பட்டர் பீன்ஸ் கிரேவி செய்வது எப்படி?

பட்டர் பீன்ஸ் கிரேவி அருமையான தொட்டுக் கறி ஆகும். இதனை எளிதாகவும், சுவையாகவும் செய்யலாம். விருந்து விழாக்களின் போதும் இதனைச் செய்து அசத்தலாம். பிரசர் குக்கரைப் பயன்படுத்தி எளிதாக சமைக்கலாம்.

புதிதாக சமைப்பவர்களும் இதனை சமைத்து அசத்தலாம். இதனை சாதம், சப்பாத்தி, தோசை ஆகியவற்றுடன் இணைத்து உண்ணலாம்.

இனி பட்டர் பீன்ஸ் கிரேவி செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பட்டர் பீன்ஸ் – 1/4 கிலோ கிராம்

கல் உப்பு – தேவையான அளவு

மசாலா தயார் செய்ய

தேங்காய் – 1/2 மூடி (சிறியது)

முந்திரிப் பருப்பு – 6 எண்ணம் (முழுப் பருப்பு)

கசகசா – 2 ஸ்பூன்

தாளிதம் செய்ய

நல்ல எண்ணெய் – 2 ஸ்பூன்

சின்ன வெங்காயம் – 2 எண்ணம்

பச்சை மிளகாய் – 4 எண்ணம் (நடுத்தர அளவு உடையது)

கறிவேப்பிலை – 2 கீற்று

உளுந்தம் பருப்பு – 1/2 ஸ்பூன்

கடுகு – 1/4 ஸ்பூன்

செய்முறை

முதலில் பட்டர் பீன்ஸை தோலுரித்து விதைகளை தனியே எடுக்கவும். பின் விதைகளை தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை தோலுரித்து சதுரங்களாக வெட்டவும்.

பச்சை மிளகாயை காம்பு நீக்கி அலசி நறுக்கிக் கொள்ளவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

தேங்காயை துருவிக் கொள்ளவும்.

மிக்ஸியில் தேங்காய் துருவல், முந்திரிப் பருப்பு, கசகசா, தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக மசால் தயாரித்துக் கொள்ளவும்.

தேங்காய், முந்திரி, கசகசா சேர்த்ததும்
தேங்காய், முந்திரி, கசகசா சேர்த்ததும்
மசால் தயார் செய்ததும்
மசால் தயார் செய்ததும்

பிரசர் குக்கரில் அலசிய பீன்ஸ் விதைகளைச் சேர்க்கவும்.

குக்கரில் சேர்த்ததும்
குக்கரில் சேர்த்ததும்

அதனுடன் அரைத்து வைத்துள்ள மசால் கலவையைச் சேர்க்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, சதுரமாக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து தாளிதம் செய்யவும்.

தாளிதம் செய்யும் போது
தாளிதம் செய்யும் போது

கடுகு வெடித்ததும் பிரசர் குக்கரில் சேர்த்து ஒருசேரக் கலந்து விடவும். பின்னர் தேவையான உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து ஒருசேரக் கிளறி குக்கரை மூடி விடவும்.

குக்கரை மூடும் முன்பு
குக்கரை மூடும் முன்பு

குக்கரில் ஒரு விசில் வந்ததும் அடுப்பினை சிம்மில் ஐந்து நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும்.

குக்கரின் ஆவி அடங்கியதும் குக்கரைத் திறந்து கிளறி விடவும். சுவையான பட்டர் பீன்ஸ் கிரேவி தயார்.

பட்டர் பீன்ஸ் கிரேவி
பட்டர் பீன்ஸ் கிரேவி

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் பச்சை மிளகாயை தேங்காயுடன் சேர்த்து அரைத்து கிரேவி தயார் செய்யலாம்.

விருப்பமுள்ளவர்கள் கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கி கிரேவியை இறக்கிய பின்பு சேர்க்கலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.