ஒருநாள் ஒரு சிறுமி தன் தகப்பனிடம் வந்து, “அப்பா நான் பட்டம் விட்டு விளையாடப் போகிறேன்; நீங்களும் வாங்க” என அழைத்துக் கொ ண்டு வீட்டின் மாடிக்கு சென்றாள்.
பட்டத்தை நூலில் கட்டி பறக்கவிட்டு மகிழ்ந்தாள்.
அந்த சிறுமி அவள் அப்பாவிடம் “அப்பா, பட்டம் மேலே பறக்க பறக்க அழகாய் இருக்கிறது. ஆனால் அதன் விருப்ப ம் போல இன்னும் மேலே பறக்க முடியவில்லை. அதற்கு தடையாய் இருப்பது இந்த நூல் தான் அப்பா. அது தான் பட்டத்தை மேலும் உயரே விடாமல் கட்டி வைத்திருக்கிறது” என்று சொன்னாள்.
அவளின் அப்பா, “நூல் தான் பட்டத்தை மேலும் உயரே விடாமல் தடை செய்கிறதா” எனக் கேட்டுவிட்டு அந்த நூலை அப்படியே அறுத்து விட்டார்.
நூலிலிருந்து விடுபட்ட பட்டமும் தன் இஷ்டப்படி பறந்தது. ஆனால் கொஞ்ச நேரம் தான் அதனால் பறக்க முடிந்தது. அதன்பின் கிழிந்த காகிதமாய் கீழே விழுந்தது.
நூலை அறுத்து விட்டால் பட்டம் விடுதலை பெற்று தன் இஷ்டப்படி நன்கு பறக்கும் என்று நினைத்த சிறுமி குழப்பம் அடைந்தாள்.
நடந்த செயலுக்கு விளக்கம் கேட்டு அவள் அப்பாவை நோக்கினாள்.
அப்பா சொன்னார் “நூல் பட்டத்தைக் கீழே இழுக்கவில்லை. மாறாக அதுதான் பட்டம் உயரே பறக்க உதவி செய்தது. பட்டம் எவ்வளவு உயரம் சென்றாலும் தன்னுடைய கட்டுப்பாட்டை அது இழந்து விடாமல் தொடர்ந்து முன்னேற நூல்தான் உதவி செய்தது.”
நூல் பட்டத்தைக் கீழே இழுப்பதுபோல் தோன்றினாலும் உண்மையில் அதுதான் பட்டம் மேலே இருப்பதற்கான காரணம்.
பட்டம் என்பது நமது வாழ்க்கையின் உயரம். நூல் என்பது ஒழுக்கம்.
ஒழுக்கமும் கட்டுப்பாடும் இல்லையென்றால் நாம் விரைவில் உயர்ந்து விடலாம் என்று நாம் எண்ணுகிறோம்.
ஒழுக்கமும் கட்டுப்பாடும் நூல் போல இருந்து நம்மை இயக்கும் வரையில்தான் நம் வாழ்வில் வானில் பறக்கும் பட்டம் போன்ற உயரம் இருக்கும்.
ஒழுக்கத்தை நாம் உதறிவிட்டால் நூல் அறுந்த பட்டம் போல் நாமும் வாழ்க்கையில் வீழ்ச்சி அடைந்து விடுவோம்.
அன்பு மகளே, உனக்கு இனிமையாய்த் தோன்றுகின்ற வழிகள் ஏராளம் இருக்கலாம், ஆனால் அவற்றின் முடிவு பயங்கரமாயிருக்கும்.
ஒழுக்கத்தின் வழி சற்றுக் கடினமாக இருந்தாலும் அதுதான் நீடித்த வெற்றிக்கான வழி. இதுதான் பட்டம் சொல்லும் பாடம் என்றார்.
நீங்களும் பட்டம் சொல்லும் பாடத்தை மனதில் பதிய வைத்துக் கொண்டீர்கள்தானே.