சொர்க்க வனம் 5 – பயணத்தில் தடுமாற்றம்

அது அகண்ட ஆறு. நீளமும் மிக அதிகம். அது, அருகிலிருந்த ஒரு மலை உச்சியில் பிறந்து, பள்ளத்தாக்கு வழியே பாய்ந்து பன்னெடுங்காலமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆற்றின் அக்கரையில் உயர்ந்த மரங்கள் எண்ணற்ற அளவில் இருந்தன. இக்கரையில் மணற்பரப்பு விரவி இருந்தது.

அதையடுத்த மேட்டுப் பகுதியில் புதர்ச் செடிகள் மண்டியிருந்தன. ஆங்காங்கே குட்டை மரங்களும் இருந்தன.

நீலவானம், சூரிய ஒளியால் பளிச்செனக் காட்சி தந்தது. அவ்வப்பொழுது வெண்மேகங்கள் பற்பல வடிவில் விரைவாய் நகர்ந்துச் சென்று கொண்டிருந்தன.

குருவிகள் அடி மேல் அடி வைத்து நடந்து, அக்காட்டின் எழிலைக் கண்டு வியந்தன.

இருன்டினிடேவிற்கு அந்த இடம் நன்கு பழக்கப்பட்ட இடம் தான். எனினும் அது இயற்கையின் அழகை கண்டு மகிழாமல் இல்லை.

 

அப்பொழுதுதான் அதற்கு ஞாபகம் வந்தது. ஆம், சில வருடங்களுக்கு முன்பு இதே ஆற்றங்கரையில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதில் சில குருவிகள் சிக்குண்டன. இயற்கையின் கருணையால் அக்குருவிகள் எப்படியோ உயிர் தப்பின.

இந்த முறை பயணத்தில் தடுமாற்றம் இருக்கக் கூடாது என இருன்டினிடே விரும்பியது.

உடனே, அந்த கரையைக் கண்டது. நீரின் தடம் குருவிகள் இருந்த இடத்தையும் தாண்டி தெரிந்தது. சிலநாட்களுக்கு முன்பு ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதன் சுவடு தான் அது.

இப்பொழுதோ மழை மேகங்கள் இல்லை. நீரின் வேகம் அதிகமாகவும் இல்லை. எனினும் அடிக்கடி மாறும் காலநிலையை முன்னுரைக்க முடியாதே. ஆதலால் குருவிகளை எல்லாம் அழைத்தது இருன்டினிடே.

அங்கு எல்லா குருவிகளும் ஒன்று சேர்ந்தன.

“நண்பர்களே, அங்க பாருங்க, வெள்ள நீர் போனதற்கான தடம்” என தனது இறகால் சுட்டிக் காட்டி கூறியது இருன்டினிடே.

அப்பொழுது தான் மற்றக் குருவிகளும் அதனை கண்டுணர்ந்தன.

“ஆமாம் ஆமாம் அந்த மணல்மேட்டை ஒட்டி நீர் சென்ற தடம் தெரிகிறது” என்றன சில குருவிகள்.

“இது போல் நம் பயணத்தில் தடுமாற்றம் வரலாம். நாம் கவனமாக இருக்க வேண்டும். சரி, நாம அந்த மணல் மேட்டுப் பகுதிக்கு போயிடுவோம், வாங்க” என்றுக் கூறி கூட்டத்தை அங்கு அழைத்துச் சென்றது இருன்டினிடே.

தற்போது மணற்மேட்டில் இருக்கும் புதர் செடிகளினுள் பாதுகாப்புடன் இருந்தது குருவிக் கூட்டம். அங்கே குருவிகளுக்கு தேவையான உணவு அதிகமாவே கிடைத்தது.  நிதானமாய் அவற்றை குருவிகள் உண்டன.

மதியம் நேரம் வந்தது. சில குருவிகள் தூக்கத்தை தழுவின. சில, அருகில் இருந்த மரத்தின் உச்சியில் சென்று அந்த வனப்பகுதியின் விசாலத்தை கண்டு வியந்தன. சில குருவிகள் முந்தைய பயணத்தில் தடுமாற்றம் ஏற்பட்ட நிகழ்ச்சிகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தன.

அங்கு குருவிகளை தாக்க கூடிய வலிமை கொண்ட வேறு பறவை இனங்கள் ஏதும் இல்லை என்பதை இருன்டினிடே அறிந்திருந்தது.

மேலும் தொடர் பயணத்தால் ஏற்பட்ட களைப்பும் அதனை வாட்டியது. அதனால் தனியேச் சென்று ஓய்வெடுத்துக் கொண்டது இருன்டினிடே.

 

அப்பொழுது, மெதுவாக தனது பெற்றோரிடம் இருந்து நகர்ந்தது வாக்டெய்ல், ஆற்றின் அக்கரைப் பகுதியை காணும் ஆர்வத்தில் அங்கு பறந்து சென்றது.

சிலவினாடிகளில் அக்கரையில் இருந்த ஒரு மரத்தின் மீது சென்று அமர்ந்தது வாக்டெய்ல்.

மரங்களின் அடர்த்தியால் முற்பகல் வேளையிலும் இருள் சூழ்ந்திருந்தது. இரண்டு அடிக்கு அப்பால் என்ன இருக்கிறது என்பதே தெரியவில்லை. அந்த அளவிற்கு இருள் நிறைந்திருந்தது.

இருட்டைக் கண்டவுடன் வாக்டெய்லுக்கு சற்றே பயம் தொற்றிக் கொண்டது. உடனே திரும்பி விடலாம் என்று எண்ணியது. இருந்தாலும் தனக்கு தானே தைரியம் சொல்லிக் கொண்டது.

அந்த இடத்தை சுற்றி சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்க, திடீரென மரக்கிளைகள் உடைவது போன்றதொரு சத்தம் எழுந்தது. சத்தம், அருகில் இருந்த மரத்தின் அடியிலிருந்து தான் வந்தது.

வாக்டெய்லுக்கோ பயம் மேலும் அதிகரித்தது. இருந்தாலும் ‘என்ன அது பார்த்துவிடுவோம்’ என்ற எண்ணத்தில் அவ்விடத்தை உற்றுப் பார்க்க, ஒரு பெரிய உருவம் மரத்தடியில் அசைவது தெரிந்தது.

பயத்தால், அக்கணமே அவ்விடத்தை விட்டு பறந்து, மீண்டும் இக்கரையை வந்தடைந்தது வாக்டெய்ல். திரும்பி பார்க்கவில்லை. நேரே அதன் கூட்டத்தை நோக்கிச் சென்றது.

அப்பொழுது உறக்கம் கலைந்து கண்விழித்து பார்த்தது வாக்டெய்லின் அம்மா. எதிரே வாக்டெய்ல் பறந்து வருவதை கண்டதும், அது நிம்மதி அடைந்தது. “எங்க போன வாக்டெய்ல்?” எனக் கேட்டது அம்மா.

“இல்லம்மா… ஒன்னும் இல்ல” என்று ஏதோ கூறியது வக்டெய்ல். தனது குஞ்சு எதையோ கண்டு பயந்திருக்கிறது என்பதை அனுமானித்தது அதன் அம்மா.

அதனால், “என்ன குட்டி, ஒரு மாதிரியா இருக்க. எதையாவது பார்த்து பயந்தியா?” என்றது.

சில நொடிகள் அமைதியாய் இருந்தது வாக்டெய்ல். பதற்றம் அடைந்த அம்மா, “என்னன்னு சொல்லு? எங்க போயிட்டு வர?” என்று அக்கறையுடனும் கண்டிப்புடனும் கேட்டது.

பிறகு நடந்த உண்மையை கூறியது வாக்டெய்ல். அனுமதி பெறாமல் சென்றதற்கு மன்னிப்பும் கேட்டது.

அம்மா குருவியோ, வாக்டெய்லை அரவணைத்துக் கொண்டது.

 

பிறகு, வாக்டெய்லை கூட்டிக் கொண்டு கரைக்கு வந்தது. “எந்த இடத்துக்கு போன? சரியா சொல்லு” எனக் கேட்டது அம்மா.

தான் சென்ற அமர்ந்த மரத்தை சுட்டிக் காட்டியது வாக்டெய்ல்.

சரியாக அம்மரத்திற்கு கீழே ஒரு பெரிய கரடி நின்றுக் கொண்டிருந்தது. தனது கைகளில் ஒரு மரக்கிளையினை வைத்துக் கொண்டு, ஆற்றில் வரும் மீன்களை பிடிக்க வகைப்பார்த்துக் கொண்டிருந்தது.

அம்மாவிற்கு புரிந்தது. “வாக்டெய்ல், நீ அந்த கரடிய தான் பார்த்திருக்கே, பயப்படாதே” என்று தைரியம் ஊட்டியது.

அப்பொழுது அப்பா குருவியும் அங்கு வர, நடந்தவற்றை எடுத்துக் கூறியது அம்மா.

வாக்டெய்லுக்கு மேலும் தைரியம் ஊட்டியது அப்பா குருவி. பின்னர் தங்களது இடத்திற்கு அவை திரும்பின.

நேரம் நகர்ந்தது. குருவிகள் எல்லாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தன.

 

மாலை நேரம் இருக்கும். புதர்ச் செடியின் மீது ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த இருன்டினிடேவின் முகத்தில் பட்டென நீர் துளி விழுந்தது.

சட்டென, விழித்து வானத்தைப் பார்க்க, கார் மேகம் சூழ்ந்திருந்தது. பெருமழை தொடங்குவதற்கான அறிகுறி தெரிந்தது.

அடுத்த சில நொடிகளில் சடசடவென பெரிய மழைதுளிகள் பூமியை நோக்கி வந்தன. உடனே, புதர் செடிக்குள் சென்றது இருன்டினிடே. குருவிகள் எல்லாம் தூங்கிக் கொண்டிருந்தன.

“நண்பர்களே எழுந்திருங்க, எழுந்திருங்க” என்றது இருன்டினிடே. குருவிகள் விழித்தன. புதர்ச் செடிக்குள் இருட்டு சூழ்ந்திருந்ததால், இரவு வேளை வந்துவிட்டதோ என்று அவை நினைத்தன.

“ஐயா இரவு வந்துடுச்சா” என்றன சில குருவிகள்.

“இல்ல, இல்ல பெரிய மழை வரப்போகுது. கார்மேகம் சூழ்ந்திருக்கு” என்றது இருன்டினிடே.

சில குருவிகள் புதர்ச் செடிக்கு மேல சென்று பார்த்தன. மழை வலுவாக வரத் தொடங்கியது.

“ஐயா என்ன பண்ணலாம்?” என்று சில குருவிகள் கேட்டன.

“இங்கேயே இருக்கலாமா, இந்த இடம் பாதுகாப்பா தானே இருக்கு?” என்று ஒரு குருவி சொன்னது.

“ஆமாம், புதர்ச் செடி இருக்கரதுனால மழை அவ்வளவா உள்ள வரலையே” என்றது மற்றொரு குருவி.

சில நிமிட யோசனைக்கு பின், “நாம அக்கரையில இருக்குற அந்த மரத்து மேல போயிடுவோம்” என்றது இருன்டினிடே.

உடனே, “ஐயா அந்த இடம் ரொம்ப இருட்டா, பயங்கரமா இருக்குது” என்றது வாக்டெய்ல்.

வாக்டெய்லை நோக்கிப் பார்த்து இருன்டினிடே. ‘அங்க பயங்கர இருட்டுன்னு உனக்கு எப்படி தெரியும்’ என்ற கேள்வி கேட்பது போல இருந்தது அந்த பார்வை.

வாக்டெய்ல் ஒன்றும் சொல்லவில்லை. அதுபற்றி மேலும் இருன்டினிடேவும் எதுவும் பேசவில்லை.

இருன்டினிடே வெளியே சென்று பார்த்தது. மழை வேகமெடுக்க தொடங்கியது.

உள்ளே நுழைந்து “நண்பர்களே உடனே இங்க இருந்து கிளம்பி அக்கரையில இருக்குர அந்த பெரிய மரத்துக்கு போவோம்” என்றது.

அப்பொழுது எல்லா குருவிகளும் அதனை ஏற்றுக் கொண்டன.

அங்கிருந்து புறப்பட்டு அக்கரையிலிருந்த பெரிய மரத்தை வந்தடைந்தன.

“நாம இன்று இரவு, பயணத்த மேற்கொள்ள முடியாது நண்பர்களே. காலைல முடிவு செஞ்சிக்கலாம். இப்ப போய் ஒய்வு எடுத்துங்க” என்றது இருன்டினிடே.

“சரி ஐயா” என்று சொல்லி குடும்பத்துடன் தனித்தனி மரக்கிளைக்குச் சென்றன எல்லா குருவிகளும்.

 

இரவு முழுவதும் சோவென மழை கொட்டிக் கொண்டிருந்தது. காலைப் பொழுது விடிந்தது. மழையும் நின்றது.

இருன்டினிடேவும் வேறு சில குருவிகளும் மரத்தின் உச்சிக்கு சென்றன. மழை இல்லை.

ஆனால் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. மிதமான வேகத்தில் காற்று வீசிக் கொண்டிருந்தது. ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு மகா இரைச்சலுடன் ஓடிக்கொண்டிருந்தது.

குருவிக் கூட்டம் தங்கியிருந்த புதர் செடியையும் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு புதர் செடிகள் இருந்ததற்கான அடையாளமே தெரியவில்லை.

அதைக் கண்டு குருவிகள் திகைத்தன. தங்களது தலைவர் இருன்டினிடேவை நோக்கி நன்றியோடு பார்த்தன. தங்கள் பயணத்தில் தடுமாற்றம் நிகழ இருந்ததையும், தலைவர் சிந்தித்து தொலைநோக்குடன் செயல்பட்டு தங்களைக் காப்பாற்றியதையும் கண்டு மீண்டும் வியந்தன.

“சரி கீழே செல்வோம்” என்று சொல்லி குருவிகளை மீண்டும் மரக்கிளைக்கு கூட்டி வந்தது இருன்டினிடே.

குருவிகள் எல்லாம் ஒன்று சேர்ந்தன.

 

“நண்பர்களே, இப்ப நாம பயணத்த தொடரலாம்ன்னு நினைக்கிறேன்… அப்பதான் இன்னிக்கு மதியத்துற்குள்ள தங்க வேண்டிய இடத்தை சென்றடைய முடியும். எல்லோருக்கும் சம்மதம் தானே? ஏதாவது பிரச்சனை இருந்தா சொல்லுங்க” என்றது இருன்டினிடே.

“ஐயா புறப்படலாம். நாங்க தயார் தான்” என்றன குருவிகள்.

வாக்டெய்ல் குருவியோ, “ஐயா, நாம எங்க தங்க போறோம்?” என்றது.

“ஒரு ஏரி…”

“என்னது ஏரியா?”

“ஆமாம் வாக்டெய்ல்… அது ஒரு அழகான ஏரி… அங்க புதிய வாத்து மற்றும் நாரை நணபர்கள நீ சந்திக்கலாம்.”

“அப்படியா…. ரொம சந்தோஷம் ஐயா”

“ஊம்ம்… அந்த இடம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்…”

“ரொம்ப ஆவலா இருக்கு…”

“சரி, நண்பர்களே புறப்படலாமா?” என்றது இருன்டினிடே.

உடனே குருவிக் கூட்டம் அங்கிருந்து புறப்பட்டு பயணத்தை கிழக்கு நோக்கி தொடர்ந்தது.

 

நண்பகல் நேரம். இருன்டினிடே நிலபகுதியை உற்றுப் பார்த்துக் கொண்டே வந்தது. அதன் நினைவுப்படி இந்நேரம் ‘அந்த ஏரி’ வந்திருக்க வேண்டும். ஆனால் ஏரி இன்னும் அதன் கண்ணிற்கு தென்படவில்லை. மாறாக மனித குடியிருப்புகளே தென்பட்டன.

அதனால் இருன்டினிடே குழம்பியது. ‘ஒருவேளை ஏரியை தாண்டி வந்துவிட்டோமா’ என்று நினைத்தது. ‘ஆனால் அது சாத்தியம் இல்லை’ என்றும் தோன்றியது.

மேகமூட்டத்தால் நட்சத்திர அடையாளங்களையும் தெளிவாக கண்டுணர முடியவில்லை. ‘சரி, காற்றின் திசையில் பயணிப்போம்’ என்று முடிவு செய்து அதன் வழியில் தொடர்ந்து குருவிக் கூட்டத்தை அழைத்துச் சென்றது.

மேலும் இரண்டு மணி நேரம் சென்றது. நிலபரப்பின் அமைப்புகள் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. அவை கிழக்கு நோக்கிய வழித்தடத்திற்கான, சரியான அடையாள‌ங்களாக தெரியவில்லை. இருன்டினிடேவிற்கு குழப்பம் மேலும் அதிகரித்தது.

வேறு வழியின்றி, உடனே அங்கிருந்த ஒரு மேய்ச்சல் நிலத்தில் கூட்டத்தை தரையிறக்கியது. நிலைமையை கூட்டத்தினரிடம் எடுத்துரைத்தது.

சற்று அனுபவம் வாய்ந்த குருவிகளும் இருன்டினிடேவின் வார்த்தைகளை ஆமோதித்தன.

சில குருவிகள் என்ன செய்வது என்று நினைத்து பயந்தன. “அச்சம் வேண்டாம் நண்பர்களே, வானம் தெளியட்டும், வழி பிறக்கும்” என்றது இருன்டினிடே.

நல்ல வேளையாக, சிறிது நேரத்தில் சூரியன் பளிச்சிட்டது. அதை வைத்து வழி தவறி வந்திருப்பதை அறிந்துக் கொண்டது இருன்டினிடே. சில மூத்த குருவிகளும் அதை இருன்டினிடேவிற்கு உணர்த்தின.

சிறு ஆலோசனைக்கு பின்பு, குருவிகளை அழைத்து, “நண்பர்களே, உங்களை எல்லாம் வழி தவறி அழைத்து வந்துட்டேன், மீண்டும் வந்த வழியே திரும்ப பயணிக்கனும். உங்களை சிரமத்துக்கு ஆளாக்கிட்டேன், மன்னிச்சுக்குங்க” என்றது இருன்டினிடே.

உடனே, சில குருவிகள் “ஐயா, நம்ம பயணத்தில் தடுமாற்றம் ஏற்படுவது இயற்கைதானே. நீங்க மன்னிப்பெல்லாம் கேட்க கூடாது” என்றன.

சில குருவிகள் “ஏன் இப்படி பேசறீங்க?” என்று உணர்ச்சி வயப்பட்டன.

சில குருவிகளோ, “உங்களால தான் நாங்க இருக்கோம்” என்று கூறின. தன் மீது குருவிக் கூட்டம் வைத்திருக்கும் அன்பை எண்ணிப் பெருமிதம் கொண்டது இருன்டினிடே.

“சரி நண்பர்களே, இனி இப்படி நா பேசமாட்டேன்” என்று கூற கூட்டத்தில் அமைதி நிலவியது.

உடனே, கூட்டத்தை அழைத்துக் கொண்டு மீண்டும் வந்த வழியே பயணத்தை தொடர்ந்தது இருன்டினிடே.

(பயணம் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
9941091461
drsureshwritings@gmail.com

 

இதைப் படித்து விட்டீர்களா?

சொர்க்க வனம் 6 – வாக்டெய்லுக்கு கிடைத்த நட்பு

சொர்க்க வனம் 4 – தாயகம் தாண்டிப் பயணம்

One Reply to “சொர்க்க வனம் 5 – பயணத்தில் தடுமாற்றம்”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.