“மணி என்ன ஆகுது! இன்னும் அடுப்படியிலே என்னதான் செய்வியோ தெரியல! எத்தனை தடவ சொன்னாலும், உன்கிட்ட நேரத்துக்கு கிளம்ப சொல்றதே வேஸ்ட்!”
புலம்பியபடியே தவித்துக் கொண்டிருந்தான் குமார்.
வேகமாக கிளம்புவது போல, இங்கும், அங்கும் ஓடி கொண்டிருந்தாள் சுந்தரி.
என்னதான் காட்டு காத்து கத்தினாலும், சுந்தரிக்கு, என்னவோ எங்கையோ யாரோ யாருக்கோ சொல்வதுபோல தான் நடந்து கொள்வாள்.
இது, இன்று நேத்தல்ல. இந்த மாதிரி பேச்சை கேட்டு 22 வருடங்கள் ஓடிவிட்டன.
எதையும் இப்போதெல்லாம் காதில் போட்டுக் கொள்வதாய் இல்லை. இந்த சத்தத்துக்கெல்லாம் பயப்படுற மாதிரியும் தெரியல. காலை டிபன் சாப்பிட்ட பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தாள்.
கடிகாரம் தன் பங்கிற்கு ஒன்பது தடவை அடித்துக் கொண்டிருந்தது. ‘இனி சரிப்பட்டு வராது!’ என்று தோன்றியது போல இருந்தது சுந்தரிக்கு.
ஒருபாட்டலில் தண்ணீர் பிடித்துக்கொண்டு கிச்சனை விட்டு வெளியே வந்தாள்.
குமார் இருசக்கர வாகனத்தில் உக்கார்ந்து கொண்டு வாசலையே முறைத்தபடி நின்றுகொண்டிருந்தார்.
“இன்னும் என்னதான் செய்ற, ஒரேடியா மதியத்துக்கு சமைச்சு வைச்சிட்டு வா. அதுவரைக்கும் வெளியே வைட் பண்ணிட்டு இருக்கேன்!”
“இதோ வந்துட்டேன்!”, என்றவள் வாய்க்குள்ளே முணுமுணுத்தபடியே “எல்லாத்தையும் இப்ப செஞ்சாலும், வெளிய போயிட்டு வந்து செஞ்சாலும், நான் தானே செய்யணும், இவுங்களுக்கு என்ன, உள்ள நொழஞ்சவுடனே சாப்பாடு வேணும், எல்லாத்தையும் ரெடி பண்ணி வச்சிட்டு வந்தா தானே சரியாய் இருக்கும்!”
ஒருவழியாக வீட்டை பூட்டிவிட்டு வெளியே வந்தாள் சுந்தரி.
“எல்லாத்தையும் எடுத்துகிட்டியா?”
“ம்.. ம்.. உங்க ஜாதகம், தண்ணி பாட்டில், மதிய மாத்திரை, பிஸ்கட் பாக்கெட், வேற என்ன?”
“இன்னைக்கு கடைசி சனி, கோவிலுக்கு உள்ள எண்ணெய், திரி, அர்ச்சனை பொருள்”.
“அதை கடையில வாங்கிக்கலாம்”
“கோவிலுக்கு, போயிட்டு பின்ன ஜோசியர் வீட்டுக்கு போயிட்டு வரணும்னா லேட்டா ஆயிடும், சீக்கிரமா கிளம்புன்னா, இவ்வளவு லேட்டா கிளம்புற”.
“அதுக்கு காலைல சாப்பிடாம கிளம்பி இருக்கணும். சாப்பாடும் வேணும், சீக்கிரமும் கிளம்பணும்னா எப்படி?”
“சரி! சரி! பேசிட்டு நிக்காம வந்து உக்காரு!”
வண்டி மெல்ல நகர தொடங்கியது.
சாந்தமானது போல, சுந்தரி பேச்சை மாற்றினாள். இல்லாவிட்டால், லேட்டா ஆனதையே கடைசிவரை விடாமல், ஜோசியர் வீடு வரைக்கும் பேசியே கொன்னுடுவார்.
“எப்படியே, இந்த வாரத்தோட ஜோசியர் சொன்ன ஒன்பது நாளைக்கு சனிக்கு அர்ச்சனை பன்றது முடியப் போகுது. அவர் வேற ஏதாவது பரிகாரம் சொன்னாரா?”
“இல்ல, இவ்வளவுதான். முடிச்சிட்டு வாங்க ஒரு பரிகார பூஜை மட்டும் வீட்டுல பண்ணிட்டா போதும். உங்களுக்கு எந்த ஆபத்தும் கிட்ட நெருங்காதுன்னார்”.
“பூஜை, இன்னைக்கா?”
“இல்ல, போனா தான் தெரியும்!”
“அவரு சொன்னபடியே நடந்ததுனால தான், நமக்கு வந்த ஆபத்து எல்லாம், தலைக்கு வந்தது, தலை பாகையோட போச்சுன்னு, சொல்ற மாதிரி இருந்திச்சி!”
“ஆமா, நல்ல ஜோசியர். இந்த சின்ன வயசுல, என்ன ஒரு திறமை?”
“என்ன வயசு இருக்கும்?”
“என்ன ஒரு 35 வயசு இருக்கலாம்”.
“ம்.. ம்… படிச்சி வந்திருப்பாரோ!”
“இல்ல, அவுங்க பரம்பரையே ஜோசியம் பாக்குறதுதான் தொழிலே”
“ஓ, அதான், இவ்வளவு நல்லா பாக்குறாரோ!”
“அவுங்க அப்பா இருக்காரா?”
“அவுரு, சென்னைல செட்டிலாயிட்டாரு. அங்க ஒரு ஆளுக்கு 500 ரூபாய் வாங்குறாரு. இங்க, 100, 200 குடுக்கவே யோசிக்கிறாங்க”.
“ஆமா, ஜோசியருக்கு யாருங்க ஜோசியம் பார்ப்பா?”
“அவுங்களுக்கென்ன, அவுங்களுக்கு எந்த நேரத்துல எப்படி நடந்துக்கணும்னு தெரியும். அதுபடி, பூஜையெல்லாம் பண்ணி சூப்பரா இருப்பாங்க. நாம தான், ஒன்னும் தெரியாம இப்படி, கிரஹ பலன்ல மாட்டிகிட்டு முழிக்கிறோம்”.
வண்டி கோவிலை நெருங்கியது.
கூட்டம் சற்று அதிகம் தான், இருந்தாலும் குமாருக்கு கவலை இல்லை.
இங்கு அடிக்கடி வந்து வந்து போவதால், வண்டிக்கு டோக்கன் குடுக்கிறவனலேருந்து, பூக்கடை, ஐயர் இப்படி எல்லோரும் அத்துப்படி.
இவனுக்கு ஏழரை சனி நடக்குது. பரிகாரம் செய்யாமல் விட்டால் உயிருக்கு ஆபத்து வரலாம்.
அதனால் குறைந்தது 9 வாரம் கண்டிப்பா கோவிலுக்கு போய் அர்ச்சனை பண்ண வேண்டும். அப்போது தான், சனி பகவானின் தாக்கம் குறையும், என்று ஜோசியர் கூறியிருந்தார்.
இன்றுடன் முடிவடைகிறது. ஆனால், ஏழரை சனியின் தாக்கம் குறைய ஒரு வருடத்திற்கு மேல் உள்ளது. அதற்கு தான், பூஜை நடத்தவேண்டுமென கூறியிருக்கிறார்.
கோவிலில் எடுபிடியாக இருக்கும் நபர் வந்து ஒரு வணக்கம் போட்டார்.
“வாங்க, இந்த பக்கமா சீக்கிரமா போய்டுலாம்!” சிறப்பு தரிசன வழியாக அழைத்து சென்றார்.
வரும்போதெல்லாம் இவரையும் குமார் கவனிப்பதுண்டு. எல்லாம் பணம். பணம் தானே முடிவு செய்கிறது எல்லா செயல்களையும்.
ஐயர் வாய் நிறைய பற்களுடன் வரவேற்றார். இவனுக்கு பெருமையாக இருந்தது.
காரணம் இவன் கூட்டத்தில் சிக்காமல் போவதால் மட்டுமல்ல, சுற்றி இருப்பவர்கள் கஷ்டப்பட்டு நின்றுகொண்டு இருக்கும்போது, வந்தவுடன் நேராக சாமியிடம் செல்வதில் அப்படி ஒரு ஆனந்தம்.
இப்போது பக்தியைவிட, பகட்டான வாழ்வுதான் மேலோங்கி நின்றது.
‘சாமியின் பக்கத்தில் நிற்பவனே பணம் தான் பெரிது!’ என்று எண்ணும்போது ஒரு சாமானியனுக்கு எப்படி வரும் பக்தி.
‘தட்டில் போட்டால் திருநீறு, இல்லா விட்டால் வெறுமனே பாரு!’ என்ற சித்தாந்தம் தான் இன்றைய கால கட்டத்தில் மேலோங்கி நிற்கிறது.
பக்தியால் பாடியே கோவில் கதவுகளை திறந்த காலம் போய், சாவி போட்டும் திறக்க முடியாமல் திணறும் காலமாகிவிட்டது.
அர்ச்சனை முடிந்து ஒருவழியாக வெளியே வந்து ஜோசியர் வீட்டுக்கு வண்டி புறப்பட்டது.
“நல்ல தரிசனம் இல்லைங்க!”
“ஆமா!”
“நமக்கு ஆளு இருக்காங்க, வந்ததும் அர்ச்சனையை முடிச்சி, சாமிய பார்த்திட்டு கிளம்பிட்டோம்”
“இல்லாதவங்க, பாவம்”
“அதுக்கு என்ன செய்யறது. நாமளும் கியூவுல நின்னா எப்ப முடிச்சிட்டு, எப்போ போய் ஜோசியரை பார்த்திட்டு வீட்டுக்கு போறது”
பேசிக்கொண்டே வந்ததில் ஜோஸ்யரின் வீடு அருகில் வந்தது கூட தெரியவில்லை.
ஜோஸ்யரின் வீட்டு வாசலில், ஒரே கூட்டம். நெறைய வண்டி வாகனங்கள் அதோடு மக்கள் கூட்டம்.
சேர்ந்து சேர்ந்து பேசிக்கொண்டு எல்லோரின் முகத்திலும் ஏதோ ஒருபதட்டம், ஒருதவிப்பு, ஒருவிதமான சோகமும் இருந்தது.
ஆனால் குமாருக்கு எண்ணமெல்லாம் ‘நமக்கு உடனே ஜோசியரை பார்க்க முடியுமோ முடியாதோ!’ என்ற எண்ணம் மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது.
குமார் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, ஜோஸ்யரின் வீட்டுக்கு சென்றார்.
அங்கு எப்போதும் இருக்கும் வரவேற்பாளரையும் காணவில்லை.
எல்லோரும் வெளியே நின்று எதிப்புற ரோட்டையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
அங்கு நிற்பவர்களை யாரையுமே குமாருக்கு தெரியாது. எல்லோருமே புது முகம்.
வெளியில் நின்றுகொண்டிருந்தவரிடம் மெல்ல கேட்டார்.
“என்ன எல்லோரும் வெளியே நிக்கிறீங்க. நீங்க ஜோசியம் பாக்க வந்துருக்கீங்களா?”
“இல்லங்க, நான், அவரோட சொந்தக்காரன்!”
“ஜோசியர் இருக்காருங்களா?”
“நீங்க?”
“ஜோசியம் பார்க்க வந்திருக்கோம், அவரு இன்னைக்கு வர சொல்லிருந்தாரு”
இதை கேட்டதும் கண்களிலிருந்து லேசாக கண்ணீர் கசிய தொடங்கியது.
“என்னங்க, என்னாச்சி?”
“ஜோசியர், ரொம்ப சீரியஸா ஹாஸ்பிடலுக்கு தூக்கிட்டு போயிருக்காங்க!”.
“என்னாச்சி?”
“காலைல, வாக்கிங் போயிருக்காரு, பின்னாடி வந்த லாரிக்காரன் இடிச்சிட்டு போய்ட்டான். மண்டையில சரியான அடி. பொழைக்கிறது கஷ்டம்னு சொல்லிட்டாங்க!”
இப்போது குமாருக்கு தலை சுற்றியது. முதல் தடவை வரும்போது, ஜோசியர் சொன்னது நினைவுக்கு வந்தது.
“எனக்கும் ஏழரை சனி தான் நடக்குது. நாங்க 28 நாள் சனி கோவிலுக்கு போய் அர்ச்சனை, பூஜையெல்லாம் பண்ணிணோம். அப்போதான், சனியோட வக்கிர காலத்துல, நம்மள காத்துக்க முடியும்னு.”
மெல்ல வண்டியை எடுத்து வீட்டுக்கு திரும்பினான் குமார்.
வழியெல்லாம் ஒரே சிந்தனைதான். ஜோசியம், பரிகாரம், கடவுள் இதையெல்லாம் விட பயம்; அதையும் தாண்டி விதி.
இதில் எதை நினைப்பது. புரியவில்லை குமாருக்கு.
சுந்தரியை மவுனம் மட்டுமே சூழ்ந்திருந்தது. விடை எதுவுமே தெரியவில்லை.
பொய்கை கோவி அன்பழகன்
மயிலாடுதுறை
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!