பண்டைய தமிழர் விளையாட்டு

விளையாட்டு

விளையாட்டு ஓரினத்தின் வீரத்தையும், பண்பையும் வெளிப்படுத்துகின்றது. உடல்திறன் வளர்க்க, உள்ளத்தில் ஆர்வத்தை ஏற்படுத்த, மகிழ்ச்சியில் திளைக்க விளையாட்டு உதவுகின்றது. விளையாட்டுகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லா நிலையில் உள்ளோரும் ஈடுபடுகின்றனர்.

விளையாட்டின் அடிப்படை நோக்கம் போட்டியிடுதலாகும். உடல், உள்ள ஆற்றல்களை வெளியிடவும், எதிர்பாராத தோல்விகளை எதிர்கொள்ளவும், மனப்பான்மை மேம்படவும் விளையாட்டு உதவுகிறது. விளையாட்டு மூலம் பட்டறிவும், போராட்டத்திற்கு விடைகாணும் திறனும் பெறமுடிகிறது.

விளையாட்டுகள் பால் அடிப்படையிலும், தன்மை அடிப்படையிலும் பல்வேறு வகையினவாக அறியப்படுகின்றன. மகளிர் விளையாட்டுகள் பெரும்பாலும் அக (உள்ளே) விளையாட்டுகளாகவும், ஆடவர் விளையாட்கள் புற (வெளியே) விளையாட்டுகளாகவும் உள்ளன.

பம்பரம், கோலி, கிட்டிப்புள், கிளித்தட்டு போன்றவை சிறுவர் விளையாடுவன. தட்டாங்கல், பல்லாங்குழி, தாயம் முதலியன சிறுமியர் விளையாடுவன.

இன்று கால்பந்து, மட்டைப்பந்து, கைப்பந்து, இறகு பந்து, ஓட்டம், தடைதாண்டி ஓட்டம், எறிபந்து போன்றவை பந்தய ஆட்டங்களாக விளையாடப்படுகின்றன.

மற்போரிடல், ஏறுதழுவுதல், வேட்டையாடுதல், மூழ்கி மணல் எடுத்தல் போன்றவை பண்டைய தமிழ் ஆடவர்களின் வீரமிக்க விளையாட்டுகள் ஆகும்.

முற்காலத்தில் மற்போரில் வல்ல மல்லர்கள் மன்னர்களால் மதிக்கப் பெற்றனர். தருக்கும், செருக்கும் நிறைந்த ஆமூர் மல்லனுக்கும், வீரமும், தீரமும் வாய்ந்த நற்கிள்ளிக்கும் இடையே நடைபெற்ற வீர விளையாட்டை பற்றி புறநானூற்றில் வருணிக்கப்பட்டுள்ளது.

முல்லை நிலத்தில் ஏறு தழுவுதல் என்னும் வீர விளையாட்டு நடைபெற்றது. முரசு அதிர, பம்பை முழங்க ஓடிவரும் காளையின் கொம்பைப் பிடித்து காளையை அடக்குவர். வாலைப் பிடித்தல் தாழ்வு என்பது தமிழர் கொள்கை.

பல்லோர் சூழ்ந்து நிற்க கிணற்றுக்குள் துடுமெனப் பாய்ந்து குதித்து மணல் எடுத்து வருதல் ஒரு வகை வீர விளையாட்டாகக் கருதப்பட்டது.

பண்டைய காலத்தில் பெண்கள் வட்டாடுதல், பந்தாடுதல், ஊஞ்சல், ஓரையாடுதல் எனப் பல விளையாட்டுக்களை விளையாடி மகிழ்ந்தனர்.

கட்டம் வரைந்து நெல்லிக் காய்களை வைத்து நகர்த்தி ஆடும் ஆட்டம் வட்டாடுதலாகும். நண்டு, ஆமை ஆகியவற்றைக் கோல் கொண்டு அலைத்து ஓரையாட்டம் ஆடி மகிழ்ந்தனர். சிறுதேர் உருட்டி விளையாடி மகிழ்ந்தனர். சிறுமியர் முத்துகளைக் கிளிஞ்சல்களில் உள்ளே இட்டு ஆட்டிக் களிப்புற்றனர்.

பண்டைய தமிழர் விலங்குப் போர் காண்பதிலும் அதிக ஆர்வம் காட்டினர். அரசர் வாழும் தலைநகரங்களில் யானைப் போர் நடைபெறுவதற்கும், அதனை காண்பதற்கும் தனி இடங்கள் இருந்தன. மதுரையில் திருமலைநாயக்கர் கட்டிய தமுக்கம் மண்டபம், யானைப் போர் காண்பதற்கான இடமாகும்.

ஆட்டுக்கிடாய் போர், சேவற்போர், காடைப்போர் ஆகியவற்றையும் தமிழர்கள் கண்டு மகிழ்ந்னர். சோழ நாட்டின் பழைய தலைநகரான உறையூரில் வீரக் கோழிகள் சிறந்திருந்தமையால் கோழியூர் என்னும் பெயரில் அழைக்கப்பட்டது. காலம் செல்ல செல்ல விளையாட்டுக்களின் தன்மையும், போக்கும் மாறியுள்ளன.

ஏறுதழுவுதல் விளையாட்டு இன்று சல்லிக் கட்டாகவும், மஞ்சு விரட்டாகவும் மாறியுள்ளன. அன்று ஏறுதழுவுதல் விளையாட்டில் வெற்றி பெற்றோரையே மகளிர் விரும்பி மகிழ்ந்தனர். இன்று அவ்விளையாட்டானது பண முடிப்பு, பரிசுப் பொருட்கள் பெறுதல், பலர் சேர்ந்து மாடு விரட்டல் என மாறிவிட்டது.

தமிழர்களின் தற்காப்புகலை விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பாட்டம் இன்று ஊர் திருவிழாக்களின் போது வேடிக்கைக்காக ஆடப்படுகிறது. நிலத்திலிருந்து ஓர் ஆளின் நெற்றி உயரம் வரை இருக்கும் தடியைச் சுழற்றி ஆடும் ஆட்டமே சிலம்பாட்டமாகும்.

உலக அரங்கில் தமிழரின் வீர விளையாட்டான கபடி(சடுகுடு)க்குத் தனியிடம் கிடைத்துள்ளது. வழுக்கு மரம் ஏறுதல், உறியடித்தல், மஞ்சள் நீர் ஊற்றுதல் ஆகிய விளையாட்டுகளை இன்றும் சிற்றூர்களில் காணலாம்.

விளையாட்டு குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் உள்ள மகிழ்ச்சிக்கும் வழி வகுக்கின்றது. இது ஒரு சமுதாயத்தின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் மரபையும் விளக்க வல்லது.

விளையாட்டு வீரர்களுக்கு தற்போது நம்நாட்டில் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் அரசு முன்னுரிமை அளிக்கின்றது. காலத்தாலும் புதுமை போக்காலும், சமுதாய மாற்றத்தாலும் விளையாட்டுகள் குறைந்து கொண்டும் மாறியும் வருகின்றன. விளையாட்டுகளின் சிறப்பை உணர்ந்து அதனை நாம் போற்றி வளர்ப்போம்.

Visited 1 times, 1 visit(s) today