பட்டாணிக் குருமா எளிதில் வீட்டில் செய்யக் கூடியது. சப்பாத்தியுடன் சாப்பிட மிகவும் உகந்தது.
சுவையான பட்டாணிக் குருமா செய்முறை பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
காய்ந்த பட்டாணி – 100 கிராம்
பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (பெரியது)
அரைக்க
மல்லித் தூள் – 1 ஸ்பூன்
சீரகத்தூள் – ½ ஸ்பூன்
மிளகாய்த்தூள் – ¾ ஸ்பூன்
மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
கரம் மசாலாத் தூள் – 1 ஸ்பூன்
தேங்காய் – 1 மூடி (சிறியது)
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
சின்ன வெங்காயம் – 2 எண்ணம்
கடுகு – ½ ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கீற்று
நல்ல எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் காய்ந்த பட்டாணியை எட்டு மணி நேரம் தண்ணீரில் நனைய வைக்கவும். பின்னர் அதனை நன்கு கழுவி தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி நீளவாக்கில் அரிந்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தை சதுரங்களாக அரிந்து கொள்ளவும்.
கறிவேப்பிலையை நீரில் அலசி உருவிக் கொள்ளவும். தேங்காயை உடைத்து துருவிக் கொள்ளவும்.
பின்னர் தேங்காய், மல்லித்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத் தூள், மஞ்சள் தூள் தேவையான தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் அடித்து மசாலா தயார் செய்து கொள்ளவும்.
அடுப்பில் குக்கரை வைத்து தேவையான அளவு நல்ல எண்ணெய் ஊற்றி சதுரங்களாக உள்ள சின்ன வெங்காயம், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.
பின்னர் அதனுடன் நனைய வைத்துள்ள பட்டாணி, நீளவாக்கில் அரிந்த பெரிய வெங்காயம், அரைத்து வைத்துள்ள மசாலாக் கலவை, தேவையான உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து குக்கரை மூடி விடவும்.
ஒரு விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைக்கவும். ஐந்து நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.
குக்கரில் ஆவி அடங்கியதும் குக்கரைத் திறக்கவும். சுவையான பட்டாணிக் குருமா தயார்.
இதனை சப்பாத்தி, தோசை, பூரி, வெள்ளைச் சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து உண்ணலாம்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள் ஆகியவற்றிற்குப் பதிலாக குழம்பு மசாலா பொடி 1½ ஸ்பூன் அளவிற்கு 100 கிராம் பட்டாணிக்கு சேர்த்து குருமா தயார் செய்யலாம்.
–ஜான்சிராணி வேலாயுதம்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!