆணவம் கொண்டிருந்தனர்.

அப்போது சிவபெருமான் பிட்சாடனார் வேடமிட்டு திருமாலை மோகினி வேடத்தில் கூட்டிக் கொண்டு தாருகாவனத்திற்குச் சென்றார்.

முனி பத்தினிகள் பிட்சாடனர் பின்னும், முனிவர்கள் மோகினி பின்னும் தங்களை மறந்து சென்றனர். திடீரென முனிவர்கள் தங்கள் நிலையை உணர்ந்தனர்.

தங்களின் பத்தினிகள் மயங்கக் காரணமான பிட்சாடனார் மீது வேள்வித்தீ, மான், மழு, நாகங்கள், யானை, புலி, சூலம், பூதப்படை, உடுக்கை, முயலகன் ஆகிவற்றை ஏவினர்.

இறைவனார் அவற்றை ஆடையாகவும், அணிகலானகவும், ஆயுதங்களாகவும் ஏற்றுக் கொண்டார். இதனைக் கண்ட முனிவரும், அவர்தம் பத்தினியரும் இறைவனை உணர்ந்து தங்களின் ஆவணவம் அழியப் பெற்றனர்.

பலிதேர்பிரான், ஐயங்கொள் பெம்மான், பிச்சத்தேவர் என்றெல்லாம் போற்றப்படும் இவரை வழிபட அடியர்களின் தீவினைகளை அழித்து நல்வழி காட்டுவார்.

இவர் தம் பக்கதர்களின் சிற்றின்ப பற்றினை நீக்கி பேரின்பத்தை நல்குவார்.

 

ருத்திர வடிவம் – பைரவர்

ருத்திர வடிவம் - பைரவர்
ருத்திர வடிவம் – பைரவர்

 

சிவனின் ருத்திர வடிவமாக பைரவர் வழிபடப்படுகிறார். இவரை வைரவர் என்றும் அழைப்பர். இவரின் வாகனம் நாய் ஆகும். இவர் காவல் தெய்வமாக்க கருதப்படுகிறார்.

இவர் பொதுவாக சிவாலயத்தில் வடகிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் அருள்பாலிப்பார்.

சிவாலய வழிபாட்டின் முடிவில் சிவாலயத்திலிருந்து பிரசாதத்தைத் தவிர வேறு பொருட்களை எடுத்து செல்லவில்லை என்று கூறி இவரிடம் அனுமதி பெற்ற பின்பே செல்ல வேண்டும்.

பிறந்த மேனியினராய், நாகத்தை பூணூலாகவும் சந்திரனை தலையில் வைத்தும் காட்சி அளிக்கிறார். கைகளில் பாசம், அங்குசம், சூலம், வாள் ஆகியவற்றை ஏந்தி நாய் வாகனத்துடன் அருள்பாலிப்பார்.

இவர் சனிபகவானின் குருவாகவும், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவகிரங்கள் உள்ளிட்டவைகளையும், காலத்தை கட்டுப்படுத்துபவராகவும் கருதப்படுகிறார்.

அந்தகாசுரன் என்ற அசுரன் சிவனிடம் பெற்ற வரத்தினால் உலக உயிர்களை துன்புறுத்தினான். சிவனிடம் இருந்து பெற்ற சக்தியால் உலகினை இருளில் மூழ்கடித்தான்.

அனைவரும் இறைவனான சிவபெருமானிடம் அந்தாகாசுரனை வதம் செய்ய வேண்டினர்.

சிவனும் காலாக்னியைக் கொண்டு பைரவரை படைத்தார். பைரவரும் சிவனின் ஆணைப்படி அந்தகாசுரனை அழித்து உலகில் ஒளி பரவச் செய்தார்.

எட்டு திசைகளிலும் நிலவிய இருளைப் போக்க எட்டு பைரவர்கள் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.

இவர் பிரம்மசிரேச்சிதர், உக்ர பைரவர், சேத்ர பாலர், சட்டைநாதர், கஞ்சுகன், கரிமுக்தன், சித்தன், வாதுகன் என பல பெயர்களில் போற்றப்படுகிறார்.

இவரை வழிபட மாதந்தோறும் வரும் தேய்பிறை அஷ்டமி சிறந்ததாகும். செவ்வாயுடன் சேர்ந்த தேய்பிறை அஷ்டமி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இவரை வழிபட அகால மரணம் தவிர்க்கப்படும். நோய் நொடிகள் நீக்கி வளமான வாழ்வு கிடைக்கும். வியாபாரம் செழிக்கும்.

நாமும் பஞ்ச குண சிவ மூர்த்திகளை வழிபட்டு வாழ்வில் மேன்மை அடைவோம்.

 

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.