பணிவின் பரிசு

பணிவும் தன்னடக்கமும் என்றைக்கும் மகிழ்ச்சியைத் தரும்.

தற்பெருமையோடு கூடிய ஆணவம் இன்னலைத் தரும். இதனை விளக்கும் பணிவின் பரிசு என்ற‌ பாரசீகக் கதை இதோ உங்களுக்காக. தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பருத்தியிலிருந்து கிடைக்கும் பஞ்சினைப் பயன்படுத்தியே பெரும்பாலும் ஆடைகள் நெய்யப்படுகின்றன. ஆடைகளின் வடிவம் வெவ்வேறாயினும் அவை அனைத்தும் ஒரே இனத்தைச் சார்ந்தவை.

பருத்தியிலிருந்து தயார் செய்யப்பட்ட போர்க்கொடியானது ஒருநாள் அரண்மனையின் அந்தப்புரத்தில் இருந்த திரைச்சீலையைக் கண்டது.

திரைச்சீலை ஒய்யாரமாக கதவில் தொங்கிக் கொண்டிருந்தது. அதனுடைய உடலனாது புதிதாகவும், வாசைன நிறைந்தும் காணப்பட்டது.

இதனைக் கண்ட போர்க்கொடி தன்னை ஒருகணம் பார்த்தது. அழுக்கான நாற்றம் தன்னுடைய நிலைக்காக வருந்தியது.

உடனே போர்க்கொடி “நானும் பருத்தியில் இருந்துதான் பிறந்தேன். அழகான இளம் பெண்களின் அருகில் தொங்கும் இந்தத் திரைச்சீலையையும் பருத்தியில் இருந்துதான் தோன்றியது. ஆனால் இந்த திரைச்சீலை பெற்ற வாழ்வினை நான் பெற்றேனா?. அதனுடைய அழகும், மணமும் எனக்கு இல்லையே.” என்று மனதிற்குள் எண்ணியது.

அதனை நினைக்க நினைக்க போர்க்கொடிக்கு துக்கம் தாக்க முடியாமல் விம்மி விம்மி அழுதது.

போர்க்கொடி அழுவதைக் கண்ட திரைச்சீலையை போர்க்கொடியிடம் “போர்க்கொடியே, நீ ஏன் அழுகிறாய்?” என்று கேட்டது.

அதற்கு போர்க்கொடி “நானும், நீயும் பருத்தியிலிருந்துதான் தோன்றினோம். நான் போர்க்கொடியாக உருவானதிலிருந்து கொடிய துன்பங்களை அனுபவிக்கிறேன்.

போர்வீரர்கள் என்னைக் கைகளில் ஏந்திக் கொண்டு செல்கிறார்கள். காடுகளிலும், மலைகளிலும் அலைந்து திரிகிறார்கள். நானும் அவர்களுடன் அலைந்து திரிகிறேன்.

போர்களத்தில் எதிரிகளிடம் அடிபடுகிறேன். வெயிலும் காய்ந்தும், மழையில் நனைந்தும் மிகவும் துன்பப்படுகிறேன். என்னுடைய துன்பங்கள் பற்றி உனக்கு தெரியுமா என்பது தெரியவில்லை.

மாறாக நீயோ, அந்தபுரத்தில் குளுமையான நிழலில் அசைகிறாய். மணம் வீசும் பொடிகளைப் பூசிக் கொண்டுள்ள பெண்களின் அருகில் இருக்கிறாய்.

இளம்பெண்கள் நறுமணம் வேண்டி உன்னை வாசனைப் பொருட்கள் கொண்டு அலசுகிறார்கள். நாம் இருவரும் ஒரே இனம்தான்.

ஆனால் எனக்கு தொல்லையும் துன்பமும்தான் உண்டாகிறது. உனக்கு இன்பமும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது.” என்று கூறியது.
போர்க்கொடி பேசியதைக் கேட்ட திரைச்சீலை புன்னகை புரிந்தது.

பிறகு போர்க்கொடியைப் பார்த்து “போர்க்கொடியே, நீ தலையை நிமிர்த்தி, நீ விண்ணில் பறக்கிறாய். தற்பெருமையுடன் ஆணவத்துடன் எல்லோரிடையேயும் தலைதூக்கி ஆட்டம் போடுகிறாய். அதனால் நீ துன்பம் அடைகிறாய்.

ஆனால் நானோ, அடக்கத்துடன், பணிவுடன் தரையில் தலை தாழ்த்திக் கொண்டிருக்கிறேன். எவரும் அறியாத இடத்தில் அமைதியாய் இருக்கிறேன். அதனால் இன்புற்று இருக்கிறேன்” என்று கூறியது திரைச்சீலை.

 

பணிவின் பரிசு என்ன என்று தெரிந்து கொண்டீர்கள்தானே!

இதனையே திருவள்ளுவர் பணிவு ஒருவனை தேவர்களின் நிலைக்கு உயர்த்தும் என்கிறார். ஆதலால் அடக்கம் மற்றும் பணிவுடன் வாழ்ந்து மகிழ்ச்சி, பெருமை ஆகிய‌ பரிசுகளை வெல்வீர்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.