பயிர் சுழற்சி – மண் வளம் காக்கும் மகசூல் பெருக்கும்

பயிர் சுழற்சி பராம்பரியமாக நம்முடைய நாட்டில் வேளாண்மையில் பின்பற்றும் ஓர் நடைமுறையாகும். இம்முறையானது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைமுறையில் இருந்து வருகிறது.

பயிர் சுழற்சி என்பது ஒரே நிலத்தில் வெவ்வேறு வகையான பயிர்களை வெவ்வேறு வகையான காலநிலைகளில் பயிர் செய்யும் முறையைக் குறிக்கும்.

இம்முறையில் தன் வளத்தை திரும்பப் பெறுவதற்காக விளைநிலம் சிறிது காலம் பயிர் செய்யாமல் அப்படியே விடப்படுகிறது. அவ்வாறு விடும்போது விளைநிலம் கால்நடைகள் மேய்சலுக்காகவும் பயன்படுத்தப்படும்.

பயிர் சுழற்சி முறையினை பழங்காலத்திலிருந்து வேளாண்மை செய்பவர்கள் பயன்படுத்தி வெற்றி கண்டாலும் அதற்குரிய அறிவியல் முறைகளையும், சுற்றுசூழலில் அதனால் உண்டான நேர்மறையான தாக்கங்களையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை.

இயற்கை வேளாண்மையின் முக்கிய அம்சமாக பயிர் சுழற்சியானது கருதப்படுகிறது.

பயிர் சுழற்சி முறையினால் உண்டாக்கும் சாதகம் மற்றும் பாதகங்களைப் பற்றிப் பார்ப்போம்.

பயிர் சுழற்சி தரும் நன்மைகள்

மண்ணின் வளம் பாதுகாக்கப்படுதல்

ஒவ்வொரு பயிரும் தனக்கென ஒருவித குறிப்பிட்ட ஊட்டச்சத்துகளை உறிஞ்சுகின்றது. அதே நேரத்தில் குறிப்பிட்ட ஊட்டச்சத்துகளை மண்ணில் நிலைநிறுத்துகின்றது.

ஒரே மாதிரியான பயிர்களைத் தொடர்ந்து பயிர் செய்யும்போது நிலத்தில் உள்ள குறிப்பிட்ட ஊட்டச்சத்துகள் ஒரே அளவில் தொடர்ந்து உறிஞ்சப்படுகிறது. இதனால் அந்நிலத்தில் குறிப்பிட்ட ஊட்டச்சத்து குறைபாடு உண்டாகிறது.

எனவே பயிர்சுழற்சி முறையின் அடிப்படையில் வெவ்வேறு வகையான பயிர்களை பயிரிடும்போது முதலில் பயிர்செய்த பயிரினால் உறிஞ்சப்பட்ட ஊட்டச்சத்து அடுத்த பயிரினால் ஈடுசெய்யப்படும்.

எடுத்துக்காட்டாக நெல் மற்றும் கோதுமையை பயிர் செய்து முடித்தபின், பயறு வகைகளை பயிர் செய்யும்போது நெல் மற்றும் கோதுமையால் உறிஞ்சப்பட்ட நைட்ரஜன் சத்து மண்ணிற்கு பயறு வகைத்தாவரங்களால் திரும்பப் பெறப்படுகிறது.

விளைநிலத்தினை பயிர்செய்யாமல் விடும்போது விலங்குகளால் மேய்ச்சல் நிலமாகப் பயன்படுத்தப்பட்டு அவற்றின் கழிவுகள் மண்ணின் வளத்தைக் கூட்டுகின்றன.

பயிர் சுழற்சியில் பயிர்செய்யப்படும் ஒவ்வொரு பயிரினாலும் உண்டாகும் மைக்ரோ உயிரினங்களால் மண்ணின் வளம் பாதுகாக்கப்படுகிறது.

இம்முறையினால் மண்ணில் குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கள் அதிகரிப்போ அல்லது குறைபாடோ உண்டாவதில்லை. இதனால் மண்ணானது தரமானது பாதுகாக்கப்படுகிறது.

மகசூல் அதிகமாகப் பெறுதல்

பயிர் சுழற்சியினைப் பயன்படுத்தும்போது மண்ணின் உள்ள ஊட்டச்சத்துக்கள் பாதுகாக்கப்படுவதால் பயிரிருக்கு தேவையான ஊட்டச்சத்து போதிய அளவு கிடைப்பதால் மகசூல் அதிகமாகக் கிடைக்கிறது.

மேலும் இம்முறையினைப் பின்பற்றும்போது பூச்சிகளினால் உண்டாகும் பாதிப்பு குறைவு. ஆகவே பயிரினால் கிடைக்கும் மகசூல் அதிகமாகவும், தரமானதாகவும் இருக்கிறது.

மண்ணரிப்பைத் தடுத்தல்

மண்ணரிப்பு என்பது நிலத்தின் மேலடுக்கானது காற்று மற்றும் மழையால் அடித்துச் செல்படுவதால் நிகழ்கிறது. பயிர் சுழற்சியினைப் பயன்படுத்தி பயிர் செய்யும்போது தாவரத்தின் வேர்கள் மண்ணரிப்பு ஏற்படாமல் தடுக்கின்றன.

இம்முறையில் உரவகைத் தாவரங்களான கொழுஞ்சி, சணப்பை ஆகியவைற்றை பயிர்செய்து மடக்கி உழப்படுவதால் மண்ணின் வளம் அதிகரிப்பதோடு மண்வளம் பாதுகாக்கப்படுகிறது.

பூச்சிகள் மற்றும் தொற்றுநோய் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு

ஒரு பயிரானது குறிப்பிட்ட வகை ஒட்டுண்ணியால் பாதிக்கப்படலாம். ஒரே மாதிரியான பயிர்களைப் பயிர்செய்யும்போது ஒட்டுண்ணியால் பாதிப்பு அதிகமாக இருக்கும்.

பயிர்சுழற்சியில் ஒட்டுண்ணியின் வாழ்க்கைமுறை மற்றும் வாழிடம் பாதிக்கப்பட்டு தொற்றுநோய்த் தாக்கம் குறையும்.

சில ஒட்டுண்ணிகள் குறிப்பிட்ட பருவத்தில் குறிப்பிட்ட தாவரங்களைத் தாக்கும். எனவே வேளாண்மை செய்பவர்கள் அப்பருவத்தில் பயிர்சுழற்சியினால் வேறுவகை பயிரினைப் பயிர்செய்து ஒட்டுண்ணி பெருக்கத்தினைத் தடைசெய்யலாம்.

இதனால் பூச்சிகொல்லிகளைப் பயன்படுத்துவது குறைந்து சுற்றுசூழல் பாதுகாப்பு பெறலாம்.

களைசெடிகளின் பெருக்கத்தைத் தடுத்தல்

பயிர்சுழற்சியானது இயற்கையான களைச்செடி பெருக்கத்தைத் தடுக்கும் முறையாகும். களைச்செடியானது பயிருடன் ஊட்டச்சத்து மற்றும் நீருக்கு போட்டியிட்டு அதனுடைய வளர்ச்சி மற்றும் மகசூலைக் குறைக்கிறது.

இம்முறையினைப் பயன்படுத்தும்போது பயிர்களுக்கு தேவையான தண்ணீர், பயிர்வளர்ச்சி காலம், ஊட்டச்சத்து ஆகியவற்றின் வேறுபாடு காரணமாக களைச்செடிகள் வளருவது அல்லது பெருகுவது இயற்கையாகவே குறைக்கப்படும்.

எனவே களைச்செடிகளின் குறைபாட்டிற்காக செய்கை வேதிப்பொருட்கள் பயன்படுத்த தேவையில்லை. இதனால் மண்ணின் தன்மையும், சுற்றுசூழலும் பாதுகாக்கப்படுகிறது.

மண்ணின் கட்டமைப்பு பாதுகாக்கப்படுதல்

ஒரு குறிப்பிட்ட பயிர்வகையை தொடர்ந்து பயிர்செய்யும்போது மண்ணின் இயற்பியல் பண்புகள் பாதிக்கப்படுவதோடு மண்ணும் கெட்டிப்படும்.

பயிர் சுழற்சியினைப் பின்பற்றும்போது மண் கெட்டிப்படாமல் விதை முளைத்தல் மற்றும் வேர்கள் ஆழமாகச் செல்லுதல் ஆகியவை எளிதாகவும், தரமானதாகவும் நிகழ்கின்றன.

இம்முறையினால் மண்ணானது பொலபொலவென இருப்பதால் மண்ணில் நீர்ஊடுருவுதல், காற்றோட்டம் ஆகியவை உண்டாகி மண்ணின் இயற்பண்புகள் பாதுகாக்கப்படுகின்றன. இதனால் பயிர்களின் மகசூல் அதிகரிக்கிறது.

மாசுபாட்டினைத் தடுத்தல்

ஒரு குறிப்பிட்ட வகைத் தாவரத்தைப் பயிர் செய்யும்போது அதிக மகசூலைப் பெறுவதற்காக செயற்கை பூச்சிகொல்லிகள் மற்றும் பயிர்வளர்ச்சி ஊக்கிகள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் மண்ணின் வளம் பாதிக்கப்படுவதோடு, சுற்றுசூழலும் பாதிப்படைந்து மகசூலும் குறைகிறது.

பயிர்சுழற்சியினால் மண்ணின் வளம் அதிகரிப்பதோடு இயற்கையாகவே களைகள் மற்றும் தொற்றுநோய்கள் குறைவதால் பூச்சிகொல்லிகளோ, பயிர்வளர்ச்சி ஊக்கிகளோ தேவைப்படுவதில்லை. இதனால் மாசுபாடுக் குறைந்து மகசூலும் அதிகரிக்கிறது.

பயிர்சுழற்சியின் பாதகங்கள்

பயிர்சுழற்சியால் சிலநேரங்களில் முதலில் பயிர் செய்த பயிரிலிருந்து தொற்றுநோயானது அடுத்து பயிர்செய்த பயிருக்கும் பரவி மகசூலில் பாதிப்பினை ஏற்படுத்தக்கூடும்.

இதற்கு முதலில் பயிர் செய்த பயிரின் தொற்றுநோயால் அடுத்து பயிர்செய்யப்படும் பயிருக்கு பரவ வாய்ப்பு உள்ளதா? என்பதை அறிந்து மாற்றுப்பயிரைத் தேர்வு செய்து இதனைத் தவிர்க்கலாம்.

பயிர்சுழற்சியினை முறையாக சரிவர செயல்படுத்தவில்லை எனில் மண்ணின் ஊட்டச்சத்துகளில் பாதிப்பு உண்டாகும். இக்குறைபாடு சரிசெய்ய அதிக நாட்கள் ஆகும். ஆகவே இம்முறையினை முறையாக பயன்படுத்திகால் இதனைத் தவிர்க்கலாம்.

மொத்தத்தில் பராம்பரிய பயிர் சுழற்சி முறையினை சரிவர பயன்படுத்தி சுற்றுசூழலையும், மகசூலையும், மக்களின் ஆரோக்கியத்தையும் பேணுவோம்.

வ.முனீஸ்வரன்