ஒருவர் தம்முடைய மற்றும் தம்மைச் சார்ந்துள்ளவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பொருள் ஈட்டும் பொருட்டு பணிக்குச் செல்கிறார்.
அந்தப் பணியிடத்தில் வேண்டாத வகையில் அவமானங்களையும் திட்டுகளையும் பெற்று வருவாய் சம்பாதிக்க வேண்டி இருந்தால் அவர் மனம் படும் பாட்டை நம்மால் சொல்லில் விவரிக்க முடியாது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் உலகெங்கிலும் பலர் பணம் ஈட்டுகின்றனர் என்று உலக அளவிலான அண்மை ஆய்வு தெரிவிக்கிறது.
பெண்கள் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகள்
பணியிடங்களில் பெண்கள் அவர்கள் எப்படிப்பட்ட பதவியில் இருந்தாலும் (designation) பாலியல் ரீதியான முன் எடுப்பு, தொட முற்படுதல், துன்புறுத்தல், இச்சைக்கு இணங்க கட்டாயப்படுத்துதல் ஆகிய கொடுமைகளுக்கு உள்ளாகிறார்கள்.
உளவியல் தாக்குதல்
ILO எனப்படும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு, லாயிட்ஸ் ரிஜிஸ்டர் பவுண்டேசன் (LRF) காலப் (Gallup) ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் உலக அளவில், 58 கோடி பேர் (583 மில்லியன்) பணியிடங்களில் உளவியல் ரீதியான தாக்குதலை எதிர்கொள்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை அபாயம் மிக்கதாக (alarming) அதிர்ச்சி அளித்தாலும் பாதிக்கப்பட்ட எவரும் தங்களுக்கு ஏற்பட்ட எதிர்மறை அனுபவங்களை உரிய நடவடிக்கை எடுக்கக் கூடிய அமைப்பிடம் கொண்டு செல்வதில்லை என்றும் நண்பர்கள் /குடும்பத்தினரிடம் மட்டுமே பகிர்ந்து கொள்கிறார்கள் என்றும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
பணியில் தவறு செய்தவர்களை சற்றே கடிந்து கொள்வது மேற்குறிப்பிட்ட வகையில் அடங்காது.
(மோசமான விளைவு ஏற்படுத்தும் தவறு செய்பவர்களை/முறைகேடுகள்/ஒழுங்கீனம் செய்தவர்களை தண்டிக்க/பணி நீக்கம் செய்ய வழிவகை உள்ளது)
தேவை இல்லாமல் வேறு ஏதோ பிரச்சனை காரணமாக தங்களின் கீழ் பணியாற்றுபவர்கள் மீது மேலதிகாரி கடுப்பைக் காட்டுவது, வரம்பு மீறி கிண்டல் செய்வது, பணிக்கு தொடர்பு இல்லாததைப் பேசி வம்புக்கு இழுப்பது, மிரட்டுவது, மனம் நோகும்படி பேசுவது (insult) ஆகிய செயல்கள் மேற்குறிப்பிட்ட உளவியல் தாக்குதல் என்பதில் அடங்கும்.
மேல் நிலையில் உள்ளவர்கள் மட்டும் அல்ல, உடன் பணியாற்றுபவர்களும் மனத்தைப் புண்படுத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருப்பார்கள்.
இவ்வாறான தாக்குதல்களை உலகெங்கிலும் பணியிடங்களில் பெண்களைக் காட்டிலும் ஆண்களே அதிகளவில் எதிர்கொள்கிறார்கள்.
நாம் மேற்கூறிய புள்ளி விவரத்தின் படி, 58 கோடி பேர். Work from home என்கிற வீட்டிலேயே அலுவலகப் பணியில் ஈடுபடுபவர்கள் இதிலிருந்து தப்பித்தவர்கள் என்று கூற இயலாது என்றே இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
வன்முறை
நாக்கால் நெருப்பைக் கக்கி ஏசுவதும், திட்டுவதும், வரையறை இல்லாமல் வரம்பு மீறி பேசுவது மட்டும் அல்லாமல் பணியாளர்கள் அடித்து, உதைத்து துன்புறுத்தப்படுகிறார்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
விலையோ அதிகம்
பண வசதி இல்லாதவர்கள் பணிக்கு வருகின்றனர். தங்கள் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக பல்லைக் கடித்துக் கொண்டு சகித்து தங்கள் நாட்களைக் கடத்துகிறார்கள். தங்கள் வாழ்வதாரத்திற்கு அவர்கள் கொடுக்கும் விலையோ அதிகம்.
என்னதான் தீர்வு?
பணியிடங்களில் இவ்வாறான உளவியல் தாக்குதல் (psychological abuse) நடக்காமல் இருக்க ஏதுவாக அதற்காக கண்காணிப்பு குழுக்களை தொழிற்சாலைகளில் / பணியிடங்களில் ஏற்படுத்த வேண்டும்.
பணியாளர்களை எவ்வாறு கையாள வேண்டும்?
அவர்களிடம் வேலை வாங்கும் போது பணியிடங்களில் உளவியல் தாக்குதல் எவ்வாறு வரம்பு மீறாமல் இருக்க வேண்டும்?
தவறுகளை எவ்வாறு திருத்த வேண்டும்?
எவ்வாறு தடுக்க வேண்டும்?
அவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறை ஆகியவை குறித்து பயிற்சி அளிக்க வேண்டும் என்று இந்த ஆய்வு பரிந்துரை செய்துள்ளது.
எஸ். மதுரகவி
சென்னை
கைபேசி: 9841376382
மின்னஞ்சல்: mkavi62@gmail.com