பட்டர் பீன்ஸ் கூட்டு செய்வது எப்படி?

பட்டர் பீன்ஸ் கூட்டு பீன்ஸ் விதைகளைக் கொண்டு செய்யப்படும் சுவையான உணவாகும். இதனை எளிதாக பிரசர் குக்கரில் செய்யலாம்.

புதிதாக சமையல் பழகுபவர்களும் இதனை சமைத்து அசத்தலாம்.

விருந்து மற்றும் விழாக்கால சமையலிலும் இக்கூட்டினை இடம்பெறச் செய்வது மிகப்பொருத்தமானது.

இனி சுவையான பட்டர் பீன்ஸ் கூட்டு செய்முறை பற்றிப் பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்

பட்டர் பீன்ஸ் – ¼ கிலோ கிராம்

கல் உப்பு – தேவையான அளவு

 

மசால் அரைக்க

சின்ன வெங்காயம் – 4 முதல் 6 எண்ணம் (மீடியம் சைஸ்)

தேங்காய் – ¼ மூடி (மீடியம் சைஸ்)

மல்லிப் பொடி – 1 ஸ்பூன்

மிளகாய் பொடி – ¾ ஸ்பூன்

சீரகப் பொடி – ½ ஸ்பூன்

மஞ்சள் பொடி – தேவையான அளவு

 

தாளிக்க

நல்ல எண்ணெய் – 2 ஸ்பூன்

சின்ன வெங்காயம் – 1 எண்ணம் (மீடியம் சைஸ்)

கறிவேப்பிலை – 2 கீற்று

கடுகு – ¼ ஸ்பூன்

 

செய்முறை

முதலில் பட்டர் பீன்ஸை தோலுரித்து விதைகளை தனியே எடுக்கவும்.

பின் விதைகளை தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளவும்.

மசாலுக்குத் தேவையான சின்ன வெங்காயத்தை தோலுரித்துக் கொள்ளவும்.

தாளிக்க தேவையான சின்ன வெங்காயத்தை சதுரங்களாக நறுக்கவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

தேங்காயை சிறுதுண்டுகளாக்கவும்.

துண்டுகளாக்கிய தேங்காய், மல்லிப் பொடி, மிளகாய் பொடி, சீரகப் பொடி, மஞ்சள் பொடி, தோலுரித்த சின்ன வெங்காயம் ஆகியவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக மசால் தயார் செய்யவும்.

 

அரைத்து வைத்த மசால்
அரைத்து வைத்த மசால்

 

பிரசர் குக்கரில் அலசிய பீன்ஸ் விதைகளைப் போடவும்.

வாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றவும்.

அதனுடன் சதுரங்களாக்கிய சின்ன வெங்காயம், உருவிய கறிவேப்பிலை, கடுகு சேர்த்து தாளிதம் செய்யவும்.

 

தாளிதம் செய்யும்போது
தாளிதம் செய்யும்போது

 

கடுகு வெடித்ததும் தாளிதப் பொருட்களை குக்கரில் உள்ள பீன்ஸ் விதைகளுடன் சேர்க்கவும்.

இதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலா, தேவையான கல் உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து விரவி குக்கரை மூடி அடுப்பில் வைக்கவும்.

 

பீன்ஸ் மசாலா கலவை
பீன்ஸ் மசாலா கலவை

 

ஒரு விசில் வந்ததும் அடுப்பினை சிம்மில் ஐந்து நிமிடங்கள் வைக்கவும். பின் அடுப்பினை அணைத்து விடவும்.

குக்கரின் ஆவி அடங்கியதும் குக்கரைத் திறந்து பீன்ஸ் கலவையைக் கிளறி விடவும்.

 

அடுப்பிலிருந்து இறக்கியதும்
அடுப்பிலிருந்து இறக்கியதும்

 

பின் இதனை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.

சுவையான பட்டர் பீன்ஸ் கூட்டு தயார்.

இதனை எல்லா சாத வகைகளுடன் சேர்த்து உண்ணலாம்.

 

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் மல்லிப் பொடி, மிளகாய் பொடி, சீரகப் பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றிற்குப் பதிலாக 2¼ ஸ்பூன் மசாலா பொடிசேர்த்து கூட்டினை தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.