பருப்பு பொடி சூடான சாதத்துடன், பொரித்த அப்பளத்துடன் ரசித்து சுவைத்து உண்ணத் தக்க வகையிலான பொடி வகை ஆகும்.
நிறைய உணவகங்களில் மதிய உணவிற்கு பருப்பு பொடியை உண்ணக் கொடுப்பர்.
சுவையான பருப்பு பொடியை வீட்டில் தயார் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு – 100 கிராம்
கடலை பருப்பு – 1 ஸ்பூன்
பொரிகடலை (வறுகடலை) – 100 கிராம்
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 4 எண்ணம் (நடுத்தர அளவு)
வெள்ளைப் பூண்டு – 5 பல் (நடுத்தர அளவு)
பெருங்காயப் பொடி – சிறிதளவு
கல் உப்பு – தேவையான அளவு
நல்ல எண்ணெய் – மிகவும் சிறிதளவு
பருப்பு பொடி செய்முறை
மிளகாய் வற்றலை காம்பு நீக்கிக் கொள்ளவும்.
வெள்ளைப் பூண்டினை தோலுடன் நசுக்கி எடுத்துக் கொள்ளவும்.
துவரம் பருப்பு, கடலை பருப்பு இரண்டையும் வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
பொரிகடலையை வெறும் வாணலியில் போட்டு சூடேறும் வரை மட்டும் வறுத்துக் கொள்ளவும்.
மிளகு, சீரகம், மிளகாய் வற்றல் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.
வாணலியில் மிகவும் சிறிதளவு நல்ல எண்ணெய் விட்டு நசுக்கிய வெள்ளைப் பூண்டினைச் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
வறுத்த பொருட்களை நன்கு ஆற விடவும்.
கலவை நன்கு ஆறியதும் மிக்ஸியில் துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு, சீரகம், மிளகாய் வற்றல், சேர்த்து லேசாக அடித்துக் கொள்ளவும்.
பின்னர் அதனுடன் பொரிகடலை, வெள்ளைப் பூண்டு, பெருங்காயப் பொடி, கல் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
சுவையான பருப்பு பொடி தயார்.
இதனை காற்றுப் புகாத டப்பாவில் போட்டு பயன்படுத்தலாம்.
சூடான சாதத்துடன் பருப்பு பொடி, நெய் அல்லது நல்ல எண்ணெய் ஊற்றி பிசைந்து உண்ணவும். தொட்டுக் கொள்ள பொரித்த அப்பளம் சுவையாக இருக்கும்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் கறிவேப்பிலையை வறுத்துச் சேர்த்தும் பருப்பு பொடியைத் தயார் செய்யலாம்.
விருப்பமுள்ளவர்கள் வெள்ளை பூண்டின் தோலினை நீக்கிச் சேர்த்தும் பருப்பு பொடியைத் தயார் செய்யலாம்.
பருப்பொடிக்கு பூண்டு சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. பூண்டு சேர்த்தால் பருப்பு பொடி யின் ருசி இருக்காது.