பண்ணை மாட்டுக்கு மண்ணுதான் மருந்து என்ற பழமொழியை நாரை நந்தினி புல்வெளியில் நின்றபோது கேட்டது. கூட்டத்தில் வயதான பெண் பழமொழி பற்றி மேலும் பேசுவதை நாரை நந்தினி கூர்ந்து கேட்கலானது.
பழமொழிக்கான முதியவளின் விளக்கம்
“நம்முடைய கிராம மக்களிடையே பன்னெடுங் காலமாக ஒரு வழக்கம் உண்டு. வயல் வேலைகளின்போது கைகளிலோ கால்களிலோ காயம் ஏற்பட்டால் அக்காயங்களில் மண்ணைப் பூசி விடுவார்கள்.
பண்டைய காலங்களில் இன்றைக்கு இருப்பதுபோல் மருத்துவமனைகள் அதிகளவு இருந்ததில்லை. தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு காயம்பட்டவர்களை கொண்டு செல்வதும் சிரமம்.
மேலும் அக்காலங்களில் வயல்வெளிகளுக்கு செயற்கை வேதிஉரங்கள் பயன்படுத்தியதும் இல்லை. இயற்கை உரங்களே பயன்படுத்தப்பட்டன. எனவே அம்மண்ணினை காயங்களில் போடும்போது பக்கவிளைவுகள் பெரிய அளவில் ஏதும் ஏற்பட்டிருக்காது.
சில இந்து மத ஆலயங்களில் மண்ணானது மருந்தாக, அதாவது கோவில் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அதைனைப் பயன்படுத்தும் போது நோய்கள் குணமாவதாக கருதப்படுகிறது. இந்தப் பழமொழியானது மேற்சொன்ன விஷயங்களை அறிவிப்பதற்காகவே உருவான பழமொழியாகும்.” என வயதான பெண்மணி விளக்கினாள்.
பழமொழி மற்றும் விளக்கம் கிடைத்த சந்தோசத்தில் காட்டில் வட்டப்பாறையினை நோக்கி நாரை நந்தினி பறந்தது. அங்கே எல்லோரும் வழக்கம் போல கூடியிருந்தனர்.
காக்கை கருங்காலன் எழுந்து “இன்றைக்கு யார் உங்களில் பழமொழி பற்றி கூறப்போகிறீர்கள்?” என்று கேட்டது.
அதற்கு நாரை நந்தினி “தாத்தா நான் இன்றைக்கு பண்ணை மாட்டுக்கு மண்ணுதான் மருந்து என்ற பழமொழியை விளக்குகிறேன்” என்று கூறி தான் கேட்டது முழுவதையும் விளக்கியது.
இதனைக் கேட்ட காக்கை கருங்காலன் “நாரை நந்தினி கூறியது சரிதான். இந்தப்பழமொழியை பற்றிய மற்றொரு விளக்கத்தினைக் கூறுகிறேன் கேளுங்கள்.
பண்ணையில் வேலை செய்யும் வேலையாட்கள் நோய்காலத்தின் போது கவனிப்பார் இன்றி இருக்கும் நிலை உண்டாவது என்பது இயல்பானதே.
பண்ணையில் வேலை செய்யும் நபர்களுக்கு மருத்துவசதி ஏதும் செய்யப்பட்டு கவனிக்கும் நிலை பொதுவாக இருப்பதில்லை.
எனவே அவர்களுக்கு வரும் நோய்களுக்கு அவர்களே சுய மருத்துவம் செய்து கொண்டு தங்களை தாங்களே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதைக் கூறவே இப்பழமொழி உருவானது.
இங்கே பண்ணை ஆட்கள் என்பது மருவி பண்ணை மாட்டுக்கு என்று உருமாறி பண்ணை மாட்டுக்கு மண்ணே மருந்து என்றானது. சரி நாளை மற்றொரு பழமொழி பற்றிப் பார்ப்போம்” என்று கூறி எல்லோரையும் வழியனுப்பியது.