நீருடன் ஓர் உரையாடல் 7 – படிக நீர்

மதிய நேரம். வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. ‘மோர் குடித்தால் இதமாக இருக்கும்’ என்று மனதில் தோன்றியது.

சமையலறைக்குச் சென்றேன்.

சமையலறை மேடையிலிருந்த ஒரு கிண்ணத்தில் தயிர் இருந்தது. ‘மோர் குடிக்க வேண்டும்’ என்ற எண்ணம் இன்னும் மேலெழுந்தது.

உடனே, கலவைக்கருவி (மிக்சி) ஜாடியை எடுத்து அதில் தயிரை இட்டு, அத்தோடு சிறிதளவு நீரை சேர்த்து கலவைக்கருவியில் வைத்து இயக்கினேன். சில நொடிகளில் மோர் தயார் ஆனது.

அதில் கொத்தமல்லித் தழையை சேர்க்கலாம் என்று எண்ணினேன். காய்கறிக் கூடையைப் பார்த்தேன். அதில் கொத்தமல்லி தழை இல்லை.

அப்பொழுதுதான் ஞாபகம் வந்தது. குளிர்சாதனப் பெட்டியை திறந்து பார்த்தேன். அதில் கொத்தமல்லி தழைகள் இருந்தன. கொஞ்சம் எடுத்து மோரில் போட்டு கலந்தேன்.

ஒரு பெரிய கோப்பையில் மோர் எடுத்துக் கொண்டு எனது அறைக்கு வந்தேன். ‘படிக உப்புக்கள்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை நான் எழுதிக் கொண்டிருந்தேன். அதற்கு தேவையான மேற்கோள்களை சேகரித்து வைத்திருந்தேன். அதனை படிக்கத் தொடங்கினேன்.

அப்பொழுது, மோரைச் சுவைத்தேன். படிப்பதில் கவனம் செல்லவில்லை. காரணம் மோரில் உப்பு இல்லை.

“அடடா, உப்பு போட மறந்துட்டேனே” என்று எனக்கு நானே கூறிக் கொண்டேன்.

அந்த மோர் கோப்பையை எடுத்துக் கொண்டு சமையலறைக்குச் சென்றேன். சில நிமிடங்கள் தேடுதலுக்குப் பின்னர், உப்பு டப்பாவை கண்டு பிடித்தேன். அதை திறந்து பார்க்க, அதில் ஒரு சிட்டிகை உப்புக் கூட இல்லை.

‘இதுல உப்பு இல்லையே, என்ன பண்றது?’ என்று எண்ணிக் கொண்டே, உப்பு பொட்டலம் எங்காவது இருக்குதா? என்று தேடினேன். என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆனால், ஒரு ஜாடியில் கல் உப்பு இருந்ததைக் கண்டேன்.

‘சரி, கல் உப்பு இருக்கே’ என்று நினைத்துக் கொண்டு, அதில் சிறிதளவு எடுத்து மோரில் போட்டேன். ஒரு கரண்டி எடுத்துக் கொண்டு மீண்டும் எனது அறைக்கு வந்தேன். கல் உப்பு இன்னும் கரையாமல் இருந்தது. அந்த கரண்டியால் மோரை கலக்கிக் கொண்டிருந்தேன்.

“சார், தூள் உப்பு இல்லையா? கல் உப்பு போட்டிருக்கீங்க” என்ற குரல் ஒலித்தது.

மோரில் கலந்திருக்கும் நீர் தான் பேசியது.

“நீரா! எப்படி இருக்க?”

“ஆமாம் சார். நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?”

“ஊம்ம்… நானும் நல்லா இருக்கேன்.”

“நல்லது சார்”

“உன்ன பத்திதான் படிச்சுக்கிட்டு இருக்கேன்.”

“என்ன பத்தியா?”

“ஆமாம். உலர்ந்த திடப்பொருட்கள்லையும் நீ இருக்கியே. அதப்பத்திதான் படிச்சிக்கிட்டு இருக்கேன்.”

“புரியலையே, கொஞ்சம் விவரமா சொல்லுங்களேன்.”

“நீ படிக உப்புக்கள்ல இருக்கிறல, அததான் சொன்னேன்.”

“ஓ, அதுவா. சரி, படிகப் பொருட்கள்லையும் நான் இருக்கேனே. இதுபத்தி உங்க அறிவியல் பார்வையில் சொல்லுங்களேன்.”

“நிச்சயமா சொல்றேன். பொதுவாக திடப் பொருட்கள இரண்டு பிரிவா அறிவியல் உலகம் பிரிச்சிருக்கு. ஒன்று படிக திடப்பொருள். சமையல்ல பயன்படுத்துற சாதரண உப்பு, படிக உப்புக்கு உதாரணமா சொல்லலாம்.

இரண்டாவது, படிகமற்ற திடப்பொருள். இதுக்கு கண்ணாடி ஒரு சிறந்த உதாரணம்.

உலர்ந்த படிக உப்புக்கள்ள நீ இருக்கும் போது உன்ன, ‘படிக நீர்’ அப்படீன்னு சொல்லுவோம்.”

“அப்படியா, எனக்கு படிக நீர் அப்படீன்னு இன்னொரு பேரும் இருக்கா?”

“ஆமாம்”

“சரி சார். உங்களுக்கு தெரியுமா? படிக உப்புக்கள் உருவாகும்போதே அவற்றுள்ள நானும் சேர்ந்திடுவேன். அதனால ஒரு திடப்பொருள் ஈரமா இருந்தா மட்டும் தான் நான் அதுல இருப்பேன்னு அர்த்தமில்ல. நீங்க சொன்னா மாதிரி உலர்ந்த உப்புக்கள்லையும் நான் இருப்பேன்.”

“ஆமா, நீ சரியா சொன்ன. அத்தோட இன்னொரு செய்தியும் இருக்கு. அந்தப் படிக உப்புக்கள சூடுபடுத்தினா போதும், படிகநீர் ஆவியாகி வெளியேறிடும்.”

“ஓ, அப்படியா!”

“ஆமா, இதுக்கு நல்ல உதாரணம் மயில் துத்தம் தான். ஆங்கிலத்துல Copper(II) sulfate pentahydrate அப்படீன்னு சொல்லுவோம். Penta –னா ஐந்துன்னு அர்த்தம். Hydrate –ன்னா நீருன்னு அர்த்தம்.

இந்த Copper(II) sulfate pentahydrate படிக உப்பு, நீல நிறம் கொண்டது. நீல நிறத்துக்கு முழுமுதற் காரணம் நீ தான். அதாவது ஐந்து படிக நீர் மூலக்கூறுகள் Copper(II) sulfate ல இருக்கு. ஆனா இந்த படிக உப்ப சூடுபடுத்த, அதிலிருக்கும் படிக நீர் மூலக்கூறுகள் வெளியேறி நீரற்ற சேர்மத்தை கொடுக்கும். அதாவது வெறும் Copper(II) sulfate மட்டும் இருக்கும். இது வெளிர் பச்சை அல்லது சாம்பல் வெள்ளை நிறத்துல இருக்கும்.”

“சரிதான், என்னபத்தி உங்க அறிவியல் உலகம் சரியாதான் புரிஞ்சு வச்சுருக்கு.”

“நல்லது. அறிவியலுக்காக உழைச்ச விஞ்ஞானிகளுக்குதான் எல்லா பெருமையும் சேரும்.”

“ஆமாம் சார், உங்களுக்கு தெரியுமா? நான் கனிம படிக உப்புக்கள விட, புரத படிகங்கள்ல அதிக அளவு இருப்பேன்.”

“ஆமாம் ஆமா, இத அறிவியல் ஆராய்ச்சியாளர்களும் கண்டு பிடிச்சிருக்காங்க.”

“சிறப்பு சார். நான் படிக உப்பா இருக்குறதால உங்களுக்கு ஏதாச்சும் பயன் இருக்கா?”

“என்ன இப்படி கேட்டுட்டே? படிக நீரால பயன் இருக்கு. இப்பகூட அது சார்ந்த ஒரு கண்டுபிடிப்ப விஞ்ஞானிகள் நிகழ்த்தியிருக்காங்க.”

“அப்படியா, அத சொல்லுங்களேன்.”

“சொல்றேன். பல தொழிற் சாலைகளில் உணர்விகள் பயன்படுத்தப்படுது. ஆங்கிலத்துல sensor என்று அழைக்கப்படும் இந்த உணர்வி, ஒரு கருவி தான். இது ஒரு பொருள கண்டறிஞ்சு சொல்லக் கூடியது.

உதாரணத்துக்கு நச்சு தன்மை கொண்ட வாயுக்கள கண்டறிவதற்குன்னு பிரத்யேக உணர்வி இருக்கு. அந்தவகையில, ஈரப்பத உணர்வில பயன்படக்கூடிய உலோக-கரிம படிக கட்டமைப்புச் சேர்மத்தை சுகுபா பல்கலைக்கழக (University of Tsukuba) விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சிருக்காங்க.

அவங்க தயாரிச்சிருக்கும் அந்த புதிய படிகப் வேதிப்பொருள் மஞ்சள் நிறத்துல இருக்கு. அத்தோட இந்தச் சேர்மத்துல நீர் மூலக்கூறுகள் இருக்காது. ஆனா, ஈரப்பதம், அதாவது வாயுநிலை நீர் மூலக்கூறுகள் இந்த உலோக-கரிம படிக சேர்மத்தோட சேரும் போது, அது சிவப்பு நிறத்துல மாறிடுது.

இந்த பண்பை பயன்படுத்தி ஈரப்பதத்தை எளிதுல கண்டறியக் கூடிய உணர்வீய குறைந்த விலையில தயாரிக்க முடியுமுன்னும் நம்பராங்க.”

“சிறப்பு சார். சரி, உப்பு கரைஞ்சிடிச்சு. நீங்க மோர் குடிச்சிட்டு உங்க வேலைய பாருங்க. நாம வேற ஒரு சந்தர்ப்பத்துல சந்திப்போம்.” என்றுக் கூறி நீர் புறப்பட்டது.

நான் மோர் குடித்துக் கொண்டே படிக பொருட்கள் தொடர்பான மேற்கோள்களை படிக்கத் தொடங்கினேன்.

(உரையாடல் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com

இதைப் படித்து விட்டீர்களா?

நீருடன் ஓர் உரையாடல் 6 – நீரின் உறைதிறன்

நீருடன் ஓர் உரையாடல் 8 – கடின நீர்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.