பனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

பனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

பனை தமிழ்நாட்டின் மாநில மரம் என்பது எல்லோருக்கும் தெரியும். பனையின் தாயகம் ஆப்பிரிக்கா ஆகும். ஆயினும் ஆசிய நாடுகளில்தான் அதிகளவு காணப்படுகிறது.

இது புல் இனத்தைச் சார்ந்த தாவரம். எனினும் நம் நாட்டில் மரம் என்றே அழைக்கப்படுகிறது.

இதனுடைய விதைகள் இயற்கையாகவே விழுந்து முளைக்கும் திறன் பெற்றவை. பனை மரம் முளைத்து முழுமரமாக முதிர்ச்சியடைய 30 ஆண்டுகள் வரை எடுத்துக் கொள்ளும்.

சுமார் 30 மீட்டர் உயரம் வளரும் தன்மை கொண்ட இம்மரத்தின் தண்டுப் பகுதியின் விட்டம் 1 மீட்டர் வரை இருக்கும்.

இம்மரத்தின் உச்சியில் இதனுடைய இலைகள் வட்டமாக அமைத்திருக்கும். பனையின் இலைகள் ஓலைகள் என்றழைக்கப்படுகின்றன.

பழங்காலத்தில் பனை ஓலைகளைப் பதப்படுத்தி, சுத்தம் செய்து அவற்றை எழுதுவதற்குப் பயன்படுத்தினர். இவையே ஓலைச் சுவடிகள் என்றழைக்கப்பட்டன.

பனை ஓலைச் சுவடி அருங்காட்சியகம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ளது.

பனையில் ஆண் பனை, பெண் பனை என பாலினங்கள் தனித்தனியே காணப்படுகின்றன.

ஆண் பனையில் நுங்கு, பனம்பழம் கிடைக்காது.

ஆண் பனை ‘அழகுப் பனை’ என்றும் பெண் பனை ‘பருவப் பனை’ என்றும் அழைக்கப்படுகிறது.

‘தினை’ என்ற தானியம் மிகவும் சிறியது. அந்த தினை அளவு சிறிய உதவியை ஒருவர் செய்திருந்தாலும், அதனை பனை போல் பெரியதாகக் கருதி உதவியின் அருமை தெரிந்தவர் போற்றுவர் என்கிறார் திருவள்ளுவர் செய்நன்றியறிதல் என்னும் அதிகாரத்தில்.

நம் நாட்டில் சுமார் 10 கோடி பனை மரங்கள் இருக்கின்றன. அதில் 5 கோடிக்கு அதிகமாக தமிழகத்தில் உள்ளன.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் பூங்கா ஒன்று உள்ளது. ஆங்கு பனை மரங்கள் தனியாக பராமரிக்கப்படுகின்றன. இதில் கிளைக்களைக் கொண்ட ‘ஹைப்பேன் திபைக்கா’ என்ற பனை வகையும் உள்ளது.

பனையில் கிடைக்கும் உணவுப் பொருட்கள்

பனையிலிருந்து கிடைக்கும் உணவுப் பொருட்களில் முதன்மையானது பதநீர். பதநீரைக் காய்ச்சி கருப்பட்டி (பனை வெல்லம்), பனங்கற்கண்டு, பனங்கூழ், பனஞ்சீனி போன்ற உணவுப் பொருட்கள் தயார் செய்யப்படுகின்றன.

ஒரு பனை மரம் ஓராண்டில் சுமார் 150 லிட்டர் பதநீர் தரும். இதைக் காய்ச்சினால் 15 கிலோ வரை பனை வெல்லம் கிடைக்கும்.

பதநீரைத் தவிர நுங்கு, பனங்கிழங்கு, பனங்காய், பனம்பழம், பனந்தவுன் போன்ற உணவுப் பொருட்களையும் பனை நமக்குத் தருகிறது.

புறநானூற்றுப் பாடலில் சோழநாட்டுப் படை நுங்கு, பனம்பழம், சுட்ட பனங்கிழங்கு ஆகியவற்றை உண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பழங்காலத்தில் பனம்பழத்தைச் சோப்பாகவும், பற்பசையாகவும் பயன்படுத்தியுள்ளனர்.

சுற்றுச்சூழலில் பனையின் முக்கியப்பங்கு

கடற்கரையில் காணப்படும் பனைமரங்கள் காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்தும்.

பனைமரத்தைச் சுற்றிலும் மணல் திட்டுகள் உருவாகி கடல் நீர் நிலப்பரப்பிற்குள் உட்புகவது தடுக்கப்படும். இதனால் சுனாமி, கடல் சீற்றம் உள்ளிட்ட இயற்கை பேரிடரின்போது கரைகள் பாதுகாக்கப்படும்.

பனை பக்கவாட்டு வேர்களை உடையது. இவ்வேர்கள் கொத்தாக நீரினைத் தேடி 100 அடிக்குக்கு மேல் எளிதாக நீண்டு நிலத்தடி நீர்வழிப் பாதைத் தேடிச் செல்கிறது. அதோடு இவ்வேர்கள் குழாய் போல் செயல்பட்டு நிலமேற்பரப்பு நீரினை நிலத்தடிக்கு எளிதில் கடத்துகின்றன.

எனவே நிலத்தடி நீர்மட்டம் உயர பனைமரங்கள் இயற்கையாகவே உதவுகின்றன.

பனையின் ஓலை விசிறி போல் இருப்பதால் மரத்தில் விழும் மழைநீரை சிதறாமல் தடுத்து, தண்டு வழியாக வேர் பகுதிக்கு கொண்டு செல்ல உதவுகின்றன. இதனால் இம்மரம் குறைந்தளவு மழைப்பொழிவு உள்ள இடங்களிலும் செழித்து வளரும்.

பனை ஓலை மற்றும் மட்டையில் இருந்து விசிறி, முறம் உள்ளிட்ட ஏராளமான வீட்டு உபயோகப் பொருட்கள் தயார் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பனங்காடை, தூங்கணாங்குருவி, கூழைகடா, கரிச்சான் உள்ளிட்ட பறவைகள் பனையில் கூடுகட்டி வாழுகின்றன. ஆகவே பல்லுயிர் சூழல் உருவாக்கதிலும் பனை முக்கியப் பங்காற்றுகிறது.