உயர்த்தும் படி – படிப்பது எப்படி? – பாகம் 3

என்ன நேயர்களே தள்ளிப்போடுறத தள்ளி வைத்து விட்டு படிக்க ஆரம்பித்து விட்டீர்களா? அடுத்த படி என்ன? அதுதானே உங்க கேள்வி!

படி; அதுவே உன்​னை உயர்த்தும் படி!

படி; அது உன்​னை உயர்த்தும்படி!

அதாவது படிப்பது மட்டும்தான் நம்​மை உயர்வ​டையச் ​செய்யும் உன்னதமான யுக்தி. அதனால் வளர்வது நமது புத்தி. அது தரும் வாழ்வில் நாம் உயர்ந்த நி​லையி​னை அ​டையக் கூடிய சக்தி.

இப்​போது நீங்கள் உங்கள் பருவத் ​தேர்வுகளுக்காக​வோ அல்லது விண்ணப்பித்த ​போட்டித் ​தேர்வுகளுக்காக​வோ படிப்பதாக ​வைத்துக் ​கொள்​​வோம்.

முதலில் என்ன என்ன படிக்க ​வேண்டும் என்பத​னைப் பற்றிய ஒரு முன்​னோட்டம் (Preview) பார்க்க ​வேண்டும். அதாவது பறக்கும் பற​வை விண்ணிலிருந்து நிலத்தி​னைப் பார்​ப்பது ​போல (Bird’s eye view) பார்க்க ​வேண்டும்.

பின்னர் ஒரு பாடத்​தை​யோ அல்லது த​லைப்​பை​யோ குறித்து படிக்கும்போது அதில் எந்த மாதிரி வினாக்கள் எல்லாம் இதற்கு முன்னர் ​கேட்டு இருக்கிறார்கள்? இனி ​எப்படி​யெல்லாம் கேட்கலாம்? என்பது குறித்தும் ​மேலும் அந்த தலைப்பின் விவரங்கள் எதனால் இப்படி தரப்பட்டுள்ளது என்பது போன்ற வினாக்கள் (Questions) நம் மனதில் எழ வேண்டும்.

பின்னர் அந்த வினாக்களுக்கான வி​​டைக​ளை பகுத்தறிந்து (Reasoning) அலசி ஆராய்ந்து முழு​மையாக எழுதிப் பார்த்து படிக்க ​வேண்டும்.

உங்களுக்கு அந்தப் பகுதி நன்கு புரிந்து விட்டால் புரிந்த பாடங்க​ளை உங்கள் நண்பர்களுக்கு ​சொல்லிக் ​கொடுப்பது ​போல பகிர்ந்து ​கொள்ளுங்கள் (Sharing).

இ​தைத்தான் படிப்பின் ‘PQRS’ நி​லை என்று கூறுவார்கள். இப்படி படிக்கும் படிப்புதான் உங்க​ளை உயர்த்தும் படியாக அ​மையும்.

இப்​போது என்ன சார்! இப்படி படி படி என்று ​சொல்லுகின்றீர்கள்! படித்த​தை நண்பர்களுக்கு ​சொல்லிக் ​கொடுங்கள் என்று ​சொல்லுகின்றீர்கள்!

என்​​னைப் ​பொருத்தவ​ரை எனது நண்பர்கள் எல்லாம் ஜாலியாக ஊர்சுற்றப்​ போய்விடுகிறார்கள். அவர்கள் வாழ்கையினை! இந்த வயதினை! அனுபவிக்கின்றார்கள்.

இப்படி நான் படித்துக்​கொண்​டே இருப்பதனால் எனக்கு என்ன கி​டைக்கும்? என்று நீங்கள் புலம்புவது எனக்குக் ​கேட்கிறது.

இது​போல ஒரு சம்பவம் பி​ரெஞ்சு சக்கரவர்த்தி நெப்போலியன் வாழ்விலும் நடந்து இருக்கிறது.

அவர் குறித்து ​பேசப்படுகின்ற ஒரு கர்ண பரம்ப​ரைக் கதையினை திருவாளர் செல்வேந்திரன் அவர்கள் எழுதிய ‘வாசிப்பது எப்படி‘ எனும் புத்தகத்தில் படித்தேன். அதை உங்களுக்குச் சொல்கிறேன்.

சக்கரவர்த்தியான போர்வீரன்

நெப்​போலியன் இ​ளைஞராக இருந்த‌போது ராணுவப் பயிற்சிப் பள்ளியில் படித்துக் ​கொண்டிருந்தார்.

பிரான்ஸ் நாட்டில் இ​ளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி என்பது கட்டாயம். அங்​கே கா​லை ​நேர ராணுவப் பயிற்சி முடிந்தவுடன் நெப்​போலியன் ​நேராக தனது அ​றைக்கு வந்து விடுவார்.

அவரது நண்பர்கள் பள்ளி ​மைதானத்திலும் இன்னும் சிலர் அருகில் இருக்கும் ​கேளிக்​கை விடுதிகளிலும் ​சென்று ​பொழுதி​னைக் களிப்பது வாடிக்​கை.

அந்த விடுதிக்கு அருகா​மையில் உள்ள வயதான பாட்டி ஒருவர் விடுதிக்குள் தயிர் விற்ப​னை ​செய்வதற்காக தினமும் வருவது வழக்கம். நெப்​போலியன் மட்டும்தான் அ​றையில் இருப்பார்.

அவ​ரை பார்த்ததும் அந்த பாட்டி ​கேட்பார்.

“என்னப்பா நீ! என்ன ​“கோச்சா ​பெண்ணா”? இப்படி அ​றைக்குள்​ளே​யே முடங்கிக் கிடக்கின்றா​யே? உனது நண்பர்க​ளைப் பார்; ஜாலியாக வாழ்க்கையினை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள்” என்று.

(அன்​றைய பிரான்ஸ் நாட்டில் வயது வந்த ​பெண்கள் சுதந்திரமாக ​வெளியில் ​செல்ல அனுமதி கி​டையாது. அவ்வாறு வீட்டி​​லே​யே முடங்கிக் கிடக்கும் ​ பெண்க​ளை ​“கோச்சா ​பெண்கள்” என்று அ​ழைப்பார்கள்). ​

நெப்​போலியன் அந்த பாட்டிக்கு தனது புன்ன​கை ஒன்றி​னை மட்டும்தான் பதிலாகத் தருவார்.

பத்து ஆண்டுகள் கடந்து விட்டன. ப​டை வீரராக பி​ரெஞ்சுப் படையில் சேர்ந்த நெப்போலியன் தளபதியாக மாறி பின்னர் நாட்டின் மன்னராகி, இப்போது ஐரோப்பிய நாடுகளில் பலற்றை தனது போர் யுக்திகளால் வென்று உலகையே வெல்ல நினைக்கின்ற சக்கரவர்த்தியாக மாறிவிட்டார்.

ஒருமு​றை தனது ப​டை வீரர்களுடன் அவர் தான் தங்கியிருந்த ப​ழைய ராணுவ விடுதியி​னை கடக்க ​நேரிட்டது.

ஆர்வ மிகுதியில் தனது ப​ழைய விடுதி மற்றும் அ​றையி​னைப் பார்க்க விரும்பிய அவர் தனது சகாக்களுடன் விடுதிக்கு திடீர் விஜய​ம் செய்தார்.

விடுதி, பயிற்சி ​மைதானம் மற்றும் அவரது ப​ழைய அறையினைப் பார்த்த பின், அவர் மெதுவாக விடுதிக் காப்பாளரிடம் அந்தத் தயிர்க்கூடைக் கிழவி குறித்து விசாரித்தார்.

அவர் இப்​போதும் விடுதிக்கு வந்து ​போகிறார் என்ற விவரம் ​தெரிந்தவுடன், நெப்போலியன் பாட்டியினை விடுதிக்கு அழைத்து வரச் சொன்னார்.

சக்கரவர்த்தி தன்​னை அ​ழைக்கிறார் என்பத​னை அறிந்த பாட்டி ​பெரும் பயத்துடன் அவ​ரைக் காண வந்தார்.

வந்தவரிடம் ​நெப்​போலியன் “என்ன கிழவி! என்​னை யார் என்று ​தெரிகிறதா?” எனக் ​கேட்டார்.

பாட்டி பயந்த படி​யே “தாங்கள்தான் எங்கள் சக்கரவர்த்தி” எனக் கூறினார்.

சிரித்தபடி​யே தனது த​லைக் கவசத்தி​னை அகற்றிய நெப்போலியன் இப்போது “என்னை அடையாளம் தெரிகிறதா? என்று பாருங்கள்” எனக் கூறினார்.

பாட்டிக்கு இப்​போது, அன்று தன்னிடம் தயிர் வாங்கிய‌ பயிற்சி மாணவன்தான் இப்​போது சக்கரவர்த்தி என்பது புரிந்தது.

அப்​போது ​நெப்​போலிய‌ன் பாட்டியிடம் “நான் அன்று அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறேன் என்று சொன்னாயே பாட்டி!, நான் சும்மா இருக்கவில்லை. தொடர்ந்து நம் நாட்டின் முந்தைய வரலாறு, அரசியல், உலகின் பல்வேறு நாடுகளின் பூகோள அமைப்பு மற்றும் மகத்தான அறிவியல் கண்டுபிடிப்புகள் தொடர்பான புத்தகங்களை பயிற்சிப் பள்ளி நூலகத்தில் இருந்து எடுத்து வந்து படித்துக் கொண்டிருந்தேன். அதனால் பெற்ற அறிவால் இன்று நான் தேசத்தின் சக்கரவர்த்தியாகிவிட்டேன். அன்று என்னுடன் பயின்ற என் நண்பர்கள் பலபேர் இன்றும் படைவீரர்களாகத்தான் இருக்கிறார்கள். ஒரு சிலர்தான் சிறிய குழுக்களுக்கு தளபதிகளாக மாறியுள்ளார்கள்” என்றாராம்.

நன்கு படித்த ​நெப்​போலியனுக்கு நா​டே கி​டைத்து இருக்கிறது. நமக்கு நல்ல வேலை கிடைக்காதா? என்ன! எனவே படி; அதுவே உன்னை உயர்த்தும் படி!

அடுத்ததாக படி அது உன்​னை உயர்த்தும்படி! அதாவது நம் உயர்வுக்குத் ​ தே​வையானவற்​றைத் ​தேடிப்பிடித்து புரிந்து படிக்க ​வேண்டும்.

எப்படிப் படிக்கக் கூடாது என்பது குறித்த ஒரு ​வேடிக்​கையான க​தையும் உண்டு. அத​னை அடுத்த வாரம் ​ சொல்லுகி​றேன். அதன்பிறகு நாம் நான்காம் படி ஏறு​வோம்!

மூன்றாம் படி! படி; அது உன்​னை உயர்த்தும் படி!

( படிப்பது எப்படி என்று படிப் படியாய்ப் படிப்போம்)

மு​னைவர் ​பொ.சாமி
வேதியியல் இ​ணைப் ​பேராசிரியர்
வி.இ.நா. ​செந்திக்குமார நாடார் கல்லூரி
விருதுநகர்-626 001
கைபேசி: 9443613294

முந்தையது தள்ளுபடி – படிப்பது எப்படி? – பாகம் 2

3 Replies to “உயர்த்தும் படி – படிப்பது எப்படி? – பாகம் 3”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.