பனீர் பட்டர் மசாலா செய்வது எப்படி?

பனீர் பட்டர் மசாலா ஒரு அருமையான பஞ்சாபி உணவுவகை ஆகும். எளிய முறையில் சுவையான பனீர் பட்டர் மசாலா செய்முறை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பனீர் – 200 கிராம்

பெரிய வெங்காயம் – 200 கிராம்

தக்காளி – 100 கிராம்

பச்சை மிளகாய் – 1 எண்ணம்

மல்லி இலை – ஒரு கொத்து

எண்ணெய் – பொரித்தெடுக்க தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

 

தாளிக்க

வெண்ணெய் – ஒரு மேஜைகரண்டி

பெருஞ்சீரகம் (அ) சோம்பு – ½ தேக்கரண்டி

பட்டை – ஒரு துண்டு

கிராம்பு – 1 எண்ணம்

கல்பாசி – சிறிதளவு

அன்னாசிப்பூ – 1 எண்ணம்

ஏலக்காய் – 1 எண்ணம்

சாதிப்பத்திரி – சிறிதளவு

பிரின்சி இலை – சிறிதளவு

 

மசாலா

மல்லித்தூள் – 2 மேஜைகரண்டி

சீரகத்தூள் – 1 மேஜைகரண்டி

கரம் மசாலா – 1 மேஜைகரண்டி

மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் – 1 மேஜைகரண்டி

 

செய்முறை

பனீரை சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை தோலுரித்து சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும். தக்காளியைக் கழுவி சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும். மல்லி இலையை பொடியாக வெட்டிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நடுவில் நீளவாக்கில் கீறிக் கொள்ளவும்.

பனீர் பட்டர் மசாலா செய்யத் தேவையான பொருட்கள்
பனீர் பட்டர் மசாலா செய்யத் தேவையான பொருட்கள்

 

முதலில் பனீரை எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து எடுத்து பின் அதனை கொதிக்க வைத்த நீரில் போடவும். இரண்டு நிமிடங்கள் கழித்து பனீரை வெளியே எடுத்து நீரினைப் பிழிந்து விடவும்.

வெந்நீரில் நனைய வைக்கும்போது
வெந்நீரில் நனைய வைக்கும்போது

 

பிழிந்து எடுத்த பனீர்
பிழிந்து எடுத்த பனீர்

 

வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சதுரங்களாக வெட்டிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கிய நிலையில் தக்காளி சேர்த்து வதக்கவும்.வெங்காயம், தக்காளி கலவை ஆறியவுடன் மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த வெங்காயம் தக்காளி கலவை

அரைத்த வெங்காயம் தக்காளி கலவை

 

அடுப்பில் குக்கரை வைத்து வெண்ணெயைச் சேர்க்கவும். வெண்ணெய் உருகியதும் சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரின்சி இலை, சாதிப்பத்திரி, அன்னாசிப்பூ, கல்பாசி சேர்த்து தாளிக்கவும்.

பின் அதனுடன் வெங்காயம், தக்காளி மசாலாக் கலவை, கீறியுள்ள பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்க்கவும். மல்லித்தூள், மிளகாய்தூள், சீரகத்தூள், கரம்மசாலாத் தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

குக்கரில் பனீர் கிரேவி
குக்கரில் பனீர் கிரேவி

 

குக்கரை மூடி விடவும். ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். குக்கரின் ஆவி அடங்கியவுடன் குக்கரைத் திறந்து அதனுடன் வறுத்து பிழிந்து வைத்துள்ள பனீரைச் சேர்க்கவும்.

கிரேவி கொதித்தவுடன் அடுப்பை அணைத்துவிடவும். சுவையான பனீர் பட்டர் மசாலா ரெடி.

சுவையான பனீர் பட்டர் மசாலா
சுவையான பனீர் பட்டர் மசாலா

 

இதனை சப்பாத்தி, தோசை, புரோட்டா, நாண் ஆகியவற்றுடன் சேர்த்து உண்ணலாம்.

 

குறிப்பு:

விருப்பமுள்ளவர்கள் மல்லிப் பொடி, மிளகாய் பொடி, சீரகப் பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றிற்கு பதிலாக 2¼ ஸ்பூன் மசாலா பொடி சேர்த்து பனீர் பட்டர் மசாலா தயார் செய்யலாம்.

விருப்பமுள்ளவர்கள் இஞ்சி, பூண்டு விழுதினைச் வதக்கி மசாலா கலவையில் சேர்க்கலாம்.

விருப்பமுள்ளவர்கள் முந்திரிப்பருப்பினை அரைத்து மசாலா கலவையில் சேர்க்கலாம்.

பனீரை அதிக நேரம் வெந்நீரில் ஊற விடக்கூடது.

பனீரை மீடியம் சைஸாக இருக்கும்படி வெட்டவும்.

ஜான்சிராணி வேலாயுதம்