பந்திக்கு முந்தி படைக்குப் பிந்தி

பந்திக்கு முந்தி படைக்குப் பிந்தி என்ற பழமொழியைப் பற்றி முதியவர் ஒருவர் தம் கூட்டத்தினருக்கு கூறுவதை புலிக்குட்டி புவனா புதர் மறைவில் இருந்து கேட்டது.

அப்பொழுது ஒரு சிறுவன் எழுந்து “இந்த பழமொழியானது விருந்துக்கு முன்னதாக செல்ல வேண்டும் என்றும் போருக்கு பின்னால் செல்ல வேண்டும் என்று கூறுகிறதா?” என்று கேட்டான்.

அதனைக் கேட்ட பெரியவர் “இந்தப் பழமொழி விருந்துக்கு முன்னதாக செல்ல வேண்டும் என்றும், போருக்கு பின்னால் செல்ல வேண்டும் என்று பொருள்பட இன்று வழங்கப்பட்டு வருகின்றது” என்று வருத்தப்பட்டார்.

“ஆனால் உண்மையான பொருள் வேறு; அதனை நான் விளக்கிக் கூறுகிறேன்” என்றார் பெரியவர்.

நம்முடைய பண்டைத் தமிழர்களின் வீரம் மிகவும் போற்றத்தக்க விதமாக இருந்தது என்பதை பல்வேறு காவியங்களும் சங்க இலக்கியங்களும் காப்பியங்களும் நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றன.

வீரம் நிறைந்த இந்தத் தமிழ் மண்ணில் இவ்வாறு போருக்குப் பின்னால் செல்ல வேண்டும் என்று பொருள் தரத்தக்க பழமொழி எப்படி உருவாகியிருக்க முடியும்.

மேலும் விருந்தோம்பலுக்கும் வந்தாரை உபசரிப்பதிலும் தமிழரின் பண்பாடு தலை சிறந்தது என்பதை இவ்வுலகம் நன்கு அறியும்.

இவ்வாறு இருக்க விருந்துக்கு முந்திச் செல்ல வேண்டும் என்ற பொருள் எப்படி வரும்?.

இப்பழமொழி எப்படி இத்தமிழ்நாட்டில் உருவாகியிருக்க முடியும் என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா?

 

பந்திக்கு முன் தீ

எப்பொழுதுமே விருந்து தயாரிக்கும் போது அதற்கான அடுப்பை ஏற்றும் முன் அதற்கு பூசை செய்து அடுப்பை பற்றவைப்பது வழக்கம்.

அவ்வாறு அடுப்பில் தீ வைக்காம‌ல் எந்தப் பந்தியும் நடைபெற இயலாது. இதை விளக்கவே ‘பந்திக்கு முன் தீ’ என்று சொல்லப்பட்டது.

 

படைக்குப்பின் தீ

மன்னராட்சி காலத்தில் ஒரு நாட்டின் மீது படையெடுத்து செல்லும்போது, போரில் தோல்வியுற்ற நாட்டின் தலை நகரை தீவைத்துக் கொளுத்தி அழிப்பது வெற்றி பெற்ற படை வீரர்களின் செயலாகும்.

சாளுக்கிய மன்னான இரண்டாம் புலிகேசியுடனான போரில் நரசிம்மப் பல்லவன் புலிகேசியை வென்று சாளுக்கியர்களின் தலைநகரான வாதபியை தீக்கிரையாக்கினான்.

அதனால் “வாதாபி கொண்டான்” என்ற பெயரால் நரசிம்மப் பல்லவ மன்னன் அழைக்கப்பட்டான் என்று வரலாற்றினைப் படிக்கும்போது நாம் அறிந்துள்ளோம்.

இவ்வாறு படைவீரர்கள் போரில் வென்ற பின் வைக்கும் தீயானது ‘படைக்குப்பின் தீ’ என்று உலா வருகிறது.

 

“பந்திக்கு முன்னதாக தீ படைக்கு பின்னதாக தீ’ என்ற பழமொழி, நாளடைவில் பொருள்மாறி பந்திக்கு முந்தி படைக்குப் பிந்தி என மாறிவிட்டது” என்று முதியவர் கூறினார்.

இதனைக் கேட்ட புலிக்குட்டி புவனா அவ்விடத்தைவிட்டு காட்டை நோக்கிச் சென்றது.

மாலை வேளையில் காட்டை அடைந்ததால் நேராக எல்லோரும் வழக்கமாகக் கூடும் வட்டப்பாறையினை அடைந்தது.

அப்பொழுதுதான் வட்டபாறையில் ஒவ்வொருவராக வர ஆரம்பித்திருந்தனர்.

புலிக்குட்டி புவனா காக்கை கருங்காலனை எதிர்பார்த்து காத்திருந்தது. சற்று நேரத்தில் காக்கைக் கருங்காலன் வந்தது.

எல்லோரும் காக்கை கருங்காலனைப் பார்த்து “வணக்கம் தாத்தா” என்று கூறினர்.

கருங்காலன் “வணக்கம் குழந்தைகளே. இன்று நான் வருவது சற்று தாமதமாகி விட்டது.

சரி இன்றைக்கான பழமொழியைக் கூறப் போவது யார்?” என்று கேட்டது.

இதற்காகவே காத்திருந்த புலிக்குட்டி புவனா “தாத்தா, இன்றைக்கு எனக்கு பழமொழியை கூற வாய்ப்பு தாருங்கள்.” என்று கூறியது.

கருங்காலனும் “சரி நீ சொல். இன்றைக்கு என்ன பழமொழி கூறப்போகிறாய்?” என்றது.

புலிக்குட்டி புவனா “நான் இன்றைக்கு  பந்திக்கு முந்தி படைக்குப் பிந்தி என்ற பழமொழியைக் கூறுகிறேன்” என்றது.

அதனைக் கேட்டவுடன் நரி நல்லதம்பி “அப்படினா படைக்குப் பின்னால் போக வேண்டும்; பந்திக்கு முன்னால் போக வேண்டும்.  

வீரமான இனத்தைச் சேர்ந்த நீ இப்படி ஒரு கோழையான பழமொழியைக் கேட்டு அதை எல்லோருக்கும் கூறுகிறாயா?” என்று கேலி பேசியது.

அதனைக் கேட்ட காக்கைக் கருங்காலன் “நல்லதம்பி. சற்று பொறு. புலிக்குட்டி புவனா முழுவதுமாகச் சொல்லட்டும். அதன்பின் ஒரு முடிவுக்கு வா” என்று கடிந்து சொல்லியது.

பின் புலிக்குட்டி புவனா பழமொழியையும் அதற்கான விளக்கத்தையும் தான் கேட்டவாறே கூறியது.

உடனே காக்கை கருங்காலன் “குழந்தைகளே எதிலும் அவசரம் கூடாது” என்றது.

பிறர் பேசுவதை முழுவதுமாக கேட்டு பேசுவதை புரிந்து கொண்ட பின்பு பதிலளிக்க வேண்டும்.

“சரி நாளை வேறு எவராவது பழமொழியைக் கேட்டு வந்து கூறுங்கள். இப்பொழுது செல்லுங்கள்” என்று கூறி கூட்டத்தைக் கலைத்தது.

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)

 

One Reply to “பந்திக்கு முந்தி படைக்குப் பிந்தி”

  1. இதை இப்படியும் பொருள் கொள்ளலாம்.

    தீ ஒரு இடத்தில் அன்னதானம் செய்ய உதவுகின்றது.

    அதே தீ மற்றொரு இடத்தில் அழிவு சக்தியாக இருக்கின்றது.

    எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்தே ஒரு பொருளின் பயன் உள்ளது.

    எனவே நாம் நம்மிடம் உள்ள செல்வங்களை நல்ல வழியில் பயன்படுத்த வேண்டும்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.