பந்து தரும் பண்பாடு

பந்து தரும் பண்பாடு என்ற கட்டுரை, விளையாட்டு மைதானத்தில் இருக்கும் பந்து, எப்படி நமக்கு வாழ்க்கைக்கான பண்பாட்டைச் சொல்லிக் கொடுக்கின்றது எனக் காட்டுகின்றது.

ஒவ்வொரு ஆட்டத்திலும் இரண்டு அணிகள் உண்டு. இரண்டு அணியினருமே பந்தினைத் தங்கள் வசம் வைத்துக் கொள்ளத் தான் முயல்கின்றனர்.

பந்தை வைத்திருப்பவர்கள் தாக்கப்படுகின்றார்கள்; தேக்கப்படுகின்றார்கள்; தடுக்கப்படுகின்றார்கள்; இடிக்கவும் படுகின்றார்கள்.

பந்தின் தொடர்பை விட்டு விடும்போது அவர்கள் பெறுகின்ற தாக்குதலும் முற்றுகைப் போக்குகளும் விடுபட்டுப் போகின்றன.

இவ்வாறு, ஒன்றை வைத்துக் கொண்டிருக்கும் பொழுது, அதனால் உண்டாகும் அவதிகளைத் தீர்த்துக் கொள்ள, நல்ல வழியொன்றை விளையாட்டுக்கள் கற்றுத் தருகின்றன.

பந்து என்பது மிகவும் முக்கியம். அதைத் தன் பக்கம் வைத்துக் கொண்டிருப்பது முக்கியமான இலட்சியம்.

அப்படி பந்தைப் பயன்படுத்திக் கொள்வதில்தான் திறமை, நுணுக்கம், ஆற்றல், ஆண்மை, அறிவார்ந்த உழைப்பு எல்லாமே அடங்கிக் கிடக்கின்றன.

பந்தையும் வைத்துக் கொள்ள வேண்டும். பயங்கரத் தாக்குதல்களிலிருந்தும் விடுபட வேண்டும். எப்படி?

 

பந்தை பயன்படுத்துகின்ற போதே, மற்றவர்களான தன்குழுவினருக்கு பந்தைத் தந்தாட வேண்டும். அதாவது மற்ற எதிரிகள் தாக்குதல் வருவதற்கு முன்னதாகவே கொடுத்து ஆடவேண்டும்.

 

இந்த அற்புத ரகசியத்தைத் தான் விளையாட்டுக்கள் கற்றுத் தருகின்றன.

ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்

ஆசை விட விட ஆனந்தமாமே!

எனும் திருமூலர் பாடலைப் பாடுங்கள்.

அதுபோலவே

பந்தைத் தொடத் தொட பாய்ந்திடும் ஆனந்தம்

பந்தை விடவிட பரமானந்தமாமே! என்றும் நாம் பாடலாம்.

பந்து என்பதை நாம் ஆசையாகக் கொள்ளலாம்; பொருளாகவும் கொள்ளலாம்.

இரண்டுமே நமக்கு வேண்டியவைதான். ஆனால் திண்டாடவும் செய்பவைதான். அவை இருந்தாலும் துன்பம்; இல்லாவிட்டாலும் துன்பம். என்றாலும், நாம் அதைப் பக்குவமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

விளையாடும்போது, பந்துடன் இருந்தால் மோதல், பந்துப் பக்கமே போகாவிட்டால் பார்ப்பவர்களுக்குக் கேலி, அது ஆண்மையற்ற ஒருவராய் அடுத்தவருக்குக் காட்டி விடுமே!

ஆகவே, பந்தை விளையாடவும் வேண்டும். ஆனால் பதைபதைப்பு சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.

ஆசை நமக்கு வேண்டும். ஆனால் அது நம்மை அவதிக்குள்ளே ஆழ்த்தி விடக் கூடாது.

பொருள் நமக்கு வேண்டும். ஆனால் அது நம்மை பாடாய்ப்படுத்தி விடக்கூடாது.

நமக்கு எதிரிகள் உண்டு; எதிர்ப்புகள் உண்டு; தாக்கும் சக்திகள் உண்டு; தடுக்கும் சக்திகளும் உண்டு.

இவற்றையெல்லாம் மனதில் எண்ணி, நாம் சர்வ ஜாக்கிரதையாக விளையாட வேண்டும் என்பது போலவே, உலகில் வாழ வேண்டும் என்பதை உணர்த்தவே விளையாட்டில் பந்துகள் இடம் பெற்றிருக்கின்றன. இதை நாம் இப்படியும் கொள்ளலாம்.

உலகிலே நன்மை தீமை என்ற இரண்டு எதிரெதிர் சக்திகள் இருக்கின்றன. நல்ல தெய்வங்கள். கெட்ட சாத்தான்கள் என்ற இரண்டும் இருக்கின்றன. அவைகளுக்கிடையே மனிதர்கள் பந்தாக உதைபடுகின்றனர். விளையாடப்படுகின்றனர்.

எதுவும் செய்யாது. இடர்பட்டுத் துள்ளும் பந்தாக இருப்பது போலவே மனிதர்களும், உலக மகாசக்திகளின் இடையிலே பந்துகளாக விளையாடப்படுகின்றனர்.

இப்படி நாம் எத்தனையோ கற்பனைகளையும் கருத்துக்களையும் கொள்ளலாம்.

பந்து தரும் பண்பாடு

பந்து என்பதற்கு உறவு என்றும் பொருள் கூறுவார்கள். உலகம் உருண்டை என்பதை பந்து வடிவம் என்றும் பாங்காக விவரித்துக் காட்டுவார்கள்.

இத்தகைய பந்துதான், விளையாட்டுக்களில் இடம் பிடித்துக் கொண்டிருப்பது மட்டுமன்றி, வழி நடத்திக் கொண்டும் இருக்கிறது.

பந்தைப் பக்குவமாகப் பெறுபவரும், மற்றவர்களிடம் பத்திரமாக ஆடுபவரும், நேரம் அறிந்து மற்றவர்களிடம் தள்ளி விடுபவரும் நிம்மதியாக விளையாடுகின்றார்கள். நேர்த்தியாக நடந்து கொண்டு, கீர்த்தியையும் பெற்றுக்கொள்கின்றார்கள்.

பந்தை முரட்டுத்தனமாகவும் முட்டாள் தனமாகவும் பயன்படுத்துபவர்கள், இடரிலும் இன்னலிலும், எதிர்பாராத ஏமாற்றத்திலும் தடுமாற்றத்திலும் துன்புற்று வாழ்கின்றார்கள்.

ஆகவே, நல்ல வாழ்க்கையை நடத்திட விரும்புவோர், இந்தப் பந்து விளையாட்டுக்களில் ஈடுபட்டால், போதும்.

எப்படி எப்படியெல்லாம் மனப்பக்குவம் அடைகின்றார்கள்; பண்பாட்டினைப் பெறுகின்றார்கள்; பரமானந்தம் கொள்கின்றார்கள்; பகுத்தறிவை மிகுதிப்படுத்திக் கொள்கின்றார்கள்;  பரிசுகளையெல்லாம் பெறுகின்றார்கள் என்று நாம் அறிந்து மகிழலாம்.

பந்து படுத்துவது பாடுகள் அல்ல; அது கொடுப்பது பண்பாடுகள் என்றே நாம் உறுதியாகக் கூறலாம்.

விளையாட்டுகள் எப்பொழுதும் அர்த்தமுள்ளவைதான் என்பதற்கு பந்து ஒரு உண்மை சொரூபமாகவே விளங்குகிறது.

எஸ்.நவராஜ் செல்லையா

எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள்

ஒரு மிகச் சிறந்த உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் தமிழ் எழுத்தாளர் ஆவார். (பிறப்பு 1937 – இறப்பு 2001)

இவர் விளையாட்டு, உடற்பயிற்சி, உடல்நலம், விளையாட்டுத் துறை (ஆங்கிலம் தமிழ்) அகராதி உள்ளிட்ட 27 நூற்களை எழுதியுள்ளார். இவரின் நூல்களை 2010 -2011 இல் தமிழ் நாடு அரசு நாட்டுடைமை ஆக்கியது.

முதன் முதலாக விளையாட்டுத்துறை பற்றி ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர்.

விளையாட்டுக் களஞ்சியம் மாத இதழை 1977 முதல் வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.