பம்பை அச்சங்கோவில் வைப்பாறு நதிகள் இணைப்பு

பம்பை அச்சங்கோவில் வைப்பாறு நதிகள் இணைப்பு நிறைய நன்மைகள் தரும் ஒரு திட்டமாகும்.

ஆங்கிலப் பொறியாளர் சர்.ஆர்தர் தாமஸ் காட்டன் என்பவர் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னரே “நாடு முழுவதும் உள்ள பெரிய நதிகளை இணைப்பதன் மூலம் இந்தியாவை வளமிக்க நாடாக மாற்ற முடியும்” என்றார்.

வீணாகும் தண்ணீர்

இந்தியாவின் மேற்குப்பகு முழுவதும் மலைகளாகவும், கிழக்குப்பகுதி நெடுகிலும் சமவெளிகளாகவும் உள்ளன. நாட்டின் மிகப் பெரும்பாலான பகுதிக‌ள் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சரிவாக உள்ளன.

ஆண்டுக்கு 200 டி.எம்.சி. தண்ணீர் கேட்டு கர்நாடகத்துடன் சண்டைப் போட்டுக்கொண்டு இருக்கிறோம்.

 

ஆனால் கர்நாடாகம் மற்றும் கேரள மாநிலங்களின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்யும் மழையால் ஆண்டுக்கு 4,000 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலுக்குச் செல்கிறது.

 

தமிழ்நாட்டிலும் மழைகாலங்களில் சுமார் 150 டி.எம்.சி. மழைநீர் வீணாக கடலில் கலக்கிறதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இத்தண்ணீரைத் தேக்க முடியும். இதனால் புதிய பாசனப்பகுதிகள், புதிய நீர்மின் திட்டங்கள் எனப் பல வளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இத்திட்டத்திற்கு 3 மாநிலங்களும் ஒப்புக்கொள்ளவேண்டும்.

மத்திய நீர்வளத்துறையின் முன்னாள் தலைமைப்பொறியாளர் பி.எஸ்.பவானிசங்கர் “மேற்குக் கடலை நோக்கிச் செல்லும் நீரை திருப்ப நடவடிக்கை மேற்கொண்டால், தமிழகம், ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுடன் கர்நாடாக மாநிலத்துக்கு இருந்து வரும் நதிநீர்ப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்” என்று கூறியுள்ளார்.

நதிநீர் இணைப்புக்குறித்து பொதுநல வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு தீர்ப்பினை வழங்கியது. அந்தத் தீர்ப்பில் ‘நதி நீர் திட்டத்தைச் செயல்படுத்த ஒரு சிறப்பு குழுவினை அமைக்கவேண்டும்’ என்று கூறப் பட்டிருந்தது.

ஓராண்டு கழித்து 2013ல் சிறப்பு குழு அமைக்கப்பட்டது. ஆனால் அந்தக் குழுவின் கூட்டத்தை ஒரு முறையாவது கூட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

 

இது தொடர்பாக இத்திட்டத்தை மத்திய அரசின் நீர் வளத்துறையின் அங்கமான தேசிய நீர் மேம்பாட்டு அமைப்பு ஆய்வு செய்து பம்பை அச்சங்கோவில் வைப்பாறு நதிகள் இணைப்பு திட்டத்தினைப் பரிந்துரை செய்துள்ளது.

 

இத்திட்டத்திற்கு 1994 இல் திட்டச் செலவாக ரூ.1398 கோடி ரூபாய் ஆகும் என மதிப்பிடப்பட்டது. ஆனால் கேரள அரசு நீர்ப்பசானத்துறை அமைச்சர் P.J. ஜோசப் “பம்பை, அச்சங்கோவில், வைப்பாறு நதிகளை இணைப்பது ஒரு முடிந்து போன அத்தியாயம்” என்று 01.07.2014 அன்று கூறியுள்ளார். இது முற்றிலும் அரசியல் உள்நோக்கம் உடைய கூற்று.

கேரளத்தில் மொத்தம் 44 ஆறுகள் ஓடுகின்றன. இந்த ஆறுகளில் ஆண்டுதோறும் 2500 டி.எம்.சி. மழைநீர் ஓடுகிறது.

கேரளத்தில் பெரும்பகுதிக‌ள் மலைசார்ந்த பகுதிகளாக இருப்பதால், இந்த அளவு தண்ணீரைச் சேகரிக்க வாய்ப்பில்லை. இத்தண்ணீரில் 70% அரபிக்கடலில் கலந்து வீணாகிறது.

இந்த நதிகளில் சிலவற்றின் குறுக்கே அணை கட்டி, அதில் இருந்து மின் உற்பத்தி செய்யவும், உபரி நீரின் ஒரு பகுதியை அண்டை மாநிலங்களின் சமவெளிப் பகுதிகளுக்குத் திருப்பி உணவு உற்பத்தியைப் பெருக்க வாய்ப்புள்ளது.

பம்பை அச்சங்கோவில் வைப்பாறு நதிகள் இணைப்பு

பம்பை, அச்சங்கோவில் ஆகிய இரு ஆறுகளிலும் சுமார் 250 டி.எம்.சி. மழைநீர் ஓடுகிறது.

பம்பை, அச்சங்கோவில் நதிகளின் குறுக்கே 3 அணைகள் கட்டி அவற்றை இணைத்து, தண்ணீரின் ஒரு பகுதியை தமிழக விவசாயத்திற்கும், மீதியைக் கேரளத்துக்கும் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கலாம் என மத்திய அரசின் தேசிய நீர் மேம்பாட்டு மையம் திட்டம் வகுத்துள்ளது.

பம்பை நதியில், பம்பா கல்லாற்றின் குறுக்கே ஒரு அணை கட்ட வேண்டும்.

அச்சங்கோவில் கிராமத்தில் இருந்து 11 கிமீ. தூரம் உள்ள ‘ட்யூரா’ கிராமத்துக்கு வட கிழக்கில் ஒரு அணை கட்ட வேண்டும். பின்னர் பம்பை நதியில் இருந்து அச்சங்கோவில் நதிக்குத் தண்ணீரை கொண்டு வரவேண்டும்.

அதனைத் தொடர்ந்து அச்சங்கோவில் கல்லாறு பகுதியில் 9 கி.மீ. நீளத்துக்கு மலையைக் குடைந்து, நெல்லை மாவட்டம் மேக்கரை கிராமத்திற்குக் கொண்டு வரவேண்டும்.

அதன் பின்னர் 51 கிமீ. தூரம் கால்வாய் வெட்டப்பட்டு வைப்பாற்றுக்குத் தண்ணீர் கொண்டுவரலாம்.

இதனால் விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்கள் பயன்பெறுவர். இந்த நீர் சாத்தூர் வைப்பாறு வழியே சென்று வேம்பாரில் கடலில் கலக்கும். அதற்கு முன்னதாக இராமநாதபுரம் மாவட்டத்திற்கும் திருப்பி விடலாம்.

இதுபோன்ற திட்டங்கள் நிறைவேற்றப் பட்டால்தான் வருங்காலங்களில் தண்ணீர் பிரச்சனை குறையும்.

 

வறண்ட பூமியின் வாழ்வாதாரமான பட்டாசு தொழில் நலிவடைந்து வரும் நிலையில் இத்திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிட்டது. இதனால் பெருகும் வேளாண்மை நிறையப் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும்.

 

எனவே, மத்திய மாநில அரசுகள் மக்கள் நலனில் கவனம் செலுத்தி இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

நாம் பட்ட சிரமங்கள் எல்லாம் நம்மோடு முடிந்து போகட்டும். நம் வருங்கால தலைமுறைக்களுக்காவது நல்வாழ்க்கைக் கிட்டட்டும் என்ற உன்னத உணர்வோடு பம்பை – அச்சங்கோவில் – வைப்பாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தியே ஆக வேண்டும். இதனை நண்பர்களுடன் விவாதியுங்கள், விழிப்புணர்வு ஏற்படட்டும்.

சிவகாசி, ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்
albertselvaraj123@gmail.com
கைபேசி எண்: 9442225545