பனை ஓலை சீனிக் கொழுக்கட்டை செய்வது எப்படி?

அவித்த கொழுக்கட்டை

பனை ஓலை சீனிக் கொழுக்கட்டை கிராமப்புறங்களில் கோவில் திருவிழாவின் போது வீடுகளில் செய்யும் இனிப்புகளில் ஒன்று.

எங்கள் ஊரில் (முகவூர், இராஜபாளையம் தாலுகா, விருதுநகர் மாவட்டம்)  பங்குனியில் கொண்டாடப்படும் அம்மன் கோவில் திருவிழாவின் போதும், சித்திரை வருடப்பிறப்பின் போதும்  பனை ஓலை சீனிக் கொழுக்கட்டை செய்து வழிபாட்டில் படைக்கப்படுகிறது.

இந்த மாதத்தில்தான் பனை மரத்திலிருந்து புதிதாக குறுத்தோலை கிடைக்கும்.

புதிய பச்சரிசி, சீனி, புதிய குறுத்தோலை ஆகியவற்றைப் பயன்படுத்தி செய்யப்படும் கொழுக்கட்டையானது மணமாகவும், மிகவும் ருசியாகவும் இருக்கும்.

இனி பனை ஓலை சீனிக் கொழுக்கட்டை செய்முறை பற்றிப் பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 1.5 கிலோகிராம்

சீனி – 1 கிலோ கிராம்

ஏலக்காய் – 10 எண்ணம்

சுக்கு – 20 கிராம்

தேங்காய் – ஒரு எண்ணம் (மீடியம் சைஸ்)

பனை ஓலை – தேவையான அளவு

 

செய்முறை

முதலில் பச்சரியை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

பின்னர் அரிசியில் தண்ணீரை வடித்துவிட்டு ஒரு உலர்ந்த துணியில் நிழலில் அரிசியினை உலர்த்தி விடவும்.

பத்து நிமிடங்கள் கழித்து அரிசியினை மிக்ஸியிலோ அல்லது மிசினிலோ கொடுத்து இடித்துக் கொள்ளவும்.

இடித்த பச்சரிசி மாவு
இடித்த பச்சரிசி மாவு

 

தேங்காயை உடைத்து திருகிக் கொள்ளவும்.

ஏலக்காயையும், சுக்கையும் மிக்ஸியில் போட்டு பொடியாக்கிக் கொள்ளவும்.

பனை ஓலையின் அகன்ற இதழ்களை ஒரு சாண் அளவிற்கு கொழுக்கட்டைகளை இதழ்களுக்கு இடையில் வைக்குமாறு நறுக்கிக் கொள்ளவும்.

மிக்ஸியில் சீனியை பொடித்துக் கொள்ளவும்.

வாயகன்ற பாத்திரத்தில் இடித்த மாவினைக் கொட்டவும்.

பின் அதனுடன் பொடித்த சீனி, திருகிய தேங்காய், பொடியாக்கிய ஏலக்காய், சுக்கு கலவை ஆகியவற்றைச் சேர்க்கவும்.

அரிசி மாவும் சீனியும்
அரிசி மாவும் சீனியும்

 

ஏலக்காய் சுக்குத்தூளைச் சேர்க்கும்போது
ஏலக்காய் சுக்குத்தூளைச் சேர்க்கும்போது

 

பின் மாவினை ஒரு சேர அழுத்தி சப்பாத்தி மாவு போல் பிசையவும்.

மாவு பிசையும்போது
மாவு பிசையும்போது

 

மாவு பிசையும்போது
மாவு பிசையும்போது

 

மாவினை அழுத்தி வைக்கும்போது
மாவினை அழுத்தி வைக்கும்போது

 

பிசைந்த மாவை ஒரு பாத்திரத்தில் மூடி ஆறு மணி நேரம் வைக்கவும். இதனால் சீனி மாவுடன் ஒன்றறக் கலந்துவிடும்.

சரியான பதத்தில் மாவு
சரியான பதத்தில் மாவு

 

பின் பிசைந்த மாவிலிருந்து சிறிதளவு மாவினை எடுத்து படத்தில் காட்டியவாறு கொழுக்கட்டைகளாக ஒரு சேரப் பிடிக்கவும்.

கொழுக்கட்டை பிடிக்கும்போது
கொழுக்கட்டை பிடிக்கும்போது

 

பின் அதனை நறுக்கிய குறுத்தோலையின் மையத்தில் வைத்து கொழுக்கட்டையின் ஓரங்களை அழுத்தவும். இவ்வாறு எல்லா மாவினையும் செய்யவும்.

பனை ஓலையில் வைத்து அழுத்தியபின்
பனை ஓலையில் வைத்து அழுத்தியபின்

 

குறுத்தோலையில் வைக்கப்பட்டுள்ள கொழுக்கட்டைகளை இட்லிப் பானையில் வேக வைத்து எடுக்கவும்.

அவித்த கொழுக்கட்டை
அவித்த கொழுக்கட்டை

 

குறுத்தோலையில் இருந்து கொழுக்கட்டை பிரித்து எடுத்து வாயகன்ற தட்டு போன்ற பாத்திரத்தில் தனித்தனியே எடுத்து வைக்கவும். (பனை ஓலை முறம் இருந்தால் அதில் கொழுக்கட்டைகளைப் போடவும்). சுவையான பனை ஓலை சீனிக் கொழுக்கட்டை தயார்.

சுவையான பனை ஓலை சீனிக் கொழுக்கட்டை
சுவையான பனை ஓலை சீனிக் கொழுக்கட்டை

 

குறிப்பு

கொழுக்கட்டைகளை எடுத்து வைக்க பனை ஓலையால் செய்யப்பட்ட முறத்தினைப் பயன்படுத்தினால் கொழுக்கட்டை தனிப்பட்ட மணத்துடன் சுவையாக இருக்கும்.

முறத்தில் கொழுக்கட்டையை வைப்பதால் அடிப்பாகத்தில் காற்றோட்டமாக இருப்பதால் கொழுக்கட்டை விரைவில் காய்ந்து நெகிழாது இருக்கும்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

Visited 1 times, 1 visit(s) today

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.