அருள்மிகு ஸ்ரீ பட்டவன் கெங்கம்மாள் திருக்கோவில் வரலாறு!

நம் அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் ஆன்மீகத்தோடு பயணிக்கிறோம் என்பதில் ஐயமில்லை!

நமது நாட்டில் கோவில்களில் வழிபாடு என்பது முக்கியமான ஒன்றாகும்.

இந்து மதத்தைச் சார்ந்த மக்கள் அனைவரும் இறை நம்பிக்கையுடையவர்கள் ஆவார்கள்.

இவர்கள் பெருதெய்வ வழிபாடு மற்றும் சிறுதெய்வ வழிபாடு ஆகியவற்றில் மிகுந்த நாட்டம் கொண்டவர்கள்.

சிவன், பெருமாள், விநாயகர், மாரியம்மன், காளியம்மன் போன்ற பல தெய்வங்கள் உள்ள கோயில்களுக்கு பல வரலாறுகள் உண்டு

அந்த வரலாறுகள் அந்தக் கோயில்களிலேயே புத்தகமாக எழுதப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டு விற்பனையில் உள்ளது என்பது பலருக்கும் தெரியும்!

ஆனால் நம் கிராமங்களில் உள்ள நம் முன்னோர்கள் குலதெய்வமாக வணங்கிய சிறுதெய்வ கோயில்களில் உள்ள அந்த தெய்வங்களின் வரலாறு என்பது வாய் வழியாகவே பேசப்பட்டு ஆவணப்படுத்தாமல் இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை ஆகும்.

விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை அருகே உள்ள குலசேகரநல்லூர் என்னும் ஊரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பட்டவன் – கெங்கம்மாள் என்னும் சிறுதெய்வ திருக்கோவிலைப் பற்றிய வரலாற்று தகவல்களை விரிவாய்க் காண்போம்.

நாடோடிகளாய் வந்த நாயக்கர்கள்

குலசேகரநல்லூர் என்னும் ஊருக்கு ராஜ கம்பளத்து நாயக்கர் குலத்தைச் சேர்ந்த ஒருவர் வந்தார். அவருக்கு தொட்டிச்சி மற்றும் வடுகச்சி என்ற இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தனர்.

அதே ஊரில் பொதுக்கிழவன், கருப்பாயம்மாள் என்ற இருவர் ஆதரவு இல்லாத பட்டவன், கெங்கம்மாள் என்ற அண்ணன், தங்கையை வளர்த்து வந்தார்கள்.

சிறிது நாட்களுக்குப் பிறகு தொட்டிச்சி மற்றும் வடுகச்சி இருவரும் அவரது தந்தையை இழந்து நிற்கதியற்று நின்று போனார்கள்.

இந்த இரண்டு பெண் குழந்தைகளும் பொதுக் கிழவன், கருப்பாயம்மாள் அவர்களின் அடைக்கலத்திலேயே வாழ்ந்து வந்தனர்.

பட்டவனுக்கு கெங்கம்மாளோடு தொட்டிச்சியும், வடுகச்சியும் தங்கை ஆகிப்போனார்கள். பட்டவன் மூன்று தங்கைகளிடமும் அன்பாக பழகுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் அங்கு உள்ள ஒருவிநாயகர் சிலையை தங்களுடைய குலதெய்வமாக வழிபட்டனர்.

பட்டவன் குலதெய்வமாக வணங்கிய விநாயகர் கோவில்
பட்டவன் குலதெய்வமாக வணங்கிய விநாயகர் கோவில்
வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கும் எலி
வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கும் எலி

(விநாயகர் சிலைக்கு அருகில் உள்ள எலியானது வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது)

எல்லா நிகழ்விலும் உறுமி மேளம்

ராஜ கம்பளத்து நாயக்கர் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் உறுமி என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கும்.

திருமணம், சடங்கு, காதுகுத்து, இறப்பு போன்ற எல்லா நிகழ்வுகளிலும் இந்த உறுமியானது இந்த மக்களின் முக்கியமான இசைக் கருவிகளில் ஒன்றாகும்.

இந்த உறுமி இசையானது கெங்கம்மாளுக்கும், தொட்டிச்சிக்கும் வடுகச்சிக்கும் ரொம்ப பிடித்த இசைக் கருவியாகும்.

இந்த இசைக்கருவி இசைக்கும் போது அவர்களும் மகிழ்ச்சியிலேயே ஆடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருப்பாயம்மாள் செய்யும் பானகமும் கருப்பட்டி பணியாரமும்!

யாரும் ஆதரவு இல்லாத பிள்ளைகளுக்கு அடைக்கலம் கொடுத்த கருப்பாயம்மாள் மற்ற பிள்ளைகள் சாப்பிடும் தின்பண்டங்களை பார்த்து தாம் வளர்க்கும் பிள்ளைகள் ஏங்கிவிடக்கூடாது என்று அவர்களுக்கு தன்னால் இயன்றதை வைத்து கருப்பட்டி பணியாரம் மற்றும் பானகம் செய்து கொடுத்து வந்தார்.

பட்டவன், கெங்கம்மாள், தொட்டிச்சி, வடுகச்சி இவர்களுக்கு கருப்பாயம்மாள் செய்யும் கருப்பட்டி பணியாரமும் பானகமும் மிகவும் பிடிக்கும்.

வேட்டைக்குச் செல்லும் பட்டவன்

இவர்கள் வாழ்ந்த காலத்தில் இவர்களின் இடமானது வனப்பகுதியாக இருந்தது.

ஆகையால் காட்டு மிருகங்கள் தாங்கள் இருக்கும் இடத்திற்கு வரும் என்பதால் அந்த ஊரை பட்டவன் காவல் காத்து வந்தார்.

இப்படி காவல் காப்பதற்காக தினமும் வேட்டைக்குச் சென்று இருப்பிடத்திற்கு வருவார்.

வேட்டைக்குச் செல்லும் பொழுது தன்னுடைய குலதெய்வமான விநாயகரை வணங்கி விட்டு மூன்று வளரிகளை வீசி எறிந்து விட்டு வில்லுக்கம்பு, சாட்டை, வேட்டைக்கம்பு, கச்சை முதலியவற்றை கட்டிக்கொண்டு குதிரையில் வேட்டைக்குச் செல்வார்.

மண்ணில் விழுந்தார்! மாண்டு மடிந்தார்

எப்பொழுதும் வேட்டைக்குச் செல்வது போல் வேட்டைக்கம்பு, வில்லு கம்பு, சாட்டை , கச்சைகளை கட்டிக்கொண்டு தன்னுடைய குலதெய்வமான விநாயகரை வணங்கி விட்டு குதிரையில் வேட்டைக்குச் செல்லும்போது, யாரோ விட்ட அம்பு ஒன்று அவர் வயிற்றில் பட்டு ரத்தம் கரை புரண்டு ஓடியது.

‘தாம் இறக்கப் போகிறோம்’ என்ற எண்ணம் அவருக்குள் எழுந்தது.

தன்னுடைய தங்கைகளை பார்த்துவிட்டு தான் இறக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு குதிரையில் ஏறி தன் இருப்பிடத்தை நோக்கி விரைந்தார்.

அவர் செல்லும் வழியிலேயே வயிற்றிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. இறுதியாக தன் இருப்பிடத்திற்கு வந்தடைந்தார்.

தன்னுடைய தங்கைகள் மூவரையும் பார்த்தவுடன் குதிரையிலிருந்து இறங்கி மண்ணில் விழுந்து மாண்டு போனார்.

தன்னுடைய அண்ணன் பட்டவன் இறந்து கிடப்பதை பார்த்து மூவரும் கண்ணீர் மல்க அழுது புரண்டனர்.

தீயில் இறங்கிய தங்கைகள்

‘அண்ணன் இல்லாத இந்த உலகத்தில் நாம் மட்டும் வாழ்ந்து என்ன செய்யப் போகிறோம்?’ என்று தீயை மூட்டி தீக்குள் மூன்று தங்கைகளும் இறங்கி தங்களுடைய உயிரை மாய்த்துக் கொண்டார்கள்.

கிணற்றில் விழுந்த கருப்பாயம்மாள்

தான் வளர்த்த பிள்ளைகள் மாண்டு கிடப்பதை பார்த்து மனம் கொள்ளாமல் அழுது புரண்டார் கருப்பாயம்மாள். ஒப்பாரி வைத்து ஆர்ப்பரித்தார்.

‘ஏழு பிள்ளைகள் பெற்றாலும் எமனுக்கு ஒரு பிள்ளை கடனாக கொடுக்க மாட்டாள் தாய்’ என்பது பழமொழி.

இப்படி எங்கேயோ இருந்து வந்த பிள்ளைகளை எடுத்து வளர்த்த கருப்பாயம்மாள் எல்லா பிள்ளைகளையும் இழந்து தனி மரமாய் நின்றார்.

“எனது பிள்ளைகளே இல்லாத போது நான் மட்டும் இந்த பூமியில் வாழ்ந்து என்ன செய்வது?” என்று சொல்லி அருகில் உள்ள கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டார் கருப்பாயம்மாள். கருப்பாயம்மாள் இறந்தவுடன் பொதுக் கிழவனும் இறந்து விட்டார்.

மாண்டவர்களுக்கு எழுப்பிய கோயில்

மாண்டு போன பட்டவன், கெங்கம்மாள், தொட்டிச்சி, வடுகச்சி, பொதுக்கிழவன், கருப்பாயம்மாள் அவர்களின் வழி வந்த மக்கள் அவர்கள் வாழ்ந்த இடத்திலேயே அடக்கம் செய்து அவர்களுக்கு சமாதி கட்டி கோயில் எழுப்பி அவர்களுக்கு பிடித்த பொருட்களை படைத்து தங்களுடைய குலதெய்வமாக இன்று வரை வணங்கி வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டவன் சமாதி திருக்கோவில்
பட்டவன் சமாதி திருக்கோவில்
கெங்கம்மாள் சமாதி திருக்கோவில்!
கெங்கம்மாள் சமாதி திருக்கோவில்!
தொட்டிச்சி அம்மன், வடுகச்சி அம்மன் சமாதி திருக்கோவில்!
தொட்டிச்சி அம்மன், வடுகச்சி அம்மன் சமாதி திருக்கோவில்!

தொட்டிச்சி மற்றும் வடுகச்சி இருவரையும், அவர்கள் இறந்த பிறகு மக்கள் அம்மனாகவே பாவித்து தொட்டிச்சி அம்மன் வடுகச்சி அம்மன் என்று வழிபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

பட்டவன் கெங்கம்மாள் கோவிலை குலதெய்வமாகக் கொண்ட மக்கள் தங்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளுக்கு கெங்கம்மாள், கெங்காதேவி, கெங்கையன், தொட்டிச்சி, கருப்பையா, கருப்பாயி போன்ற தங்களுடைய குலதெய்வங்களின் பெயர்களை சூட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாசிமாதம் மூன்று நாள் வழிபாடு

பட்டவன் கெங்கம்மாள் திருக்கோவிலில் வருடத்திற்கு ஒருமுறை மாசி மாதம் மூன்று நாட்கள் சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெறும்.

இந்த வழிபாட்டில் பட்டவன் – கெங்கம்மாள் காவல்கார வகையறாவைச் சேர்ந்த மக்கள் தலைக்கட்டு வரி போட்டு காப்புக் கட்டி தங்களுடைய குலதெய்வமான பட்டவன் கெங்கம்மாளுக்கு சிறப்பான முறையில் மேளதாளத்தோடு வழிபாடு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

படையலில் பானகமும் பணியாரமும்

மாசி மாதம் மூன்று நாட்கள் வழிபாட்டின் முதல் நாளில் இரவு வயதான பாட்டிகள் மட்டுமே பச்சரிசி மாவு இடித்து கருப்பட்டியுடன் சேர்த்து பணியாரம் சுடுகிறார்கள். பணியாரம் சுடும் நிகழ்வில் வயதான பெண்கள் மட்டுமே கலந்து கொள்கிறார்கள்.

இரவில் சுட்ட பணியாரமும் நாட்டுப்புளியால் செய்யப்பட்ட பானகமும் பட்டவன், கெங்கம்மாள், தொட்டிச்சியம்மன், வடுகச்சியம்மன், பொதுக்கிழவன், கருப்பாயம்மாள் இவர்களுக்கு படையலாக வைக்கப்பட்டு சிறந்த முறையில் வழிபாடு நடைபெறும்.

படையில் வைக்கப்பட்ட பணியாரமும் பானகமும் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படும். மூன்று நாட்களும் காலையிலும் மாலையிலும் சாமியாட்டம் நடைபெறும்.

மூன்றாம் நாள் மகா சிவராத்திரி

இன்று அனைத்து குடும்பங்களும் பட்டவன் கெங்கம்மாள் திருக்கோவிலில் ஒன்று கூடி பொங்கலிட்டு, ஆட்டுக்கிடாய் வெட்டி,மொட்டை போட்டு தேங்காய், பழம் உடைத்து தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறகு பட்டவன் சாமியாடி பட்டவன் போல தன்னை அலங்கரித்துக் கொள்வர். நையாண்டி மேளம் முழங்க பெண்கள் குலவையிட பட்டவன் சாமியாடி மேல் இறங்கி தன்னுடைய குலதெய்வமான விநாயகர் கோயிலுக்கு சென்று தன்னுடைய மூன்று வளரிகளையும் வீசிவிட்டு விநாயகரின் ஆசியுடன் வேட்டைக்குச் செல்வது போல‌ சுற்றி வருவார்.

பிறகு கெங்கம்மாள், தொட்டிச்சி, வடுகச்சி மூன்று பேரும் தீயில் இறங்குவதைப் போல அங்கு தென்னை கீற்றால் தீ மூட்டப்படும் அந்த தீயில் கெங்கம்மாள் சாமியாடி மேல் வந்து இறங்கி தீயில் இறங்கிச் செல்வார்.

மற்றொருபுறம் கருப்பாயம்மாள் சாமியாடி மேல் வந்து இறங்கி கிணற்றில் விழச் செல்வார். அப்போது மற்றவர்கள் அவரை விழவிடாமல் பிடித்துக் கொள்வார்கள்.

நிறைவாக எல்லோருக்கும் பட்டவன், கெங்கம்மாள், தொட்டிச்சியம்மன், வடுகச்சியம்மன் கோயில் சாமியாடிகள் ஒவ்வொருவருக்கும் ஆசி வழங்கி திருநீறு வழங்குவார்.

இந்த மூன்றாம் நாள் சிறப்பு பூஜை முடிந்தவுடன் எல்லோரும் அவர்களுடைய வீட்டிற்கு மனநிறைவுடன் செல்வார்கள்.

மக்களின் நம்பிக்கை

மாசி மாதம் களரியில் தங்களுடைய குலதெய்வமான பட்டவன், கெங்கம்மாள், தொட்டிச்சியம்மன், வடுகச்சியம்மன், கருப்பாயம்மாள் போன்றவர்களிடம் பிள்ளை இல்லாதவர்கள், திருமணம் ஆகாதவர்கள், குடும்பத்தில் கஷ்டம் உள்ளவர்கள், வீடு இல்லாதவர்கள், நோய்வாய்பட்டவர்கள் தங்களுடைய பிரார்த்தனையை குலதெய்வத்திடம் வைத்து வணங்கி செல்வார்கள்.

‘என்ன பிரார்த்தனை வைத்தோமோ அது கண்டிப்பாக மறுவருடம் நிறைவேறிவிடும்’ என்ற நம்பிக்கை இந்த பட்டவன் கெங்கம்மாள் கோவிலைச் சேர்ந்த மக்களிடம் இன்றுவரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சிறு தெய்வங்களை வழிபடும் மக்கள் கள்ளங் கபடமற்ற மனது உள்ளவர்கள்.தாங்கள் தொடங்கும் எந்த ஒருகாரியத்தையும் குலதெய்வத்தை வணங்கி விட்டு பூ போட்டு பார்த்து செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்களுடைய நிலத்தில் விளைந்த காய்கறிகளையும், பழங்களையும் கூட முதலாவதாக அறுவடை செய்து தங்களுடைய குலதெய்வத்துக்கே படைத்து மகிழ்வார்கள்.

‘மூர்த்தி சிறிதனாலும் கீர்த்தி பெரியது’ என்பது பழமொழி. அதைப்போல தாங்கள் வழிபடும் குலதெய்வக் கோவில் சிறியதாக இருந்தாலும் அந்த தெய்வத்தின் சக்தி மிகவும் பெரியது என்பது அவர்களின் நம்பிக்கை.

சிறுதெய்வ வழிபாட்டின் மூலம் அந்தக் கோவிலின் வரலாறு ஆவணப்படுத்தப்படுகிறது. அந்த மக்களின் பாரம்பரியமும் பண்பாடும் பறைசாற்றப்படுகிறது. அவர்களின் பழக்க வழக்கங்களின் உண்மை தன்மை வெளிப்படுகிறது.

‘கோடி சாமிகள் இருந்தாலும் குலசாமிக்கு நிகராகாது’ என்பார்கள் சான்றோர்கள். அதைப்போல இவர்கள் குல சாமிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மிகப்பெரியதாகும்.

சிறுதெய்வ வழிபாட்டில் குலதெய்வத்திற்கு தினை அளவு தன்னால் இயன்றதைச் சாமிக்கு செய்தால் கூட அதனை பனையளவு ஏற்றுக் கொள்ளும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.

பின்குறிப்பு

பட்டவன் கெங்கம்மாள் கோயில் வரலாறு அந்தக் கோயில் பூசாரி பரமசிவம் என்பவர் கூறி அதனை நான் எழுதியுள்ளேன்.

பெ.சிவக்குமார்
பி.எட் (வேதியியல்) இரண்டாமாண்டு
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம்
கைபேசி:  9361723667
மின்னஞ்சல்: sivakumarpandi049@gmail.com

Comments

“அருள்மிகு ஸ்ரீ பட்டவன் கெங்கம்மாள் திருக்கோவில் வரலாறு!” மீது ஒரு மறுமொழி

  1. […] அருள்மிகு ஸ்ரீ பட்டவன் கெங்கம்மாள் த… […]

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.