பத்ம விபூசண் விருது, இந்திய அரசால் குடிமக்களுக்கு அவர்களின் சேவையைப் பாராட்டி வழங்கப்படும் இரண்டாவது மிகப் பெரிய விருதாகும்.
கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரங்கள், சிவில் வேவை, வர்த்தகம் மற்றும் தொழில்துறை போன்ற துறைகளில் புகழ் பெற்ற விதிவிலக்கான சாதனைகள், சேவைகள் புரிந்தோரை அங்கீகரிக்கும் பொருட்டு பத்ம விபூசண் விருது வழங்கப்படுகிறது.
இவ்விருதினை பெறுபவர்களுக்கு பணபலன் ஏதும் வழங்கப்படுவதில்லை. விதி எண் 18 (1)-ன்படி இவ்விருதினைப் பெற்றோர் தங்கள் பெயருக்கு முன்பும், பின்பும் இவ்விருதின் அடைமொழியை பயன்படுக்கூடாது.
2016 வரை 6 அமரர்கள், 19 இந்திய குடியுரிமை இல்லாதோர் உட்பட மொத்தம் 294 நபர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அரசால் வழங்கப்படும் பத்மவிபூசண், பத்ம பூசண், பத்ம ஸ்ரீ போன்ற விருதுகள் பத்ம விருதுகள் என்று அழைக்கப்படுகின்றன.
இவை முறைய இந்தியாவின் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது உயரிய விருதுகளாகக் கருதப்படுகின்றன.
பத்ம விபூசணின் வரலாறு
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான டாக்டர் இராஜேந்திர பிரசாத் அவர்களால் இவ்விருது ஜனவரி 2, 1954 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
இவ்விருதானது இனம், மதம், பாலினம், பதவி என வேறுபாடின்றி மிகச்சிறந்த தேசிய சேவை செய்த எல்லோரையும் பாராட்டி வழங்கப்படுகிறது.
மருத்துவர்கள், விஞ்ஞானிகள் தவிர அரசு ஊழியர்கள் உட்பட பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர்கள் இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.
ஒரு ஆண்டில் பத்ம விருதுகள் மொத்தம் 120 பேருக்கு (அமரர்கள், இந்திய குடியுரிமை இல்லாதோர் தவிர்த்து) மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று வரையறை செய்யப்பட்டது. அமரர்களுக்கு இவ்விருது வழங்கப்படுவதாக கொள்கை வகுக்கப்படவில்லை. பின் 1955 ஜனவரியில் அமர்களுக்கும் இவ்விருது வழங்கலாம் என விதியில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
பத்ம விபூசணுக்கான விதிமுறைகள்
இவ்விருதினைப் பெறுபவர்கள் இந்திய குடியரசுத் தலைவரின் கையொப்பமிட்ட பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கத்தினைப் பெறுவர். விருது வழங்கும் நாளன்று விருதினைப் பெறும் ஒவ்வொருவர் பற்றிய சிறுவிளக்க குறிப்புடன் கூடிய நினைவு சிற்றேடு வெளியிடப்படும்.
இவ்விருதினைப் பெற்றவர்கள் விரும்பினால் அரசு விழாக்களின்போது இவ்விருதினை அணிந்து கொள்ளலாம். இவ்விருதினைப் பெறுபவர் தங்கள் பெயருக்கு முன்னும் பின்னும் இவ்விருதின் அடைமொழியைப் பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் விருதானது திரும்பப் பெறப்படும்.
ஏற்கனவே பத்ம விருது வாங்கியவர், பத்ம விருது வாங்கிய ஐந்து ஆண்டுகள் கழித்தே அடுத்த உயரிய பத்ம விருதுக்கு பரிந்துரை செய்யப்பட வேண்டும். தகுதியுடைய நேரங்களில் பத்ம விருதுகள் தேர்வுக் குழுவினரால் இந்த கால அளவு தளர்வு செய்யப்படலாம்.
இவ்விருதினைப் பெறுவதற்கு எல்லா மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், இந்திய அரசின் அமைச்சகங்கள், பாரத ரத்னா, பத்ம விபூசண் விருது பெற்றவர்கள், சிறப்பு நிறுவனங்கள், அமைச்சர்கள், முதல் அமைச்சர்கள், மாநில கவர்னர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தனிநபர்கள் ஆகியோர்களிடமிருந்து வரும் பரிந்துரைகள் பத்ம விருதுகள் தேர்வு குழுவில் பெறப்படுகின்றன.
இவ்விருதிற்கான பரிந்துரைகள் மே 1 முதல் செப்டம்பர் 15 வரை உள்ள காலகட்டத்தில் பத்ம விருதுகள் தேர்வு குழுவிற்கு அனுப்பப்பட வேண்டும்.
பத்ம விருதுகள் தேர்வு குழுவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் பட்டியலானது இந்தியப் பிரதமர் மற்றும் இந்திய குடியரசுத் தலைவர் ஆகியோரின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஜனவரி 26, இந்திய குடியரசு தினத்தன்று இவ்விருது அறிவிக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் இவ்விருது தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இவ்விருதானது முதலில் அறிவிக்கப்பட்டு, பின் இந்திய அரசின் நகர்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் அரசாங்க உத்தியோகப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் அரசிதழில் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட வேண்டும். அவ்வாறு அரசிதழில் வெளியிடப்படவில்லை எனில் அதிகாரப்பூர்வமாக விருதானது அங்கீகரிக்கப்படவில்லை எனக் கருதப்படும்.
இவ்விருதானது திரும்பப் பெற வேண்டும் எனில் குடியரசுத்தலைவரின் ஒப்புதலோடு அரசிதழில் இருந்து திரும்ப அளிப்பவரின் பெயர் நீக்கப்பட வேண்டும். விருதினை திருப்பி அளிப்பவர்கள் தங்கள் பதக்கத்தை திருப்பி கொடுத்துவிட வேண்டும். மேலும். 1977 ஜூலை முதல் 1980 ஜனவரி வரையிலும் 1992-1995 வரையிலும் இவ்விருது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
விருதுதின் அமைப்பு
இவ்விருதிற்கான முதல் வரையறையில் பதக்கமானது 35 மி.மீ விட்டமுடைய தங்கமுலாம் பூசப்பட்ட இருபுறமும் விளிம்புகளுடன் கூடிய வட்ட வடிவமானதாகும்.
பதக்கத்தின் முன்பக்கத்தில் தாமரைப்பூ பதிக்கப்பட்டு பூவின் மேலே பத்ம விபூசண் என தேவ நாகரிக மொழியில் பொறிக்கப்பட்ட வேண்டும்.
ஒரு மலர் மாலை கீழ்விளிம்பிலும், தாமரை மாலை மேல்விளிம்பிலும் இருக்க வேண்டும். இந்திய அரசு சின்னம் பின்பக்கம் பொறிக்கப்பட்டு அதன் கீழே தேசிய சேவை என தேவ நாகரிக மொழியில் பொறிக்கப்பட்ட வேண்டும்.
பதக்கமானது 32 மிமீ அகலம் உள்ள இளஞ்சிவப்பு வண்ண ரிப்பனில் இணைக்கப்பட வேண்டும். ரிப்பனில் வெள்ளை நிறக் கோடானது இளசிவப்பு வண்ணத்தை இரண்டு சமபாகங்களாக பிரிக்க வேண்டும் என கூறப்பட்டது.அடுத்த ஆண்டு பதக்கத்தின் வடிவமைப்பு மாற்றப்பட்டது.
தற்போதைய உள்ள பதக்கம் தாமிரத்தில் 44 மிமீ விட்டம் கொண்ட வட்ட வடிவில், 3.2 மி.மீ தடிமனில் உள்ளது. இதனுள் 30 மிமீ பக்க அளவுள்ள சதுரங்களால் சூழப்பட்ட அமைப்பு உள்ளது.
சதுரத்தின் உட்பரப்பில் 27 மிமீ விட்டம் கொண்ட வட்டம் ஒன்று உள்ளது. அதனுள் நான்கு இதழ்களால் ஆன தாமரை பூ வடிவம் உள்ளது. தேவ நாகரீக மொழியில் பத்ம என்ற வாசகம் மேற்புறமும், விபூசண் என்ற வாசகம் கீழ்புறமும் பொறிக்கப்பட்டிருக்கும்.
இந்திய அரசு சின்னம் பின்பக்கம் பொறிக்கப்பட்டு அதன் கீழே சத்தியமேவ ஜெயதே என தேவ நாகரிக மொழியில் பொறிக்கப்பட்டிருக்கும். பதக்கத்தின் முன் மற்றும் பின் பக்கம் உள்ள புடைப்பானது தங்கத்தால் ஆனது. பதக்கமானது 32 மிமீ அகலம் உள்ள இளஞ்சிவப்பு வண்ண ரிப்பனில் இணைக்கப்பட்டிருக்கும். இப்பதக்கமானது கொல்கத்தாவில் உள்ள அலிப்பூர் மின்டில் தயார் செய்யப்படுகிறது.
முதன் முதலில் இவ்விருது சத்யேந்திரநாத் போஸ் உள்ளிட்ட ஆறு நபர்களுக்கு 1954-ல் வழங்கப்பட்டது. விலயாத் கான் உள்ளிட்ட பலர் இவ்விருதினை திருப்பி அளித்துள்ளனர். இது வரை மொத்தம் 26 தமிழர்கள் இவ்விருதினைப் பெற்றுள்ளனர்.
– வ.முனீஸ்வரன்
மறுமொழி இடவும்