பனிப்பாறை வீழ்ச்சி / பனிப்பாறை சரிவு

ஒரு பெரிய பனித் தொகுதி அல்லது பனிப்பாறை மலைச்சரிவை நோக்கி நகர்வதே பனிப்பாறை வீழ்ச்சி என்று அழைக்கப்படுகிறது. இவை உயர் அட்சப்பகுதிகளிலும், உயரமான மலைப்பகுதிகளிலும் ஏற்படுகின்றது.

இவை குளிர் காலம் மற்றும் வசந்த காலங்களில் பெரும்பாலும் ஏற்படுகின்றன. புவிஈர்ப்பு விசையினாலும் பனிக்கட்டியின் எடை அதிகரிப்பினாலும் ஏற்படும் பனிப்பாறை வீழ்ச்சிகள் தன்னிச்சையான பனிப்பாறை வீழ்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன.

நிலநடுக்கங்கள், அதிக மழை வீழ்ச்சி, மனித செயல்களினால் உருவாக்கக் கூடிய அதிக இரைச்சல், வேகமான பனிச்சறுக்கு விளையாட்டு, வெடிபொருட்களை வெடிப்பது போன்றவற்றினாலும் பனிப்பாறை சரிவு ஏற்படுகிறது.

90 சதவீத பனிப்பாறைச் சரிவானது மனித செயல்களினால் ஏற்படுகின்றன. உலக அளவில் இந்நிகழ்வினால் ஆண்டுதோறும் 150க்கும் மேற்பட்டோர் இறக்கின்றனர்.

பொதுவாக பெரிய பனிப்பாறை வீழ்ச்சியானது மணிக்கு 130 கி.மீ வேகத்தில் ஐந்து நிமிடங்களுக்கு ஏற்படுகின்றது.

வெப்பநிலை, காற்று, நிலப்பரப்பு, தாவரங்கள், பனிப்பாறையின் சரிவின் ஆழம் ஆகியவைகள் இந்நிகழ்வினை நிர்ணயிக்கும் காரணிகள் ஆகும். இக்காரணிகளைப் பொறுத்தே பனிப்பாறை வீழ்ச்சியின் விளைவுகள் குறைவாகவோ, அதிகமாகவோ அமைகின்றன.

பனிப்பாறை வீழ்ச்சிகள் ஏற்படும் பகுதிகளில் அதிகப் பனிப் பொழிவு ஏற்படும் போது அதன் தாக்கம் மேலும் தீவிரமாகிறது.

பனிப்பாறை வீழ்ச்சிகளினால் சாலைகள் துண்டிப்பு, சிறிய குடிசைகள், தாவரங்கள் மற்றும் காட்டு விலங்குகள் அழிக்கப்படுகின்றன.

 

பேரிடர் தணித்தல்

பனிப்பாறைகளின் வீழ்ச்சிகளை நிறுத்துவதோ அல்லது தடுப்பதோ கடினமானது. ஆனால் பனிப்பாறை வீழ்ச்சியின் சக்தியைக் குறைப்பதன் மூலம் அதன் தாக்கத்தைக் குறைக்கலாம்.

பனிப்பாறை வீழ்ச்சிகள் ஏற்படும் பகுதிகளில் கோடைவாஸ்தலங்கள், மக்கள் குடியிருப்புப் பகுதிகள், சாலைகள் மற்றும் இருப்புப்பாதைகள் அமைப்பதைத் தவிர்க்கலாம்.

மக்கள் வெடி பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட வேண்டும்.

மலைச்சரிவுப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளைச் சுற்றிலும் மரம் வளர்க்க ஊக்கப்படுத்த வேண்டும்.

பனிப்பாறை வீழ்ச்சி பகுதிகளில் அனைத்துவிதமான போக்குவரத்துகளும் தவிர்க்கப்பட வேண்டும்.

இந்நிகழ்வில் சிக்க நேர்ந்தால் சரிவுப்பகுதிகளில் இருக்கும் மரம் மற்றும் கட்டைகளை இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும்.

பனிச்சரிவில் அடித்துச் செல்லப்படும் போது மேற்பரப்புக்கு வர நீந்த முயற்சிக்க வேண்டும்.

 
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.