சொர்க்க வனம் 3 – பயணத்தில் திடீர் தடங்கல்

மலை உச்சியிலிருந்து புறப்பட்டு இரண்டு மணி நேரம் ஆயிற்று. இன்னும் அவற்றின் தாயகமான வடதுருவப் பகுதி எல்லையில்தான் அக்குருவிக் கூட்டம் பறந்து கொண்டிருந்தது.

மழை இல்லை. மழை மேகங்கள் இல்லை. நீல வானம் பளிச்சிட்டது. மங்கிய சூரிய ஒளிக்கதிர்கள் சூரியன் அஸ்தமனமாகப் போவதை உணர்த்தின.

அப்பொழுது இருன்டினிடேவிடமிருந்து கீழிறங்குவதற்கான சமிக்ஞை வந்ததை அடுத்து, குருவிக் கூட்டம் அந்த இடத்தில் தரையிரங்கியது. அங்கு அடர்ந்த மரங்களும் நீர்நிலைகளும் இருந்தன.

இருன்டினிடேவும், சில குழு கண்காணிப்பாளர்களும் அந்த இடத்தை ஒருமுறை பறந்து வந்து நோட்டம் விட்டன. மற்ற குருவிகள் எல்லாம் புது இடத்தை பார்த்து இரசித்துக் கொண்டிருந்தன.

திடீரென குருவிகளின் அலறல் ஒலி கேட்டது. சட்டென, குருவிகள் அங்கு சூழ, கூட்டத்தில் பதற்றம் பரவியது. உடனே, இருன்டினிடே அங்கு விரைந்து சென்றது.

 

கூட்டத்தின் மத்தியில் நுழைந்து பார்க்க, ஒரு நடுத்தர வயதுடைய ஆண் குருவி மயங்கி விழுந்திருந்தது. அருகில் அதன் தாய் தந்தை குருவிகள் பதற்றத்தில் கத்தின. என்ன செய்வெதென்று தெரியாமல் திகைத்து புலம்பின.

திடீர் தடங்கல் ஏற்பட்டாலும் தலைவர் இருன்டினிடே பொறுமையை இழக்கவில்லை.

“கொஞ்சம் அமைதியா இருங்க…. அழாதீங்க… என்னன்னு பார்ப்போம்…” என்று சொல்லிக்கொண்டே, மயங்கி விழுந்திருந்த குருவியை தொட்டு பார்த்தது இருன்டினிடே.

கண்களை திறந்து உற்றுப் பார்த்தது. அந்த குருவி மூச்சு விட்டுக் கொண்டிருந்தது. ஆனால் உடலின் வெப்பநிலையோ அதிகரித்திருந்தது.

அந்தக் குருவியின் பெற்றோரைப் பார்த்து, “பயப்படாதீங்க, சாதரண காய்ச்சல் தான். சரியாகிடும்” என்றது இருண்டினிடே. அந்த வார்த்தையினால், கூட்டத்தில் நிலவிய பதற்றம் சற்று தணியத் துவங்கியது.

தாமதமின்றி, குழு கண்காணிப்பாளர்களை அழைத்து, தற்போது செய்ய வேண்டிய வேலைகளை பிரித்து கொடுத்தது இருன்டினிடே.

அதன்படி, இருன்டினிடே சொன்ன பச்சிலை மருந்து கொண்டுவர இரண்டு குருவிகள் பறந்து சென்றன. தங்குவதற்கான இடத்தை தேர்வு செய்வதற்காக, இரண்டு குருவிகள் மரங்கள் நிறைந்திருந்த பகுதியை நோக்கி பறந்தன.

 

இருன்டினிடே உட்பட நான்கு குருவிகள், எல்லா குருவிகளின் உடல்நிலையையும் பரிசோதிக்க தொடங்கின. முடிவில் மேலும் மூன்று குருவிகளுக்கும் மிதமான காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது.

சிறிது நேரத்திற்குப் பின், இருன்டினிடே சொன்ன அந்த பச்சிலை மருந்தை இரண்டு குருவிகளும் அதிக அளவிலேயே கொண்டு வந்தன.

முதலில், மயக்கத்தில் இருந்த அந்த குருவிக்கு பச்சிலை மருந்து கொடுத்தது இருன்டினிடே.

சிறிது நேரத்திற்கு பின் மெல்ல தனது சிறகை அசைத்தது அந்தக் குருவி; எனினும் கண்களை திறக்கவில்லை.

அடுத்து மிதமான காய்ச்சலுடன் இருந்த மற்ற மூன்று குருவிகளுக்கும் பச்சிலை மருந்து கொடுக்கப்பட்டது.

திடீர் தடங்கல் நீங்க வழி கிடைத்தது.

 

தங்குவதற்கான இடத்தை தேர்வு செய்ய புறப்பட்டுச் சென்ற மற்ற இரண்டு குருவிகளும் அங்கு வந்தன.

அவை, “ஐயா.. அங்கு இரண்டு பெரிய பருத்த மரங்கள் இருக்கு. மற்ற பறவைகள் ஏதும் அங்கு இருக்கிற மாதிரியும் தெரியல. நமக்கு தேவையான உணவு அங்கு அதிகமா இருக்கு” என்றன.

“நல்லது” என்று சொல்லி மேலும் இப்படியாக கூறியது இருன்டினிடே.

“நண்பர்களே, நம்ம கூட்டத்தில் இருக்கிற நான்கு பேருக்கு காய்ச்சல் இருக்கு. அவர்களால இப்போது பயணிக்க முடியாது. அதனால பயணத்த தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம். இத தவிர வேறு வழியில்ல.”

“சரி ஐயா” என்றன எல்லா குருவிகளும்.

எனினும், அது புதிய இடம் என்பதால், சில குருவிகளிடையே அச்சம் நிலவியது. அதனை உணர்ந்து கொண்டு, இந்த இடம் பாதுகாப்பாக இருப்பதையும், உணவு கிடைப்பதையும் எடுத்துக் கூறியது இருண்டினிடே. தலைவனின் சொல்லை அப்படியே ஏற்றுக் கொண்டன குருவிகள்.

“சரி, நாம முதலில் தங்கும் இடத்திற்கு புறப்படுவோம்” என்று சொல்லி, அங்கிருந்து புறப்பட்டது குருவிக் கூட்டம்.

மயக்கத்தில் இருந்த குருவியை நான்கு குருவிகள் பாதுகாப்பாக சுமந்து கொண்டு பறந்தன. பதினைந்து நிமிடத்திற்குள்ளாக தங்கப்போகும் மரத்தை வந்தடைந்தது குருவிக் கூட்டம்.

இடத்தின் பாதுகாப்பை மீண்டும் ஒருமுறை உறுதி செய்து கொண்டது இருன்டினிடே.

குருவிகள் எல்லாம் அந்த மரக்கிளைகளில் ஆங்காங்கே கூடி நின்று கொண்டிருந்தன.

உடனே, ஒரு கிளையில் இரண்டு குருவிகள் மட்டும் இடைவெளிவிட்டு தங்கும்படி கேட்டுக் கொண்டது இருன்டினிடே. அதன்படியே செய்தன எல்லா குருவிகளும்.

காய்ச்சல் இருந்த நான்கு குருவிகள் மட்டும் அருகில் இருந்த வேறொரு மரத்தில் தனியாக தங்க வைக்கப்பட்டன. அவற்றை பார்த்துக் கொள்ள வேறு நான்கு குருவிகள் அந்த மரத்திலேயே தங்கவைக்கப்பட்டன‌.

திடீர் தடங்கல் நீங்காத தடங்கலாகி விடாமல் தடுக்கப்பட்டது.

தங்குவதற்கான இடம் ஒதுக்கும் பணி முடிந்தது.

அடுத்து, ஆறு குருவிகளை அழைத்து கூட்டதிற்கு தேவையான உணவை சேகரித்து வரும்படி கூறியது இருன்டினிடே. அவை உடனே விரைந்தன.

 

வெளிச்சம் மங்கியிருந்தது. குளிர் காற்று வீசியது. குருவிகள் எல்லாம் அதன் இடத்தில் இருந்தபடி மற்றவர்களிடம் உரையாடிக் கொண்டிருந்தன.

மரத்தின் உச்சியில் நின்று கொண்டிருந்தது இருன்டினிடே. எதையோ சிந்தித்தப்படி இருந்தது. அதன் அருகில் சற்று இடைவெளிவிட்டு வந்து நின்றது வாக்டெய்ல். சில நிமிடங்கள் கழித்தே வாக்டெய்லை கவனித்தது இருன்டினிடே.

“வா வாக்டெய்ல்…”

“ஐயா, நம்ம நண்பர்களுக்கு இருக்கிற காய்ச்சல் சீக்கிரம் குணமாயிடுமா?”

“ஆமா…. அவங்க சீக்கிரம் குணமாவாங்க. பயப்படற மாதிரி எதுவும் இல்ல…”

“நல்லது ஐயா…. அப்புறம், இன்னிக்கு காலைல இருந்து மழையும் வெயிலும் மாறி வருதே… இதுமாதிரி நான் பார்த்ததேயில்ல”

“ஆமா வாக்டெய்ல். காலநிலை அடிக்கடி மாறிகிட்டே தான் இருக்கு…

இப்ப கூட குளிர்காலம் ரொம்ப சீக்கிரமாவே தொடங்கிடுச்சு…

பனிப்பாறைகளும் அதிகமா உருகுது…

காலம் தவறி மழை வருது…

இதையெல்லாம் நாம எதிர் கொண்டு எப்படி வாழணுங்கற‌த கத்துக்கனும்…”

“சரி ஐயா…”

“உம்ம்….”

‘ஐயா…எனக்கு இன்னும் ஒரு சந்தேகம்…”

“கேளு வாக்டெய்ல்…”

“நாம அந்த மலை உச்சியிலேயே தங்கியிருக்கலாமே? ஏன் அங்கிருந்து புறப்பட சொன்னீங்க…”

“குட்டி… நாம எங்க வேணும்னாலும் தங்க முடியாது. தங்கும் இடத்த சரியா தேர்வு செய்யனும்.”

“அப்படியா…”

“ஆமா… இடம் முதல்ல பாதுகாப்பா இருக்குதான்னு தெரிஞ்சுக்கனும். குறிப்பா நம்மல தாக்கக் கூடிய எதிரிகள் அந்த இடத்துல இல்லாம இருக்கனும்.

அடுத்து நிறைய உணவு கிடைக்குதான்னு பார்க்கனும். சாப்பிடாம இருந்தா நம்மால பறக்க முடியாது இல்லயா?

அப்புறம் நாம தங்குவதற்கு வசதியா இருக்கனும். அந்த மலை உச்சியில நமக்கு உணவு கிடைக்காது…. மருத்துவ குணமுடைய தாவரமும் இல்ல… மழைக்கு ஒதுங்குவதற்கு மறைவான இடமும் இல்ல… அதான் அங்கிருந்து புறப்பட்ட சொன்னேன்.”

“நன்றி ஐயா…”

அப்பொழுது உணவு தேடிச் சென்ற குருவிகள் எல்லாம் அங்கு வந்தன. பைகள் நிறைய உணவுகள் கொண்டு வந்திருந்தன.

குருவிகளுக்கு நன்றி கூறி, எல்லோருக்கும் உணவை பகிர்ந்தளிக்கும் படி கூறியது இருன்டினிடே. உடல் நிலை சரியில்லாத குருவிகளுக்கு தேவையான உணவையும் தனியே பிரித்துக் கொடுத்தது இருன்டினிடே.

எல்லா குருவிகளும் அன்று வயிறார உண்டன. அதற்குள் இரவு பொழுது மலர்ந்தது. முழு நிலவின் வெளிச்சம் எங்கும் பரவியது.

தனியே, ஒரு மரக்கிளையில் அமர்ந்து கொண்டு தனது புத்தகத்தில் குறிப்பெழுதிக் கொண்டிருந்தது வாக்டெய்ல். அப்படியே நேரம் ஓடியது.

“வாக்டெய்ல் நேரம் ஆயிடுச்சு சீக்கிரம் வந்து தூங்கு” என்றது அதன் தாய். “சரிம்மா…” என்று சொல்லி வாக்டெயில் அப்புத்தகத்தை பையினுள் வைத்து எடுத்துக் கொண்டு தூங்கச் சென்றது.

மூன்று நாட்கள் ஓடின.

அந்த நான்கு குருவிகளும் நன்கு குணமடைந்திருந்தன. ஓய்வு மற்றும் போதிய அளவு உணவு கிடைத்ததால் எல்லா குருவிகளும் ஆரோக்கியத்துடன் இருந்தன.

எல்லோரையும் அழைத்து, “நண்பர்களே, இன்னும் சிறிது நேரத்துல நாம் புறப்பட வேண்டும். தயார் ஆகுங்க” என்று கூறியது இருன்டினிடே.

உண்மையில், குருவிகளுக்கு அந்த இடத்தை விட்டு பிரிய மனமில்லை. இருந்தாலும் சொர்க்க வனம் செல்ல வேண்டுமே தலைவர் கூறியதால் எல்லாம் புறப்பட தயார் ஆகின.

அடுத்த சில மணித்துளிகளில் அங்கிருந்து புறப்பட்டது குருவிக் கூட்டம்.

பயணம் தொடரும்

கனிமவாசன்
சென்னை
9941091461
drsureshwritings@gmail.com

 

இதைப் படித்து விட்டீர்களா?

சொர்க்க வனம் 4 – தாயகம் தாண்டிப் பயணம்

சொர்க்க வனம் 2 – பயணம் ஆரம்பம்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.