என் வலையிலிருந்து
இன்னும் நான்
வெளிவர முடியாதபோது
அதிலிருந்து நான் பார்க்கிறேன்
ஒரு பறவை பறக்கவோ
நான் கற்பனை செய்யவோ
மட்டுமே முடியும்
என்னை நான்
என்னிடம் இருந்து
பிரித்துப் பிரித்துப் போடுகிறேன்
எனக்கான ரசாயன மாற்றத்தை
ஒரு வேதியியல் நிபுணன்
சொல்லிவிட்டுப் போகட்டும்.
நான் இப்பொழுது
என்னைச் சலனமின்றி
கடந்து போகிறேன்
என் மூச்சும்
என் மூளையும்
ஒன்றுடன் ஒன்று
சண்டையிட்டுக் கொள்கிறது.
என் மனத்திரையில்
வடியும் குப்பைகள்
வீணாகிப் போகிறது
நான் அதன் மேலும் மற்றும்
ஒரு தெரு ஓரத்திலும் நிற்கிறேன்
அது போதும் என
வெற்று நகரத்தில் நான்
பயணம் செய்து கொண்டிருக்கிறேன்
எல்லோரும் ஒருவருக்கு ஒருவர்
மௌனமாகப் பேசிக்கொண்டார்கள்
பாதுகாப்பானவர்கள் என்பது
போல் நடித்தார்கள்
இயற்கையை ரகசியமாகச் சுரண்டியவர்கள்
நாகரிகத்தை முன் வைத்துத் தப்பித்துக் கொண்டார்கள்
விளையாட்டில் பங்குபெறும் மனிதர்கள்
விளையாட்டை மறந்து விட்டார்கள்
யாரோ ஒருவனின்
நினைவிலே எல்லாம்
சேகரிக்கப் படுகிறது
நான் கண்டடைந்த அனுபவத்தில்
அர்த்தம் கொள்வதை
நொடிக்கு நொடி
என்னில் யார் யாரோ
வரைந்த ஓவியத்தில்
என் விருப்பத் தேர்வில்
முகத்தைக் காட்டுகிறேன்
மற்றும் என் பயணமும் உன் பயணமும்
வேறு வேறு திசைகளில் செல்வதை
நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
புஷ்பால ஜெயக்குமார்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!