பனிக்கூழ் -ஐஸ்

நான் யார்?

ஏன் பிறந்தேன் நான்? என் வாழ்க்கை
முற்பிறவிப் பாவத்தின் பயனா இல்லை
முக்தியடையக் கிடைத்த வரமா?

அவதாரம் நானெடுக்கும் முன்பிருந்த
அகிலம் எப்படி? என்காலம் முடிந்தபின்பு
என்னாகும் இவ்வுலகம்?
இங்கேநான் இருப்பதின் பயனென்ன?

கேள்விகள் வலைபின்ன
கால்கள் தள்ளாட
சாலையில் நடந்தேன்.

‘வாழ்க்கை ஒரு பனிக்கூழ் (ஐஸ் கிரிம்) போல,
மனிதா, உருகுமுன் அனுபவித்து விடு’.
ஆட்டோ வாசகம் அறிவுரை சொன்னது.
மனது எளிதாக நடைபோட்டேன்;
எதிர்ப்பக்கம் திரும்பி.

– வ.முனீஸ்வரன்