உங்கள் சமையலறை சிறக்க சில பயனுள்ள சமையல் குறிப்புகள்.
கோதுமையை கழுவி நான்கு மணி நேரம் ஊறவைத்து உலர்த்திபின் மிசினில் அரைத்து சப்பாத்தி செய்தால் மிகவும் மிருதுவான சப்பாத்தி கிடைக்கும்.
இட்லி மாவில் உளுந்து போதாமல் மாவு கெட்டியாய் இருந்தால், பச்சை அப்பளங்களைத் தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் போட்டு ஒரு நிமிடம் ஓடவிடுங்கள்.
அதனை மாவில் கலந்து அதற்குப்பின் இட்லிகள் வார்த்தால் இட்லி பூ மாதிரி இருக்கும்.
வாழைப்பூ, வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கினால் உடனே அவற்றை மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். இதனால் வாழைப்பூ மற்றும் தண்டின் நிறம் மாறாது. கறை பிடிக்காது. துவர்ப்பு நீங்கும்.
தானியம் மற்றும் பயிறு வகைகளை எட்டு மணி நேரம் ஊறவைத்து, தண்ணீர் வடித்து, ஹாட் பேக்கில் போட்டு மூடி மறுநாள் திறந்து பார்த்தால் முளை கட்டிய தானியம் தயார். இம்முறை தானியங்களை முளை கட்டுவதற்கு எளிதானதாகும்.
கிழங்குகள் சீக்கிரம் வேக அவற்றை பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து வேக வைத்தால் எளிதில் வெந்து விடும்.
பிரட்டிற்கு ஜாம் இல்லையென்றால் கவலை வேண்டாம். ஒரு பிரட்டில் நெய் தடவி அதன்மீது தேன் தடவிய பிரட்டை மூடி சாப்பிடலாம். சுவை நன்றாக இருக்கும். இந்த பிரட்டை பிரிஜ்ஜில் வைத்தும் சாப்பிடலாம்.
இடியாப்பம் செய்து நிறைய மீந்து விட்டால் அதனை ஒருநாள் முழுவதும் புளித்த தயிரில் ஊற வைத்து நிழலில் உலர்த்தி வற்றலாக்கி விடுங்கள். நன்றாக காய்ந்தபின், டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளவும். தேவையானபோது வறுத்து சாப்பிடலாம்.
மழைக்காலத்தில் உப்பில் நீர் சேர்ந்துவிடும். அந்த சமயத்தில் நாலைந்து அரிசியை உப்பு ஜாடியில் போட்டு வையுங்கள். உப்பில் தண்ணீர் படியாமல் இருக்கும்.
உளுந்தை கொஞ்சம் குறைவாகப் போட்டு கெட்டியாக அரைத்து இட்லி வார்க்கும்போது, ஒரு கிண்ணம் நல்லெண்ணெய் விட்டு கலக்கி இட்லி வார்த்தால், இட்லி மிருதுவாக இருக்கும்.
இரண்டு நாட்கள்வரை கெட்டுப் போகாமலும் இருக்கும். பயணம் மேற்கொள்ளும்போது இந்த முறையில் இட்லி செய்யலாம்.
துளசியை குடிக்கும் தண்ணீரில் போட்டு வைத்தால் குடிதண்ணீர் மணமாக இருக்கும்.
தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் போன்ற சாதங்களை தயாரிக்கும்போது பொரிகடலையை வறுத்துக் கொட்டினால் மிகவும் சுவையாக இருக்கும்.
இறைச்சியை வேகவைக்கும் போது சிறிது பாக்கைச் சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும்.
இட்லிக்கு ஊறவைக்கும்போது ஒரு பிடி அவல் சேர்த்து அரைத்தால் இட்லி மிருதவாக இரக்கும்.
நுங்கை மிக்ஸியில் அரைத்து அதில் பால் கலந்து சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து பிரிட்ஜில் வைத்து பருக கோடைக்கு இதமாய் இருக்கும்.
முட்டைக்கோஸை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்.
கீரை மசியல் செய்யும்போது சிறிது சோறு வடித்த கஞ்சியைவிட்டு மசித்தால் நன்கு குழைவாக மசியும்.
வறுத்த வெங்காயத்தை சாம்பாரில் சேர்த்து விட்டால் சாம்பார் கமகம வாசனையுடன் இருக்கும்.
குலோப்ஜாமூன் பாகில் ஒரு ஸ்பூன் தேன்விட்டு இறக்கினால் பாகு உறையாமலும் கெட்டுப்போகாமலும் இருப்பதுடன் கூடுதல் சுவையுடன் நன்றாக இருக்கும்.
ரசம் தயாரிக்கும்போது அதனுள் தேங்காய்த் தண்ணீரைச் சேர்த்தால் ரசம் அருமையாக ருசிக்கும்.
தோசை சுடும்போது கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு எடுக்க முடியாமல் இருந்தால், கோலியளவு புளியை ஒரு வெள்ளைத்துணியில் மூட்டையாகக் கட்டிக் கொண்டு அதனைக் கொண்டு எண்ணையைத் தொட்டு கல்லில் தேய்த்து பிறகு மாவை வார்த்தால் தோசை நன்றாக வரும்.
சீடை செய்யும்போது சீடை வெடிக்காமல் இருக்க சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெயில் போடுங்கள்.
நெய்யுடன் சிறிதளவு வெல்லத்துண்டைப் போட்டு வைத்தால் நெய் புதிதுபோலவே இருக்கும்.
–ஜான்சிராணி வேலாயுதம்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!