பதினான்கு வேகங்கள்

உடலின் சீரான செயலிலங்கு நிலைக்கு சில அறிகுறிகள் உண்டாகும். இவை இயற்கையான நிலைகளே. இந்த இயற்கை நிகழ்வுகள் வேகங்கள் எனப்படும்.நமது உடலில் பதினான்கு வேகங்கள் உள்ளன. இந்த நிகழ்வுகளைக் கட்டுப்படுத்தல் ஆகாது.

நோயுள்ள நிலைகளில் இவைஅதிகம் பாதிக்கப்படும். அவையாவன

1. வாதம்

2.தும்மல்

3.சிறுநீர்

4.மலம்

5.கொட்டாவி

6.பசி

7.நீர் வேட்கை (தாகம்)

8.இருமல்

9.இளைப்பு

10.தூக்கம்

11.வாந்தி

12.கண்ணீர்

13.சுக்கிலம்

14.சுவாசம் (மூச்சு அல்லது உயிர்ப்பு)

 

பதினான்கு வேகங்களைத் தடுத்தால் உண்டாகும் நோய்கள்

வாதம் (அபான வாயு): மார்பு நோய், வாயு குன்மம், குடல்வாதம், உடல்குத்தல், குடைச்சல்,ஈரல் நோய், மலக்கட்டு, நீர்க்கட்டு, செரிமானக் குறைவு ஆகியன உண்டாகும்.

தும்மல்: தலை முழுமையும் நோதல், அனைத்துப்புலன்களும் (மெய்,வாய்,கண்,மூக்கு,செவி) தெறித்து விடுவது போல் தோன்றுதல், முகம் இழுத்தல்(இழுப்பு வாயு) ஆகியன தோன்றும்.

சிறுநீர்: நீரடைப்பு, நீர் இறங்கும் துளை புண்ணாதல், கீல்கள் தோன்றுதல், அபானவாயு வயிற்றில் சேர்தல், நீர்த்துவாரத்தில் புண், சீழ், குருதி சேர்தல், எரிச்சல் ஆகியன தோன்றும்.

மலம்: அபானம் பெருகி அடக்கப்பெற்ற மலத்தைத் தள்ளும், சலதோடம், முழங்காலின் கீழ் வலி, தலைவலி, ஒலியுடன் காற்றுப்பரிதல் உடல் வன்மை குறைவு ஆகியன தோன்றும்.

கொட்டாவி: முகம் வதங்கல், இளைத்துக் காணப்படல், அளவோடு உண்டாலும் செரியாமை, நீர்நோய், வெள்ளை நோய், வயிற்றில் நோய் காணல், அறிவு மயங்கல் ஆகியன காணும்.

பசி: நீர்வேட்கை, உடலும், உடலின் பல்வேறு உறுப்புக்களும் தத்தம் தொழில்களைச் சரிவரச் செய்யாமை, சூலை, பிரமை, உடல் இளைப்பு, முகவாட்டம், சந்துக்களில் நோவு ஆகியன காணும்.

இருமல் (காசம்): மிக்க இருமல், மூச்சு விடும்போது அம்மூச்சில் கெட்ட நாற்றம் வீசுதல், இருதய நோய் உண்டாதல் ஆகியன காணும்.

இளைப்பு (ஆயாசம்): நீர்மேகம் பெருகும், கன்மம், மூர்ச்சை, குளிர் ஆகியன காணும்.

தூக்கம் (நித்திரை): நாள் தோறும் தலைக்கனம், கண்கள் சிவத்தல், செவிடு, அரைப் பேச்சு காணும்.

வாந்தி: தோலில் தடிப்புகள் உண்டாதல், உடலில் நஞ்சு சேரல், பாண்டு (வெளுப்பு நோய்), கண் நோய்கள், இரைப்பு, காய்ச்சல், இருமல் ஆகியன தோன்றும்.

கண்ணீர் (விழி நீர்): பீனிசங்கள், கண் நோய், தலையில் புண், வயிற்று வலி ஆகியன தோன்றும்.

சுக்கிலம்: சுரம், நீர்க்கட்டு, கைகால்கள் மற்றும் கீல்கள் நோதல், விந்து கசிதல், மார்படைப்பு, மார்பு துடிப்பு, வெள்ளை ஆகியன தோன்றும்.

சுவாசம் (மூச்சு அல்லது உயிர்ப்பு): இருமல், வயிற்றுப் பொருமல், சுவை தெரியாமை, குலை நோய், காய்ச்சல், வெட்டை நோய் தோன்றும்.