பனை – இயற்கை நிலநீர் சேமிப்பான்

பனை இயற்கை நிலநீர் சேமிப்பான் என்பது ஆச்சரியமான ஆனால் அதிசயத்தக்க உண்மை. பனை பூலோகத்தின் கற்பகத்தரு என்று அழைக்கப்படுகிறது.

கற்பகத்தரு என்பது தேவலோகத்தில் உள்ள மரம். இம்மரத்தின் கீழ் நின்று ஏதேனும் ஒன்றை நினைத்தால் அது அவர்களுக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அதுபோல தன்னுடைய பாகங்களான இலை, காய், விதை, பட்டை, நார், வேர் என எல்லாவற்றையும் மனிதர்களின் பயன்பாட்டிற்கு வழங்கக்கூடியதாக உள்ள பனை ‘பூலோக கற்பகத்தரு’ என்று அழைக்கப்படுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

இன்றைக்கும் குளங்கள் மற்றும் கண்மாய்களின் கரையைச் சுற்றிலும் பனை மரங்கள் இருப்பதைக் காணலாம்.

நீர்நிலைகளின் கரைகளில் உள்ள பனைமரங்களுக்கும் நிலத்தடி நீருக்கும் மிகப் பெரிய தொடர்பு உள்ளது.

அதாவது பொதுவாக மரங்களின் வேர்கள் பக்கவாட்டில் கிளைத்துப் பரவுகின்றன. ஆனால் பனை மரத்தின் வேரானது செங்குத்தாக கீழ்நோக்கி நிலத்தடி நீர்வழிப்பாதைத் தேடிச் செல்கிறது.

அதோடுமட்டுமில்லாமல் பனைமரமானது தனது வேரினை குழாய் போன்று செயல்படச் செய்து, நிலத்தின் மேற்பரப்பில் உள்ள நீரினை நிலத்தடி நீர்ப்பாதைக்குக் கொண்டு செல்கிறது.

இதனால் நிலத்தின் மேற்பரப்பு நீரானது இயற்கையாகவே நிலத்தடிக்கு பனைமரத்தின் வேர்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, வறண்ட காலங்களிலும் நீர்நிலைகளில் நீரூற்றைப் பெருகச் செய்து நீர்இருப்பை உறுதி செய்கிறது.

இதனை அறிந்த நம் முன்னோர்கள் நீர்நிலைகளின் கரையோரங்களில் பனைமரங்களை வளரச் செய்துள்ளனர்.

பனைமரத்தின் வேர்கள் மூலம் இயற்கையாகவே நிலத்தடி நீர்மட்டத்தை உயரச் செய்து, வறண்ட காலங்களிலும் நீருற்றின் மூலம் நீர்நிலைகளில் நீரினைப் பெற்று வந்துள்ளனர்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் நிலத்தடி நீரினை இயற்கை வழியில் பெருகச் செய்யும் பனைமரங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன.

இதனால் பனைமரத்தின் வேர்கள் மூலம் இயற்கைவழியில் நிலத்தடி நீர்மட்டச் செறிவூட்டம் நடைபெறுதல் குறைந்து நீர்நிலைகள் வறண்டு போவதற்கு முக்கிய காரணமாகி விடுகிறது.

ஆதலால் நிலத்தடி நீர்மட்டத்தை இயற்கை வழியில் உயர்த்த பனைமரத்தின் பங்களிப்பு பற்றிய விழிப்புணர்வினை எல்லோரிடமும் உண்டாக்க வேண்டும்.

ஏனைய மரங்களைப் போல் பனை மரம் வளர்ப்பிற்கு என்று தனிப் பராமரிப்பு, பாதுகாப்பு என சிறப்புக் கவனம் ஏதும் தேவையில்லை.

ஏனெனில் பனைமரம் கட்டாந்தரை, கடற்கரையோரங்கள், ஆற்றுப்படுகை உள்ளிட்ட எல்லா வகையான நிலங்களிலும் உரமோ, தண்ணீரோ, பாதுகாப்போ தேவையில்லாமல் தானாகவே வளரும் தன்மையுடையது. எனவே இதனை வளர்ப்பது என்பது எளிது.

பனைமரத்தில் இருந்து அதனுடைய நேரடிப் பயன்களான பதநீர், நுங்கு, பனங்காய், பனம்பழம், குருத்தோலை போன்றவற்றைப் பெறுவதற்கு, பனைமரம் நட்டு வைத்ததிலிருந்து அறுபது, எழுபது வருடங்கள் ஆகும். ஆதலால்தான் ‘பனையை வளர்த்தவன் பார்த்திட்டு போவான்’ என்ற வழக்குமொழி உண்டானது.

ஆனால் இன்றைக்கு நிலத்தடி நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வரும் சூழலில், பனைமரம் வளரத் தொடங்கிய உடனே, அதன் வேர்கள் வழியாக இயற்கைவழியில் நிலத்தடி நீர் செறிவூட்டம் மூலம் நிலநீர் மட்டத்தை உயர்த்தலாம் என்பதை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

நீர்நிலைகளைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் நீர்நிலைகளைச் சுற்றிலும் உள்ள பனை மரங்களையும் பாதுகாப்பது மிகவும் அவசியம். இதனை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

பனைமரங்கள் இல்லாத நீர்நிலைகளில் புதிதாக பனைமரங்களை வளர்த்து, இயற்கை வழியில் நிலத்தடி நீர்மட்டச் செறிவூட்டம் நடைபெற்று நிலத்தடி நீர்மட்டம் உயர வழி செய்ய வேண்டும்.

பனை இயற்கை நிலநீர் சேமிப்பான் என்பது நம்முன்னோர்களின் அறிவியல். அதனை நாமும் பின்பற்றுவோம்.

பனையை வளர்ப்போம். நிலத்தடி நீரை உயர்த்துவோம்.

 வ.முனீஸ்வரன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: