பட்டுச்சேலை பிறந்த கதை

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் சீன நாட்டு அரசி ஷீ-லிங்-ஷீ, ஒருநாள் விளையாட்டாகத் தான் கைகழுவும் நீர்த்தொட்டியின் பக்கத்திலுள்ள செடியில் தொங்கிக் கொண்டிருந்த பட்டுப்புழுக் கூட்டை எடுத்துத் தொட்டியில் போட்டு வைத்தார்.

மறுநாள் காலை அந்தத் தொட்டியை யதார்த்தமாக ஷீ-லிங்-ஷீ பார்த்தார். தொட்டியில் இருந்த நீரில் மெல்லிய நூலிழைகள் இருப்பதைக் கண்டார். அதன் ஒரு முனையைப் பிடித்து இழுக்க பட்டு நூல் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. சட்டென அரசிக்கு ஒரு எண்ணம் தோன்றியது. இந்தநூலைக் கொண்டு ஆடைகளைத் தயாரித்தால் என்ன? என்று.

அதன் விளைவு, பட்டுத்துணியின் மவுசு உலகம் முழுவதும் பரவியது. பல நூற்றாண்டுகள் வரை சீனர்கள் பட்டு தயாரிப்பதை ரகசியமாகவே வைத்திருந்தனர். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தான் ஜப்பானியர்களுக்குத் தெரிய வந்தது. அவர்களும் அதனை ரகசியமாகவே வைத்திருந்தனர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்களும் அறிந்திருந்தனர். அழகையும், நேர்த்தியையும், வேலைப்பாட்டையும் வைத்துப் பார்த்தால், உலகிலேயே தரமான மேன்மையான பட்டு இத்தாலி நாட்டுப் பட்டு தான்.