சொர்க்க வனம் 2 – பயணம் ஆரம்பம்

அன்று இரவு எட்டு மணி….

பனிப்பொழிவு சற்று அதிகரித்திருந்தது.

திட்டமிட்டப்படி, தலைவன் இருன்டினிடே அந்த மரத்தடியில் வந்து நின்றுக் கொண்டிருந்தது. அதனை தொடர்ந்து அக்கூட்டத்திலிருந்த எல்லா ஸ்வாலோ குருவிகளும் அங்கு வந்து சேர்ந்தன.

“நண்பர்களே, குழுவாக நில்லுங்களேன்” எனக் கேட்டுக் கொண்டது இருன்டினிடே.

உடனே, பயண ஒத்திகையின் போது உருவாக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறையின்படி, எண்பது குருவிகளும், குழுவிற்கு பத்து குருவிகள் என, எட்டுக் குழுக்களாகப் பிரிந்து நின்றன.

ஒவ்வொரு குழுவிலும் அனுபவம் வாய்ந்த குருவி ஒன்று குழு கண்காணிப்பாளராக பொறுப்பேற்றிருந்தது. பயணம் முழுவதும், எல்லா உறுப்பினர்களும் குழுவில் இருப்பதை உறுதி செய்வதே கண்காணிப்பாளரின் பிரதான பொறுப்பு.

எல்லா குருவிகளும் அங்கு வந்திருப்பதை உறுதி செய்து கொண்ட பின்னர், அனைவருக்கும் வணக்கத்தை தெரிவித்தது இருன்டினிடே. பதிலுக்கு தலைவனைப் பார்த்து எல்லா குருவிகளும் வணக்கம் தெரிவித்தன.

பின்னர், “எனது அருமை நண்பர்களே, எல்லோரும் நலம் தானே? பயணம் செய்வதற்கு தயார் தானே” எனக் கேட்டது இருன்டினிடே.

“ஆம்.. புறப்பட தயாராக இருக்கிறோம் ஐயா…” என்றன எல்லா குருவிகளும்.

“உம்ம்… நல்லது… பயணத்தின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை மீண்டும் ஒருமுறை உங்களுக்கு ஞாபகம் ஊட்டுகிறேன்” என்று கூறியது.

பின்னர் குழுவாக பறந்து மேலெழுதல், மேலிருந்து தரையிறங்குதல், ஆபத்து நெருங்கும் போது எச்சரிக்கை செய்தல், எதிரிகளை எதிர்த்து போராடுதல், உணவு உண்ணுதல், அவசர தேவைகளை கூட்டத்தினருக்கு உணர்த்துதல், என ஒவ்வொரு செயலுக்கும் பிரத்யேகமான குரல் சமிஞ்கையை எழுப்பி காண்பித்தது இருன்டினிடே.

கூட்டத்தில் இருந்த அனைத்து குருவிகளும் அதனை முறையாக உள்வாங்கி பிரதிபலித்தன.

பின்னர், குழு கண்காணிப்பாளர்களை மட்டும் தனியே அழைத்து, அவர்களுக்கான தனி வழிமுறைகளையும் நினைவூட்டியது இருன்டினிடே.

அதனை கவனமுடன் கேட்டுக் கொண்டதோடு, அவற்றிடையே இருந்த சில சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொண்டன குழுக் கண்காணிப்பாளர்கள்.

பின்னர் குழு கண்காணிப்பாளர்கள் எல்லாம் தனது குழுவுடன் சேர்ந்து நின்றன.

 

அப்பொழுது, இருன்டினிடேவின் கவனத்தை கவர்ந்தது வாக்டெய்ல். உடனே, வாக்டெய்லை பார்த்து “இங்க வா” என்று அழைத்தது.

வாக்டெய்ல், “வணக்கம் ஐயா…” என்றபடி அருகில் செல்ல, “என்ன இது? முதுகில் பை. எதற்காக இதை சுமக்கிறாய்?” என்று கேட்டது இருன்டினிடே.

“ஐயா… இதுல நோட்டு புத்தகமும் பேனாவும் வச்சுருகேன். நாம போகிற வழி, தங்கும் இடம், புதிய நண்பகள் பற்றிய தகவல்கள் அப்படீன்னு எல்லா தகவல்களையும் நோட்டுல எழுதி வச்சுப்பேன்”

“எதுக்கு இதெல்லாம் எழுதனும்?”

“நான் சின்ன குருவியச்சே, அப்புறம் எல்லாம் மறந்துட்டேன்னா…”

பெருமிதத்துடனே, “சிறப்பு வாக்டெய்ல். உனக்கு வேண்டிய தகவல்களை என்னிடம் கேட்கலாம்” என்றது இருன்டினிடே. அதற்காக தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டது வாக்டெய்ல்.

எத்தனையோ வருடங்களாக வெளிநாட்டு பயணத்தில் ஈடுபட்டு வருகிறது இருன்டினிடே. ஆனால் இதுபோன்றதொரு செயலை அது யாரிடமும் கண்டதேயில்லை.

இக்காலத்தில் சிறுபருவத்திலேயே குருவிகள் அறிவுடன் செயல்படும் திறனை எண்ணி ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தது இருன்டினிடே.

அவ்வாறே குழுவிலிருந்த மற்ற குருவிகளும் மகிழ்ந்தன. வாக்டெய்லின் தாய்-தந்தையருக்கோ பெருமிதம் பொங்கிற்று.

 

நேரம் கிட்டத்தட்ட ஒன்பதை நெருங்கியது. எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. அத‌னால் என்ன? இரவில் இருக்கும் இயற்கை வெளிச்சமே போதுமானது, குருவிகள் தங்களது பயணத்தை தங்குதடையின்றி மேற்கொள்வதற்கு.

“சரி நண்பர்களே, பயணத்தை தொடங்குவோம்” என்று கூறி, கூட்டம் மேலெழுவதற்கான சமிக்ஞை (signal) தந்துவிட்டு முதலாவதாக சிறகை அசைத்து மேலெழுந்தது இருன்டினிடே.

அதை தொடர்ந்து மற்ற குருவிகளும் சடசடவென சிறகை அடித்துக் கொண்டு மேலெழுந்தன.

குழுக் கண்காணிப்பாளர்களோ அவற்றின் உறுப்பினர்களின் மீது பார்வை வைத்தபடியே மிகவும் கவனமாக மேலெழுந்தன.

மேல்நோக்கி பறந்தவாரே ஒருமுறை கீழ்நோக்கி பார்த்தது இருன்டினிடே.

பிறந்த மண்ணை விட்டுப் பிரிந்து, பறந்து செல்வதன் துயரம் அதன் கண்களில் தெரிந்தது. ஆனாலும், கூட்டத்தை வழிநட‌த்தும் தலைவன் ஆயிற்றே!

துயரத்தை ஒருதுளி கண்ணீரில் கரைத்துவிட்டு முன்னோக்கி கம்பீரித்து பறந்தது இருன்டினிடே. அதன் கண்ணீர் துளியோ பனித்திவலையாகி பிறந்த மண்ணை அடைந்தது.

சில வினாடிகளில் அக்குருவிக் கூட்டம் சில நூறு அடி உயரத்தை அடைந்தது. கூட்டம் ஒருநிலையில் பறந்தது. குருவிகள் எல்லாம் ஆங்கில எழுத்தான V வடிவில் பறந்தன.

 

முதலாவதாக தலைவன் இருன்டினிடே பறந்துச் சென்றது. இதனால், பக்கவாட்டில் பறந்து வரும் குருவிகளின் மீது காற்றின் இழுவிசை குறைவாக இருக்கும். எனவே அவைகளால் எளிதாகப் பறக்க முடியும்.

என்னதான், பயிற்சி பெற்றிருந்தாலும், வயது மூப்பின் காரணமாக தலைமை வகித்து முதலில் செல்லும் இருன்டினிடே அயர்ச்சி அடைந்துவிடலாம்.

அதனால் குழு கண்காணிப்பாளர்கள், முதல் இடத்தை சுழற்சி முறையில் மாற்றிக்கொண்டு பறக்க திட்டமிட்டிருந்தன.

கூட்டத்தில் இருந்த இளம் குருவிகளோ உற்சாகத்தில் ஆனந்தக் குரல் எழுப்பின. வாக்டெய்ல் குட்டியும் மகிழ்ச்சியில் கீச்சிட்ட படியே தனது தாய் தந்தையுடன் ஒட்டிப் பறந்தது.

அதேசமயத்தில் தொடங்கிய இடம் முதல் அவை செல்லும் திசை, நட்சத்திரங்களின் அமைப்பு உள்ளிட்ட அடையாளங்களை நினைவுபடுத்திக் கொண்டது.

இரவு முழுக்க பயணம்…. பகலில் ஓய்வு….. இப்படியாக இரண்டு நாட்கள் கடந்தன. அவை வசித்து வந்த இடத்திலிருந்து வெகுதூரம் பயணித்து வந்திருந்தன.

 

மூன்றாம் நாள் காலை….

சூரியன் வெளிப்பட்டது. வெளிச்சம் பரவியது. சூரிய கதிர்களின் இளஞ்சூட்டில் குருவிகள் மகிழ்ந்திருந்தன.

முதலில் பறந்துக் கொண்டிருந்த இருன்டினிடே கீழ்நோக்கி நிலபரப்பின் அமைப்பை உற்று நோக்கியது.

பல ஆண்டுகள் பயண அனுபவத்தால் உணர்ந்து, “நண்பர்களே நாம் தற்போது வடதுருவ பகுதியின் எல்லையில் இருக்கிறோம். இன்றைய இரவு பயணத்தில் மனிதர்கள் வாழும் நாட்டின் பகுதியை அடைந்துவிடுவோம்” என்று அறிவித்தது இருன்டினிடே. அப்பொழுது ஒருவித உணர்ச்சி குருவிகளிடையே பரவியது.

பகல் மலர்ந்த பொழுதும், தரையிறங்வதற்கான சமிக்ஞையை இன்னும் இருன்டினிடே அளிக்கவில்லை. அதனால் தொடர்ந்து கூட்டம் பறந்துக் கொண்டே இருந்தது.

ஓரிரு மணி நேரம் சென்றது. மேகங்கள் இடித்து மின்னல் படர்ந்தது. இடியின் சத்தமும் மின்னலின் ஒளியும் குருவிகளை வெகுவாய் கலக்கமடையச் செய்தது.

வாக்டெய்ல் குருவியும் அச்சத்தில் அதிகமாய் நடுங்கியது. உடனே தந்தையும் தாயும் வாக்டெய்ல் குட்டியை அணைத்துக் கொண்டபடி பறந்தன.

அப்பொழுது தாழ பறப்பதற்கான சமிக்ஞையை கொடுத்தது இருன்டினிடே. அடுத்த நொடி, குருவிகள் எல்லாம் பறக்கும் உயரத்தை குறைத்தன. கண்காணிப்பாளர்கள், குழு உறுப்பினர்கள் எல்லாம் கூட்டத்தில் இருப்பதை உறுதி செய்துக் கொண்டன.

“நண்பர்களே மழை வரப்போகிறது. வேகமாக செல்வோம்” என்றது இருன்டினிடே. சிறிது நேரத்தில் மழை சடசடவென தொடங்கியது.

அடுத்த சில வினாடிகளில் அடைமழை கொட்டியது. மழையின் இரைச்சலால் குருவிகள் அச்சம் அடைந்தன. இருந்தாலும் தொடர்ந்து பறந்தன.

இயற்கை கருணை காட்டியது. சில நிமிடங்களில் கார்மேகங்கள் கரைந்தன. அடைமழை குறைந்து சிறு தூரலாக மாறியது. குருவிகள் எல்லாம் நிம்மதி பெருமூச்சு விட்டன.

இருன்டினிடேவோ தங்குவதற்கு இடத்தை தேடிக் கொண்டிருந்தது. அங்கு ஒரு மலைக்குன்று இருப்பதை பார்த்தவுடன் தரையிறங்குவதற்கான சமிக்ஞை தந்தது. சில வினாடிகளில் கூட்டம் அந்த மலைக்குன்றின் உச்சியில் வந்திறங்கியது.

அந்த இடத்தை ஒருமுறை சுற்றிப் பார்த்தது இருன்டினிடே. மலைக்குன்றின் உச்சி மிகவும் குறைந்த பரப்பளவிலேயே இருந்தது. கற்கள் மற்றும் பாறைகளை தவிர அங்கு வேறு எதுவும் இல்லை.

“நண்பர்களே இன்னும் சிறிது நேரத்தில் நாம் மீண்டும் புறப்பட வேண்டும். உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்” என்றது இருன்டினிடே.

குருவிகள் எல்லாம் தங்களது உடலை உல‌ர்த்திக் கொண்டன. அவ்வாறே வாக்டெய்லும் செய்தது. அத்தோடு, தனது பையை திறந்து உள்ளே பார்த்தது. அந்தப் பை உதிர்ந்த இறகுகளால் தைக்கப்பட்டிருந்ததால் உள்ளே ஒருதுளி நீர் கூட இறங்கவில்லை.

மகிழ்வுடன், அதிலிருந்து புத்தகத்தை எடுத்து, பயணித்த திசை, அவற்றிகான அடையாளங்கள் முதலிய தகவல்களை குறித்துக் கொண்டு, மீண்டும் பையினுள்ளேயே வைத்துவிட்டது.

அங்கு ஓரமாக நின்றபடி சுற்றி கவனித்துக் கொண்டிருந்த இருன்டினிடேவின் அருகில் சென்றது வாக்டெய்ல்.

 

வாக்டெய்லை பார்த்தவுடன், “என்ன குட்டி பயந்துட்டியா?” என்றது இருன்டினிடே.

வாக்டெய்ல் ஒன்றும் பேசவில்லை.

தனது சிறகால் வாக்டெய்லின் தலையை தடவிக் கொடுத்துவிட்டு, “பயப்படாத வாக்டெய்ல். நமது வாழ்க்கையே போராட்டம் தான். அதை சாதூர்யமாக எதிர்கொள்ளணும். பயந்தோம்னா சொர்க்க வனத்தை அடைய முடியாது. வாழ்வை பெற முடியாது” என்றது இருன்டினிடே.

“நிச்சயமா ஐயா… நான் பயப்படமாட்டேன்…”

“நல்லது வாக்டெய்ல். உன் முகத்த பார்த்தா உனக்கு ஏதோ சந்தேகம் இருக்குன்னு நினைக்கிறேன்”

“ஆமா ஐயா…”

“உம்ம்… கேளு…”

“ஐயா…. அந்த மின்னல் வந்த பிறகு ஒருவிதமான வாசனை வந்துச்சே அது எதுனால?”

“ஓஓ… அத நீ நுகர்ந்தியா…”

“ஆமா ஐயா… ஆனா ரொம்ப லேசா தான் இருந்தது அந்த வாசனை…”

“இம்ம்… அந்த வாசனைக்கு காரணம் ஓசோன்…”

“ஓசோனா…”

“ஆமாம் வாக்டெய்ல்… மின்னும் போது, காற்றில் இருக்கும் ஆக்சிஜன் மூலக்கூறுகள் பிளவு பட்டு ஆக்சிஜன் அணுக்களை உண்டு பண்ணும். அது உடனே பக்கத்துல இருக்கும் ஆக்சிஜன் மூலக்கூறோடு சேர்ந்து ஓசோன் மூலக்கூற உருவாக்கும். அதோட வாசனையத்தான் நீ நுகர்ந்திருக்க….”

“இப்ப புரிஞ்சுது ஐயா… இந்த வாசனைய வச்சுத்தான் மழை வறப்போகுதுன்னு சொல்லி சீக்கிரமா பறக்க சொன்னீங்களா?”

“ஆமா வாக்டெய்ல் சரியா புரிஞ்சுக்கிட்ட….”

அதற்கிடையில், மீண்டும் சூரியக் கதிர்கள் மேகங்களிடையே புகுந்து வந்தன. அப்பொழுது எழில் நிறைந்த வானவில் தோன்றியது.

மலைக்குன்றின் உச்சியில் இருந்து அதனை எதேச்சையாக பார்த்தது வாக்டெய்ல். உடனே ஆச்சரியம் அடைந்தது.

“அழகா இருக்கே!…. என்னது ஐயா அது?” என்று தனது சிறகால் வானவில்லை சுட்டி காண்பித்தபடி கேட்டது வாக்டெய்ல்.

உடனே, “அதுக்கு பேரு வானவில்…. சரி சொல்லு உனக்கு என்ன நிறமெல்லாம் தெரியுது?”

“சிகப்பு, மஞ்சள், நீலம், ஊதா….”

“சரியா சொன்ன குட்டி… வானவில் தேன்றுவதற்கு காரணம், சூரிய ஒளியும் காற்று மண்டலத்துல இருக்கும் நீர் திவலைகளும் தான்.”

“அப்படியா….”

“ஆமா… நீர் திவலையில சூரியக் கதிர் ஒளிவிலகல் அடைந்து உள்ளே போய், எதிரொளித்து மீண்டும் ஒளிவிலகல் அடைந்து வெளியே (நீர் திவலையிலிருந்து காற்று மண்டலத்தில்) வரும். அப்படி வரும் போது அது ஒளிபிரிகை அடைஞ்சு வானவில் தோன்றுது.”

“ஆச்சரியமா இருக்கு ஐயா… இன்னிக்கு புதிய செய்திகள தெரிஞ்சுக்கிட்டேன், நன்றி” என்று கூறி மகிழ்ந்தது வாக்டெய்ல்.

“சரி வாக்டெய்ல். நாம இங்கிருந்து புறப்படணும்” என்று கூறி கூட்டத்தினரை பார்த்தது இருன்டினிடே.

எல்லா குருவிகளும் தயார் நிலையில் நின்றுக் கொண்டிருந்தன. உடனே, இருன்டினிடே புறப்படுவதற்கான சமிக்ஞை கொடுக்க, குருவிக் கூட்டம் அங்கிருந்து பறந்து பயணத்தை தொடர்ந்தது.

பயணம் தொடரும்

கனிமவாசன்
சென்னை
9941091461
drsureshwritings@gmail.com

 

இதைப் படித்து விட்டீர்களா?

சொர்க்க வனம் 3 – பயணத்தில் திடீர் தடங்கல்

சொர்க்க வனம் 1 – பயணத் திட்டம்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.