பயந்தாங்கொள்ளி நகர் – சிறுகதை

‘பயந்தாங்கொள்ளி நகர்’ என்ற அந்த ஊரின் பெயர்ப் பலகையைப் பார்த்ததும் எங்களுக்கே உதறல் எடுக்க ஆரம்பித்தது.

‘வீரமுரசு’ பத்திரிகை நிருபர்களான நாங்கள், தீபாவளி சிறப்பிதழுக்காக ஊர் ஊராய் அலைந்து வித்தியாசமான செய்திகளைத் திரட்டிக் கொண்டிருந்தோம்.

“சார் இந்த ஊர்ல என்ன பெரிய நியூஸ் இருக்க போகிறது?” – எங்களில் ஒருவர் கேட்டார்.

“இந்த தீபாவளி சிறப்பிதழில் கவர் ஸ்டோரியே இந்த ஊரைப் பற்றித்தான். அட்டகாசமான சப்ஜெக்ட் கிடைச்சிருக்கு. தைரியமா வாங்க. ஊருக்குள்ள போய்ப் பார்ப்போம்.” என்றேன்.

நாங்கள் ஊருக்குள் காலடி எடுத்து வைத்த சமயம், ஊரே வெறிச்சோடிப்போய் மயான அமைதியுடன் காட்சியளித்தது.

அந்த நிசப்தத்தைப் பார்த்ததும் எங்களுக்கே உள்ளுர ஒருவித பயம் ஏற்பட்டது.

எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டு அந்த தெருவிலிருந்த பெரிய வீட்டின் கதவை விரலால் மெதுவாகத் தட்டினார் எங்களில் ஒருவர்.

யாரும் வந்து கதவைத் திறக்கவில்லை. கொஞ்சம் பலமாகவே தட்டினார்.

நிசப்தமான நேரத்தில் அந்தச் சத்தம் எங்களுக்கே ஒருவித பயத்தை ஏற்படுத்தியது.

கதவு மட்டும் திறக்கவில்லை.

அந்த வீட்டின் ஜன்னல் கதவு ஒன்று அதிர்ஷடவசமாகத் திறக்க, மெதுவாக அதன் வழியே ஹாலை எட்டிப் பார்த்தோம்.

உள்ளே இருந்தவர்கள் அருகருகே உட்கார்ந்து ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டிருந்தனர். பயத்தில் அவர்கள் முகம் பேயறைந்ததைப் போல இருந்தது.

நாங்கள் “சா…ர்…ர்” என இழுத்தோம்.

நாங்கள் ஜன்னல் வழியே எட்டிப்பார்ப்பதைப் பார்த்ததும் அவர்கள் அலறியடித்துக் கொண்டு ஹாலை ஒட்டி இருந்த இன்னொரு அறைக்குய் போய் கதவை மூடி தாழிட்டுக் கொண்டனர்.

எங்களுக்கு ஏதோ பேய் படம் பார்ப்பது போல் இருந்தது. சுவாரஸ்யம் விஸ்வரூபம் எடுத்தது. இருந்தாலும் பிள்ளையார் சுழியே ஏமாற்றமளிக்க, திரும்பவும் தெருவுக்கே வந்தோம்.

யாரோ ஒருவர் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி வேக வேகமாக தெருக்கோடியில் சென்று கொண்டிருந்தார்.

அவரிடம் விசாரிக்கலாம் என நினைத்து “ஹலோ! ஒரு நிமிஷம். கொஞ்சம் நில்லுங்க….” என உச்ச ஸ்தானியில் கத்தியவாறே பின்னால் ஓடினோம்.

நாங்கள் பின்தொடர்வதைப் பார்த்த அவர், ஓட்டம் பிடித்தார். நாங்களும் விடாமல் துரத்தினோம்.

மூச்சிரைக்க ஒருவழியாய் அவரைப் பிடித்து “கொஞ்சம் இருங்க ப்ளீஸ்” என்று நிறுத்தினோம். அவரது கை கால்கள் எல்லாம் வெடவெடவென நடுங்கிக் கொண்டிருந்தன.

“சார்… இப்ப என்ன நடந்திருச்சுன்னு இப்படி பயந்து நடுங்குறீங்க…? நாங்க வேற யாருமில்ல. பத்திரிகை நிருபர்கள். அவ்வளவுதான் பயப்படாதீங்க! வாங்க, அப்படிப்போய் உட்கார்ந்து பேசுவோம்” என்றபடி அவரை அந்த பூட்டிய வீட்டின் திண்ணைக்கு தள்ளிக்கொண்டு போய் உட்கார வைத்தோம்.

“இப்ப சொல்லுங்க. உங்க பேரு என்ன சார்?” அவர் பதில் சொல்லாமல் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தார்.

“சார், நாங்க உங்கள ஒண்ணும் செய்ய மாட்டோம். சொல்லுங்க ப்ளீஸ்! உங்க பேரு என்ன?”

முகத்தில் பய உணர்வு அப்பியிருக்க உதடுகள் தந்தி அடிக்க ‘நடுங்கீஸ்வரன்’ என்றார்.

“பொருத்தமான பேரு” என்றோம்.

எங்களில் ஒருவர் கேமராவை சரி செய்துகொண்டு அவரை படம் பிடிக்க, “வேண்டாங்க…. வேண்டாங்க…..” என அலறினார்.

“என்னங்க நீங்க? உங்கள என்ன கொலையா செய்ய போகிறோம்? இப்படிப் பயந்து சாகறீங்களே…!” என்றதும்,

“நீங்க எல்லோரும் உடனே போயிடுங்க. எங்க சங்கத்திற்கு தெரிஞ்சா அவ்வளவுதான். நான் இந்த ஊரிலேயே இருக்க முடியாது” என்றார்.

“சங்கமா…? கொஞ்சம் புரியும்படியாத்தான் சொல்லுங்களேன்.”

“ஆமங்க… எங்களுக்கு ஒரு சங்கம் இருக்கு. நாங்கள்ளாம் அதில ஆயுட்கால மெம்பர்.”

ஆச்சரியம் மேலிட, “உங்க சங்கம் எங்கேயிருக்கு?” என்றதும்,

“‘வெடவெடத்தான்பட்டி’-யில இருக்கு. ‘அகில இந்திய பயந்தாங்கொள்ளிகள் சங்கம்’-ன்னு பேரு”

“ரொம்ப சந்தோஷம். இன்னொரு கேள்வி. இப்படி எல்லோரும் தொடை நடுங்கிகளா இருக்கீங்களே எப்படி இந்த உலகத்துல நீங்கள்லாம் வாழறீங்க?” என் கேள்விக்கு அவர் பதில் சொல்லும்முன் எங்கள் குழுவில் உள்ள மற்றொருவர் கேட்டார்.

“வீட்டைவிட்டு வெளியே வந்து எப்படி நடமாடறீங்க? வீட்டுக்குத் தேவையான பொருட்களை எப்படி வாங்குறீங்க? எப்படி உங்கள் தேவைகளைப் பூர்த்தி செஞ்சுக்கறீங்க?”

“நாங்கள் இந்த நகரைவிட்டு வெளியே எங்குமே தனியாக செல்வதில்லை. அப்படியே சென்றாலும் சங்கம் மூலமாய்த்தான் எதையும் செய்வோம். எல்லோரும் ஒன்றாகச் சென்று தேவையானதை வாங்கி வருவோம். மருத்துவ வசதிகூட எங்கள் சங்கத்திலேயே இருக்கு. தினம் ஒரு டாக்டர் வந்து போவார்.”

“எல்லாம் சரிதான். இப்படிப் பயந்து சாகிற நீங்க, எப்படி டாக்டரிடம் பேசறீங்க? யாராவது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தா எப்படி பிழைக்க வைக்கிறீங்க? ஆபரேஷன்… அது…இது-ன்னு டாக்டர் சொல்லிட்டா என்ன செய்வீங்க?”

“டாக்டர் மருந்து மாத்திரைகள் கொடுப்பதோடு சரி. ஆபரேஷன், ஊசி என்றெல்லாம் ஏதாவது சொன்னால் அதைக் கேட்டதுமே பாதிக்கப்பட்டவரது உயிர் பயத்திலேயே பிரிந்துவிடும்” என்று சாதாரணமாகச் சொன்னார்.

எங்களுக்குப் பைத்தியம் பிடிக்காத குறைதான். கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு மீண்டும் கேட்க ஆரம்பித்தோம்.

“உங்களுக்கெல்லாம் எப்படித் திருமணம் ஆயிற்று? யார் பெண் கொடுக்க முன் வர்றாங்க?”

“இந்த ஊரிலிருந்து பத்துப் பதினைந்து கிலோமீட்டர் சுற்றளவில் எங்க சொந்தக்காரங்க, எங்க இனத்தவங்க நிறையப்பேர் இருக்காங்க. எங்களுக்குள்ளேயே பெண் கொடுத்து பெண் எடுத்தக்குவோம். கோழையூர், உதறல்நகர், பீதிபுரம், அச்சம்பட்டி, நடுங்கீஸ்வரம், இப்படி எவ்வளவோ ஊர்ல எங்க இனத்தவங்க இருக்காங்க”-என அடுக்கிக் கொண்டே போனவர் “சார்… எங்க சங்கத் தலைவர் இன்னைக்கு இங்கே வர்றார். அவர் வர்றதுக்குள்ள தயவு செய்து போயிடுங்க” என்றார் கெஞ்சும் குரலில்.

“ஓ.கே. நாங்க கிளம்பறோம். உங்க தலைவரைப் பார்க்க முடியுமா?” என்றோம்.

“சார்…சார்… என்னை மாட்டி விட்டுடாதீங்க…” என்றவர் அழவே ஆரம்பித்துவிட்டார்.

அவரை சமாதானப்படுத்தி அங்கிருந்து கிளம்புவதற்குள் எங்களுக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது.
எங்களில் ஒருவர், “சார், இவங்களைப் பற்றி நம்ம பத்திரிக்கையில எழுதணுமா? ‘வீரமுரசு’வின் இம்மேஜ் போயிடும் போலிருக்கே” என்றார்.

“நோ…நோ… நீங்க நினைக்கிற மாதிரி இல்ல. இவங்களை அடிக்கடி சந்திச்சுப் பேசி, ஒவ்வொருத்தரின் பயத்தையும் மாற்ற முயற்சி செய்யணும். நம்மைப்போல இவங்களும் தைரியமா, இயல்பா மாறணும். அதுதான் ‘வீரமுரசு’வின் நோக்கமா இருக்கணும். கொஞ்சம் கஷ்டமான காரியம்தான்” என்றேன்.

அந்த நகரைவிட்டு பஸ்ஸில் கிளம்பினோம். இந்த அனுபவங்களை எப்படி பத்திரிகையில் போடுவது என்பது பற்றி எங்களுக்குள் பேசிக்கொண்டு வந்தோம்.

அப்போது அருகில் இருந்த ஒருவர், “சார், உருப்படியாய் ஏதாவது செய்யுறத விட்டுட்டு இப்படி நேரத்த வீணடிக்கிறீங்களே…? எத்தனையோ பத்திரிகைக்காரங்களும் பெரிய பெரிய ஆளுங்களும் வந்து, என்னன்னவோ செய்தும் இவங்கள திருத்த முடியல. இவங்க ஒவ்வொருத்தரா இந்த உலகத்த விட்டுப் போற நாள்தான் இவங்க பயம் தெளியும் நாள்!” என்றார்.

“இவங்களைத் திருத்துறது அவ்வளவு கஷ்டமான காரியமா?” என்றோம் கோரஸாக.

“பின்ன என்ன சார்? பஸ் பிரயாணம் செய்ய தயங்குறாங்க. வாகனத்தில போக பயம். தனியா யாரும் வெளியே வரமாட்டாங்க. இருட்டான பிறகு யாரையும் வெளியே பார்க்க முடியாது. புதுசா யாரையாவது பார்த்தால் ஓடி ஒளிஞ்சுக்குவாங்க. அவங்க உலகமே தனி. விசித்திரப் பிறவிகள் சார் அவங்க” என ஒரு குட்டிப் பிரசங்கமே செய்தார்.

அவர் இறங்க வேண்டிய இடம் வந்ததும் எங்களிடம் விடை பெற்றார்.

அலுவலகத்தை அடைந்து எடிட்டரிம் எங்கள் புதுமுயற்சியை எடுத்துச் சொன்னோம்.

எங்களை உற்சாகப்படுத்திய அவர் “இந்த முயற்சியில் வெற்றிபெற எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. நம்ம பத்திரிக்கை வித்தியாசமாக ஒரு சாதனையைச் செய்ய வேண்டும்” என்றார்.

அடுத்த ஒருசில மாதங்களில் இன்னும் சிலர் உதவியோடு அந்த விசித்திர ஊர்களுக்குச் செல்ல ஆரம்பித்தோம்.

அந்தக் கால எம்.ஜி.ஆர். திரைப்படத்தில் துவங்கி, இந்தக்கால சூப்பர் ஸ்டார் வரை அனைத்து நடிகர்களின் வீரமிக்க திரைப்படங்களையும் அவர்கள் வசிக்கும் ஒவ்வொரு ஊரிலும் திரையிட்டுக் காட்டினோம்.

சுபாஷ் சந்திரபோஸ், கட்டபொம்மன் போன்றவர்களின் வீரதீர செயல்களையும் மைக்குகள் கட்டி விளக்கினோம். இந்திய வீரர்கள் கலந்து கொண்ட பல போர்களைப் பற்றி எடுத்துக் கூறினோம்.

வீரன் என்பவன் ஒருநாளில் மரணத்தைத் தழுவுவதையும், கோழை தினம் தினம் செத்து மடிவதையும் பல்வேறு நிகழ்வுகள் மூலம் விளக்கிப் புரிய வைத்தோம்.

விளைவு…. ‘அகில இந்திய பயந்தாங்கொள்ளிகள் சங்கம்’ பல துண்டுகளாக உடைந்தது. கோஷ்டிப் பூசல்கள் உருவாயின. பெரும்பாலானோர் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சகஜ நிலைக்குத் திரும்பினர்.

அடுத்த சில மாதங்களில் பயந்தாங்கொள்ளி நகர், கோழையூர் போன்ற ஊர்களின் பெயர்கள் மாற்றம் பெற்றன.

பெரும்பாலான பயந்தாங்கொள்ளிகள் துணிச்சல் மிக்க, வீரதீரர்களாய் மாறினார்கள்.

‘வீரமுரசு’-தீபாவளி சிறப்பிதழில் இவர்களைப் பற்றிய கட்டுரை வெளியாகி அமர்க்களப்பட்டது.

பத்திரிகையின் சர்குலேஷனும் எகிறியது.

எங்கள் பத்திரிகை ஆசிரியர் மற்றும் நிருபர்களை உடனே டெல்லி வந்து குடியரசுத் தலைவரைச் சந்திக்கும்படி அரசு ஆணை வந்தது.

எங்களை இனம் புரியாத பயம் கவ்விக் கொண்டது. ‘எதற்காக குடியரசுத் தலைவர் அழைக்கிறார்?’ பயந்தபடி நாங்கள் நான்கைந்து பேர் டெல்லி சென்றோம்.

ஜனவரி 26 குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் கொடியேற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட கையோடு, எங்களைப் பாராட்டி, ‘வீரமுரசு’ பத்திரிகை நாட்டுக்கு ஆற்றிய சேவைக்காக குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கப் போவதாக தகவல் கிடைத்தது.

பயம் நீங்கி எங்கள் எல்லோருடைய முகங்களும் மகிழ்ச்சியால் பிரகாசித்தன!

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.