படைப்புத் திறனும் ஏற்புக் கோட்பாடும் புத்தகத்தை படிக்க நான் நீண்ட நாட்கள் எடுத்துக் கொண்டேன்.
ஒரே மூச்சில் படித்து முடிக்க, இது ஒரு நாவலோ வரலாற்றுக் கதையோ காதல் கவிதைகளோ அல்ல.
எழுத்தாளர் பாரதிசந்திரன் அவர்கள் எழுதிய இந்த நூலில் பல்வேறு திசைகளில் இருந்தும் திரட்டப்பட்ட பல்வேறு அறிவார்ந்த விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
24 தலைப்புகளில், 24 கோணங்களில், 24 வெவ்வேறு தளங்களில் அதே சமயம் ஒன்றோடு ஒன்று சம்பந்தமில்லாத, ஒரு ஆராய்ச்சிக் கட்டுரைத் தகவல் திரட்டாக இந்தப் புத்தகம் எனக்கு ஒரு புதிய பரிணாமத்தைத் தந்துள்ளது.
இதில் என்னுடைய கவிதை ஒன்றும் அடக்கம்.
எனக்கும் இந்த நூலாசிரியருக்கும் மிகவும் பிடித்தமான கவிஞர் அமீர்ஜானின் கவிதைகள் இங்கே சிலாகித்துச் சொல்லப்பட்டுள்ளன.
அவர் மறைந்து விட்டாலும் அவர் படைப்புகள், அவரால் வசப்பட்ட என்னைப் போன்றோர்களுக்கு அவர் நினைவுகளைக் கொட்டிச் செல்கின்றன.
கண்டம் விட்டுக் கண்டம்
நான் ஏதோ கவிதைகள் பற்றிய விமர்சனம் மட்டும்தான் என்று ஓரிரு பக்கங்கள் படிக்கும் போது நினைத்தேன்.
ஆனால் உள்ளே படிக்கப் படிக்க அது என்னைக் கண்டம் விட்டுக் கண்டம் கடத்திக் கொண்டுப் போய் விட்டது.
“நீ எனக்கு முதல் குழந்தை, இரண்டாம் தாய், கடைசி காதலி”
என்ற வரிகளை நவீன படைப்பின் சிகரமாக, அயலகத் தமிழர்களின் இணையதள இலக்கியப் படைப்புகள் தலைப்பில் உலகத் தமிழர்களின் படைப்புகளை விவரிக்கிறார் பாரதிசந்திரன்.
அவர் மலையாளத் திரைப்படத்தைப் பேசுகிறார்.
அடுத்து ஆதிசங்கரரின் அத்வைதம் பேசுகிறார்.
இஸ்லாமியச் சிந்தனைகளையும் அவர் விட்டு வைக்கவில்லை; தர்கா வழிபாடு பற்றித் திறனாய்வு செய்கிறார்.
உலகப் பொதுமறை திருக்குறளையும் அதன் பொருட்டு கட்டமைக்கப்படும் சமூகக் கட்டுப்பாடும் இந்நூலில் விளக்கிச் சொல்லப்படுகிறது.
நாராயணகவி பாடல்களில் மனித மேம்பாட்டுச் சிந்தனைகள் இங்கே மிக அர்த்தம் நிறைந்த தொனியில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு நிற்கவில்லை; காப்பியங்களில் அறிவியல் எங்ஙனம் கையாளப்பட்டிருக்கிறது? என்று பாரதிசந்திரன் அழகாக விளக்குகிறார்.
அறிவியல் முடிந்தது. அடுத்து சுற்றுப்புறச் சூழலை, அங்கே நடக்கும் பிரச்சினைகளை அதற்கான தீர்வுகளை அவர் விவாதிக்கிறார்.
காடு, மலை, காற்று என்று எதையும் விடவில்லை; அவர் கரும்பு வேளாண்மை பற்றியும் இனிக்க இனிக்கச் சொல்லியிருக்கிறார்.
கடைசியில் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் தமிழ்ப்பணியோடு இந்த ஏற்பு இலக்கியம் முடிவுக்கு வருகிறது.
இவ்வளவு தகவல்களையும், அதுவும் பன்முக தன்மைகொண்ட தகவல்களை ஒரே புத்தகமாக்கி நமக்குக் கொடுத்து இருப்பது, நூலாசிரியரின் ஆளுமைக்குச் சரியான சான்று.
படைப்புலக பார்பிக்யூ
என் அன்பு இளவல் முனைவர் பாவலன் இந்தப் புத்தகத்தைப் படித்து, நீண்டதொரு ஆய்வைச் செய்து, அதை விவரித்து கிட்டத்தட்ட எல்லாவற்றையும் சொல்லி விட்டார்.
அவர் அளவுக்கு என்னால் ஆழ உழவு செய்ய இயலவில்லை. ஆனால் நான் ஒரு வாசகன் என்ற படியில் நின்று பார்க்கும்போது எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது.
சென்னைத் தியாகராய நகரில் “பார்பிக்யூ” என்றொரு ஹோட்டல் இருக்கிறது. அங்கே ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி விட்டால், சைவமோ அசைவமோ, இந்த உலகத்தில் இருக்கிற எல்லா உணவு வகைகளையும் நாம் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம்.
அதுபோல இந்த ஒரு புத்தகம் வெவ்வேறு சுவை கொண்ட வெவ்வெவேறு கலாச்சார பின்னணியைக் கொண்ட அளவற்ற உணவைப் பரிமாறிச் செல்கிறது.
ஒவ்வொன்றுக்கும் ஒரு புத்தகத்தைத் தேடாமல், அத்தனை கருத்துக்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, தன்னுடைய கடும் உழைப்பால் பாரதிசந்திரன் இந்தப் புத்தகத்தை மிளிரச் செய்கிறார்.
இந்தப் புத்தகத்திற்காக இவர் படித்து, குறிப்பெடுத்த புத்தகங்களின் பெயரை மட்டும் தொகுத்தாலே அது ஒரு தனிப் புத்தகமாக வந்துவிடும்.
நூலாசிரியரின் உழைப்புக்குத் தலைவணங்கி, நாம் அனைவரும் அவரை சிறப்பிக்க வேண்டும்.
படைப்புத் திறனும் ஏற்புக் கோட்பாடும் புத்தகம் கட்டாயம் எல்லோரும், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகம்.
முனைவர் க.வீரமணி
சென்னை
கைபேசி: 9080420849
Comments
“படைப்புத் திறனும் ஏற்புக் கோட்பாடும் – புத்தக மதிப்புரை” அதற்கு 2 மறுமொழிகள்
பேராசிரியரின் மதிப்புரை- நூல் படிக்க வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டுகிற வண்ணம் அமைந்து சிறக்கிறது. நல்ல வளமான சொல்லாடலைப் பயன்படுத்தி இக்கட்டுரையை அவர் படைத்துள்ளார். அவருக்குப் பாராட்டுகள்.
சென்னைத் தியாகராய நகரில் “பார்பிக்யூ” என்றொரு ஹோட்டல் இருக்கிறது. அங்கே ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி விட்டால், சைவமோ அசைவமோ, இந்த உலகத்தில் இருக்கிற எல்லா உணவு வகைகளையும் நாம் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம்.
அதுபோல இந்த ஒரு புத்தகம் வெவ்வேறு சுவை கொண்ட வெவ்வெவேறு கலாச்சார பின்னணியைக் கொண்ட அளவற்ற உணவைப் பரிமாறிச் செல்கிறது.
ஒன்றைச் சொல்ல வந்தவர் எவ்வளவு அழகாக இன்னொன்றோடு ஒப்புமைப்படுத்திக் கூறி இருக்கிறார் பாருங்கள். அழகு! அழகு!
வாழ்த்துகள் பேராசிரியர் அவர்களே!
அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்!