பப்பற வீட்டிருந்து உணரும் நின்அடியார்

பப்பற வீட்டிருந்து உணரும் நின்அடியார் என்று தொடங்கும் இப்பாடல், திருவாசகத்தில் இடம் பெற்றுள்ள திருப்பள்ளியெழுச்சியின் ஆறாவது பாடலாகும்.

பிறவிப் பிணி தீர்க்கும் இறைவனான சிவபெருமானின் மீது, திருவாதவூராராகிய மாணிக்கவாசகர் திருவாசக திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களைப் பாடினார்.

மார்கழி மாத இறைவழிபாட்டில திருவெம்பாவை பாடல்கள் 20, திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் 10 சேர்த்து மொத்தம் 30 பாடல்கள்; பாடப்படுகின்றன.

தமிழின் தொண்ணூற்றாறு பிரபந்தங்களின் வகைகளுள் திருப்பள்ளியெழுச்சியும் ஒன்று.

உயிரினங்களைப் போன்று இறைவனும் இரவில் உறங்கிக் கொண்டிருப்பதாகக் கருதி, துயில் எழுப்புவதாக இப்பாடல்கள் அமையப் பெற்றுள்ளன. அதாவது நம் உள்ளத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் இறைஞானத்தை தட்டி எழுப்ப எனப் பொருள் கொள்ளலாம்.

பொதுவாக திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களில், அதிகாலைப் பொழுதில் சுற்றுப்புறத்தில் நிகழும் நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன.

திருப்பெருந்துறையில் இருக்கும் சிவபெருமானின் மீது மாணிக்கவாசகர் பாடிய திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களும், ரங்கநாதப் பெருமானின் மீது தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாடிய திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களும் புகழ் பெற்றவை.

மனதின் உட்காட்சியால் உன்னை உணரும் ஞானியரும், பந்த பாசங்களை அறுத்தவர்களும், மைதீட்டிய விழிகளைக் கொண்ட பெண்களும் தலைவனாகக் கொண்டு உன்னை வணங்குகின்றனர். பிறவிப் பிணியைப் போக்குபவனே பள்ளியிலிருந்து எழுந்து அருள்வாயாக.

உமையம்மையின் மணவாளனே, உன்னை மனதால் உணரும் ஞானியரும், பந்த பாசங்களை களைந்த அடியவர்களும், மைதீட்டிய கண்களை கொண்ட பெண்களும் உன்னை போற்றி வணங்குகின்றனர். உயிர்களின் பிறவிப் பிணியைப் போக்கும் தலைவனே பள்ளியிலிருந்து எழுந்து அருள்வாயாக என்று மாணிக்கவாசகர் வேண்டுகோள் விடுக்கின்றார்.

பிறவி வேரை அறுத்து பூமியில் மீண்டும் பிறவாமல் காத்தருள, இறைவனை பூரண சரணாகதி அடைவதே வழியாகும் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.

இனி திருப்பள்ளியெழுச்சி ஆறாவது பாடலைக் காண்போம்.

திருப்பள்ளியெழுச்சி பாடல் 6

பப்பற வீட்டிருந்து உணரும் நின்அடியார்

பந்தணை வந்து அறுத்தார் அவர் பலரும்

மைப்புறக் கண்ணியர் மானுடத்து இயல்பின்

வணங்குகின்றார் அணங்கின் மணவாளா

செப்புறு கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்

திருப்பெருந்துறையுறை சிவபெருமானே

இப்பிறப்பறுத்து எமை ஆண்டருள் புரியும்

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

விளக்கம்

பிறவி வேரை அறுத்து புவியில் மீண்டும் பிறவாமல் காத்தருள வேண்டுவதாக இப்பாடல் கூறுகிறது.

உமையம்மையின் மணவாளனே,

சிவந்த தாமரை மலர்கள் சூழ குளிர்ச்சியான வயல்கள் நிறைந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே,

பரபரப்பை அறவே விட்டு மனதின் உட்காட்சியில் உன்னை கண்டு உணரும் மெய்ஞானியர் பலரும், இந்த மண்ணுலகிற்கு வந்து பாசக்கட்டுகளை அறுத்தவர் பலரும், கண்களில் மையைப் பூசிய பெண்களும் உன்னைத் தலைவனாகக் கொண்டு வணங்குகின்றனர்.

எங்களுடைய இந்தப் பிறவியின் வேரை அறுத்து, மீண்டும் பிறவாமை நிலையை அருளுபவனே! பள்ளியிலிருந்து எழுந்தருள்வாயாக.

பூரண சரணாகதி மூலம் இறைவனை அணுகினால் பிறவிப் பிணியின் வேர் அறுபட்டு மீண்டும் பிறவாமை என்ற நிலைத்த இன்பத்தை அடையலாம் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.