ஒரு பணக்காரத் தந்தைக்கு ஒரே கவலை. தன் மகன் சுயமாக பணம் சம்பாதிக்கும் வயது வந்தும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை எண்ணி வருத்தப்பட்டார்.
ஒரு நாள் பொறுக்கமாட்டாமல் தினம் நூறு ரூபாய் சம்பாதித்துக் கொண்டு வந்தால்தான் இனி வீட்டில் தங்க முடியும் என்று கண்டித்தார்.
மறுநாள் வீட்டிற்குள் நுழையும்போது பையன் நூறு ரூபாய் எடுத்து நீட்டினான். அவனுடைய அப்பா அங்கே எரிந்து கொண்டிருந்த விளக்கில் காட்டி பணத்தை எரிய விட்டார். போய் சாப்பிடு என்றார்.
அவன் அமைதியாகச் சாப்பிடச் சென்று விட்டான்.
மறுநாளும் உள்ளே நுழையும்போது அவன் கொடுத்த நூறு ரூபாயை அவனுடைய அப்பா விளக்கில் எரியவிட்டார்.
அன்றும் அவன் அமைதியாகச் சாப்பிடச் சென்று விட்டான்.
மூன்றாவது நாளும் அவனுடைய அப்பா பணத்தை விளக்கில் காட்டி எரிய விட்டார்.
அப்போது மகன் வழக்கத்திற்கு மாறாகத் தாவி நெருப்பை அணைத்தான். அப்பா என்ன செய்கிறீர்கள் என்று அலறினான்.
அவன் அப்பா சொன்னார், “இன்றுதான் உண்மையில் நீ உழைத்து சம்பாதித்து பணம் கொண்டு வந்திருக்கிறாய்”
ஆச்சரியமடைந்த அவன் எப்படி கண்டு பிடித்தீர்கள் என்றான்.
“நீ உழைத்து சம்பாதிக்காத பணம் என்பதால் அது கரியானபோது நீ கவலைப் படவில்லை. அதுவே உன் உழைப்பு என்கிறபோது நீ துடித்துவிட்டாய். போய் சாப்பிடு. உழைப்பின் அருமையும் பணத்தின் அருமையும் தெரிந்ததால் இன்று நீ சாப்பிடுகிற சாப்பாடு கூடுதல் சுவையாக இருக்கும்” என்றார் மலர்ந்த முகத்தோடு.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!