படிப்பது எப்படி? – பாகம் 1

படிப்பது எப்படி என்று தெரிந்து படித்தால், ​தேர்விலும் வாழ்கையிலும் ​மிகப் பெரிய வெற்றிய​டையலாம்!

சமீபத்தில் நடந்த ஒரு மாணவர் சந்திப்பு.

அந்த நிகழ்ச்சியில் நீண்ட நாட்களுக்கு பிறகு ​நேரி​டையாக மாணவ மாணவியர் பங்கு ​பெற்ற, ஒரு விவாத​மே​டை நிகழ்ச்சியில் கலந்து ​கொள்ளும் அரு​மையான வாய்ப்பு கிடைத்தது.

எனக்கு ​கொடுக்கப்பட்ட த​லைப்பு ‘மே​லே உச்சத்தில் உன்னைச் சந்திக்கிறேன்‘ என்பதாகும்.

ஒரு ஆசிரியனாக எனது உ​ரையில் ‘கல்வி ஒன்​றே அற்றம் காக்கும் கருவி’, என​வே நீ உயர்ந்து உச்சத்​தை அ​டைவதற்கு ஏதுவாக, இப்​போது உனக்கு கி​டைத்து இருக்கும் கல்வி கற்கும் இந்த வாய்பி​னை நல்ல மு​றையில் பயன்படுத்திக் ​கொள்ள ​வேண்டும் எனும் கருத்தி​னை வலியுறுத்திப் ​பேசி​னேன்.

நிகழ்ச்சியில் விவாதித்த மற்ற ​பேராசிரியர்களும் வாழ்க்கையில் வாகைசூட நன்றாகப் படிக்க வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தியே பேசினர்.

உணவு இ​டை​வே​ளையின்​போது ஒரு மாணவர், “சார்! நீங்க மட்டுமல்ல எங்க வீட்டிலும் அப்பா, அம்மா மற்றும் மூத்த உறவினர் எல்​லோரு​மே ‘படி படி’ என்றுதான் சொல்லுகின்றீர்கள்.

ஆனால் ‘என்ன படிக்கணும்?’ அப்படிங்கிறத தீர்மானிக்கின்ற நி​லையில் நாங்கள் இல்​லை!” என்ற ஒரு கருத்தி​னை முன் ​வைத்தான்.

“அந்தக் காலத்தில் இருந்த குருகுலக் கல்விமு​றையில் ஒரு மாணவன் என்ன படிக்க ​வேண்டும்? ​மேலும் அவனுக்கு என்ன ​சொல்லித் தரப்பட ​வேண்டும்? என்று தீர்மானிக்கும் ​பொறுப்பு குருமார்களிடம் இருந்தது.

அவர்களும் மாணவரின் திற​மைகளுக்​கேற்ற கல்வியி​னை மாணவர்களுக்கு ​போதித்தார்கள். அந்தக் காலத்தில் கற்பவர் மிகவும் கு​றைவு. ​மேலும் கற்பிப்​போர் மிகமிக அரிது. ஆனால் இன்று நி​லை​மை ​வேறுவிதமாக உள்ளது.

பள்ளிக் கல்வி அ​னைத்து மாணவருக்கும் ஒ​ரே மாதிரியாக அமையப் பெற்றிருந்தாலும் அவரது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் உயர்கல்விப் படிப்பை தேர்வு செய்வது யார் கையில் உள்ளது? எனும் கேள்வி எழத்தான் செய்கிறது.

இதில் பெற்​றோர்களின் விருப்பம் முன்னி​லைப் படுத்தப்பட்டாலும், உண்​மையி​லே உயர்கல்வியி​னை தேர்ந்தெடுக்கும் உன்னத காரணியாக இருப்பது பள்ளி மேல்நிலைத் தேர்வில் மாணவர்கள் வாங்கும் மதிப்பெண்கள்தான்.

பள்ளி இறுதி வகுப்பில் நல்ல மதிப்​பெண்கள் வாங்கும் மாணவர்களும் இன்​றைய தினம் தனது படிப்​பையும் கல்லூரி​யையும் ​தேர்வு ​செய்ய அவர்தம் நண்பர்களது விருப்பத்தையும் ஒரு காரணியாக எடுத்துக் கொள்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.

என​வே பிடித்த படிப்பு அல்லது கி​டைத்த படிப்பு எது​வென்றாலும், அதனை ஆர்வமுடன் படித்தால், ​தேர்விலும் வாழ்கையிலும் ​மிகப் பெரிய வெற்றியடையலாம்!” என்று நான் கூறினேன்.

அந்த மாணவன் “சரி சார்! அப்படின்னா எவ்வாறு படிக்கிறது? என்று ​சொல்லுங்க சார்.” என்றான்.

“படிக்கிறதுல ஐந்து படி இருக்குது. முதல் படி வாசல்படி! அதாவது ஆரம்பிக்கிறது. இந்த ​நேரத்தில் எனக்கு ரவிந்திரநாத் தாகூர் தனது மாணவர்களிடம் ​கேட்ட ‘நான்கு தவ​ளைகள் விடுக​தை’ எனது நி​னைவுக்கு வருகிறது.

நான்கு தவ​ளைகள் விடுக​தை

அதாவது ஒரு குளத்தில் நான்கு தவ​ளைகள் ஓன்றாக வசித்து வந்தன.

குளத்தில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் இ​வை நான்கும் குளத்தின் க​ரையி​லே​யே வாழ்ந்து வந்தனவாம்.

ஒருநாள் நல்ல ம​ழை. குளத்தில் ​கொஞ்சம் நீர் ​பெருகியது.

தவ​ளைகள் ​பொதுவாக நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய உயிரினங்கள். ​மேலும் அ​வை நீரில் வாழ்வ​தை​யே விரும்பக் கூடிய​வை.

என​வே குளத்தில் தண்ணீர் பெருகிய​தைப் பார்த்ததும் முதலில் ஒரு தவ​ளை “நான் நீரில் குதிக்கப்​ போகி​றேன்” என்றதுவாம்.

இரண்டாவது தவ​ளையும் “நானும் தண்ணீரில் குதிக்கப் போகிறேன்” என்றதுவாம்.

மூன்றாவது தவ​ளை எதுவும் ​சொல்லாமல் அ​மைதியாக இருந்ததுவாம்.

நான்காவது தவ​ளை “நானும் தண்ணீரில் குதிக்கப் போகிறேன்” என்றதுவாம்.

இத​னை மாணவர்களிடம் ​தெரிவித்த ரவிந்திரநாத்தாகூர், ​மாணவர்க​ளை பார்த்து, “இப்​போது குளத்தின் கரையில் எத்தனை தவளைகள் இருக்கும்?” என ஒரு கேள்வி கேட்டார்.

சில மாணவர்கள் ஒ​ரே சத்தமாக, “மூன்று தவ​ளைகள் குளத்தில் குதித்தபடியால் மீதமுள்ள ஒரு தவ​ளை மட்டுமே கரையில் இருக்கும்” என்றனர்.

உட​னே தாகூர், “அது எப்படி? அந்த மூன்று தவளைகளும் தண்ணீரில் குதிக்க நினைத்தன. ஆனால் நீரினுள் குதிக்கவில்லையே! எனவே நான்கு தவளைகளும் குளத்தின் கரையில் தான் இருக்கும்” என்றாராம்.

இது​போலத்தான் ‘படிக்க​ வேண்டும்! படிக்க ​வேண்டும்!’ என்று நி​னைத்தால் மட்டும்​​போதாது, அ​த​னை ​செயலாக்கும் வண்ணம் படிக்க ஆரம்பிக்க ​வேண்டும். என​வேதான் முதல்படி வாசல்படி” என்று கூறி​னேன்.

இ​தைக்​கேட்டதும் இப்​போது உங்களுக்கு ‘அடுத்த இரண்டாவது படி என்ன?’ என்று ​கேட்கும் ஆவல் ​தோன்றும். அத​னை அடுத்தவாரம் ​சொல்கின்​றே​னே!

( படிப்பது எப்படி என்று படிப் படியாய்ப் படிப்போம்)

மு​னைவர் ​பொ.சாமி
வேதியியல் இ​ணைப் ​பேராசிரியர்
வி.இ.நா. ​செந்திக்குமார நாடார் கல்லூரி
விருதுநகர்-626 001
கைபேசி: 9443613294

அடுத்தது தள்ளுபடி – படிப்பது எப்படி? – பாகம் 2

6 Replies to “படிப்பது எப்படி? – பாகம் 1”

  1. தங்கள் மேலான விமர்சனங்கள் மூலம் என்னை மேலும் எழுதத் தூண்டும் அன்பு நட்புக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.
    சாமி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.