பதற்றத்தை தவிர்ப்பீர் வாழ்வை வெல்வீர் என்பது புதுமொழி. (பதறாத காரியம் சிதறாது என்பது பழமொழி).
அதாவது வாழ்வில் வெற்றி பெற விரும்பும் ஒவ்வொருவரும் இன்றைய சூழ்நிலையில் ஏற்படும் பதற்றம் அதனால் உண்டாகும் பயத்தை விட்டு வெளியே வர வேண்டும்.
பதற்றம் ஒருவனை செயல் அற்றவனாக்கி விடும். நாள்பட்ட பதற்றம் மனஅழுத்தத்தைக் கொடுக்கும். இதனால் நம்முடைய செயல்களும், உடல்நிலையும் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.
பதற்றமானது நம்மிடையே உள்ள திறமைகளை வெளிப்படுத்த இயலாத நிலைக்கு கொண்டு செல்லும்.
சிலருக்கு வெளியாட்களுடன் பேசுவதில் பதற்றம்; இன்னும் சிலருக்கு வெளியிடங்களுக்கு செல்வதில் பதற்றம்; அலுவலகக் கூட்டத்தில் தன் கருத்தினை வெளிப்படுத்துவதில் பதற்றம் என அன்றாட வாழ்க்கையில் நிறைய நிகழ்வுகள் நம்மில் பெரும்பாலோருக்கு பதற்றத்தை உண்டாக்குகின்றன.
பதற்றத்தை குறைக்க வழிகள்
முதலில் நாம் எந்த சூழ்நிலைகளில் பதற்றம் அடைகின்றோம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த சூழ்நிலைகளில் நாம் எவ்வாறு செயல்பட்டிருந்தால் பதற்றத்தைக் குறைத்திருக்கலாம் என்பதையும் யோசிக்க வேண்டும்.
அந்த சூழ்நிலை மீண்டும் ஏற்பட்டால் நாம் செயல்பட நினைத்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் திறமை நம்மிடையே உள்ளது என்பதை ஒரு மந்திரமாக நமக்குள்ளே அடிக்கடி சொல்லிக் கொள்ள வேண்டும்.
அதேபோல் நம்மிடையே நேர்மறை எண்ணங்கள் மற்றும் நேர்மறை வார்த்தைகளை (உண்டு, முடியும், கிடைக்கும்) உருவாக்கிக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
நீங்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவராக இருந்தால் பதற்றமான சூழ்நிலையில் கடவுள் நம்மைக் காப்பாற்றுவார் என்று ஆழ்ந்த நம்பிக்கை கொள்ள வேண்டும்.
கடவுள் நம்பிக்கை இல்லை என்றால் நம்மால் இந்த சூழ்நிலையை திறனுடன் சமாளிக்க இயலும் என்று உங்களுக்குளேயே அடிக்கடி நினைத்துக் கொள்ள வேண்டும்.
பதற்றமான சூழ்நிலையில் உங்களுக்கு பிடித்த பாடல்களைக் கேட்பது, மகிழ்ச்சியான தருணங்களை நினைவில் கொண்டு வருவது, உங்களின் சாதனைகளை நினைப்பது ஆகியவை உங்களிடையே பதற்றத்தைக் குறைக்கும்.
தியானம், யோகா, மூச்சுப் பயிற்சி ஆகியவை நம்மிடையே ஏற்படும் பதற்றத்தைக் குறைக்கக் கூடியவை. ஆகவே அவற்றை முறையாக தினந்தோறும் கடைப்பிடிப்பதால் நம்மிடையே ஏற்படும் பதற்றத்திற்கு தீர்வு பெறலாம்.
நல்ல நேர்த்தியான கம்பீரமான உடையை அணியுங்கள். நிமிர்ந்து நில்லுங்கள். கண்ணாடியில் நம்மைப் பார்க்கும்போது நம்முடைய தோற்றம் நமக்கு தன்னம்பிக்கை அளிப்பதாக இருக்க வேண்டும்.
கூட்டத்தில் பேச கூச்ச சுபாவம் உள்ளவர்கள் கண்ணாடியில் நம்மை நாமே பார்த்துப் பேசிப் பழகலாம்.
பெற்றோர்கள் செய்ய வேண்டியவை
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அடுத்தவர் முன்பு மட்டம் தட்டிப் பேசக் கூடாது.
அவர்களிடம் பேசும் போதும் நேர்மறையான வார்த்தைகளைப் பயன்படுத்தி நேர்மறையான எண்ணங்கள் உண்டாகுமாறு செய்ய வேண்டும்.
குழந்தைகளின் நற்செயல்களை விரிவாகச் சொல்லி பாராட்டி, அவர்களின் தவறுகளை சுருங்கச் சொல்லி அவர்களிடையே பயமோ, பதட்டமோ ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
குழந்தைகளை எல்லா சூழலையும் பயம், பதட்டம் இல்லாமல் அணுகுமாறு வளர்க்க வேண்டும்.
உங்களுக்கு விருப்பமான செயல்பாடுகளை குழந்தைகளிடம் திணிக்காமல் அவர்களின் தனித்திறமையைக் (ஓவியம் வரைதல், பாடுதல் உள்ளிட்டவைகள்) கண்டறிந்து அதனை ஊக்கப்படுத்தி வளர்த்தால் அவர்களிடம் பயம் பதட்டம் ஏற்படாது.
பதறாத காரியம் சிதறாது என்பது பழமொழி. ஆதலால் எந்த சூழ்நிலைகளிலும் பதற்றம் அடையாமல் சிறப்பாகச் செயல்பட்டு வாழ்வில் வெற்றி பெறுங்கள்.