பருப்பு வடை செய்வது எப்படி?

பருப்பு வடை தனியாகவோ, வேறு ஏதேனும் உணவுடன் சேர்த்தோ உண்ணக் கூடிய உணவாகும்.

இதனை எல்லோரும் விரும்பி உண்பர். இதனை வீட்டில் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

வடைப் பருப்பு – ½ கிலோ கிராம்

சின்ன வெங்காயம் – 150 கிராம்

கறிவேப்பிலை – 3 கொத்து

பெருஞ்சீரகம் (சோம்பு) – 20 கிராம்

வெள்ளைப் பூண்டு – 8 இதழ்கள் (மீடியம் சைஸ்)

பச்சை மிளகாய் – 5 எண்ணம்

கல் உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

பருப்பு வடை செய்முறை

முதலில் வடைப் பருப்பினை இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிச் சுத்தம் செய்து சதுரத் துண்டுகளாக நறுக்கவும்.

கறிவேப்பிலையை அலசி உருவி ஒன்றிரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.

பச்சை மிளகாயினை அலசி சதுரங்களாக நறுக்கவும்.

ஊற வைத்த‌ வடைப் பருப்பினை தண்ணீர் இல்லாமல் வடிதட்டில் போட்டு வடித்துக் கொள்ளவும்.

 

ஊற வைத்து வடித்த வடைப் பருப்பு
ஊற வைத்து வடித்த வடைப் பருப்பு

 

அதில் பாதியை மிக்ஸியில் போட்டு தண்ணீர் இல்லாமல் அரைத்துக் கொள்ளவும்.

கடைசியாக வெள்ளைப் பூண்டு, தேவையான கல் உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றவும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்த வடைப் பருப்பு மாவு, முழுதாக உள்ள வடைப் பருப்பு, நறுக்கிய கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், பெருஞ்சீரகம் சேர்த்து ஒரு சேரக் கிளறவும்.

 

பிசைந்த வடைமாவு
பிசைந்த வடைமாவு

 

சிறிதளவு மாவினை எடுத்து வடையாக தட்டும் போது அது உதிராமல் இருக்க வேண்டும்.

 

சரியான பதத்தில் வடைமாவு
சரியான பதத்தில் வடைமாவு

 

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் வடை மாவினை வடைகளாகத் தட்டிப் போடவும்.

 

வடைகள் வேகும் போது
வடைகள் வேகும் போது

 

ஒரு புறம் வடைகள் வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போடவும்.

இருபுறமும் வெந்ததும் வடைகளை எடுத்து எண்ணெயை வடித்து விடவும்.

சுவையான பருப்பு வடை தயார்.

 

சுவையான பருப்பு வடை
சுவையான பருப்பு வடை

 

சூடான பருப்பு வடையை தேங்காய் சட்னி, வெங்காய சாம்பார் சேர்த்து உண்ணலாம்.

குறிப்பு

விருப்பமுள்ளவர்கள் இஞ்சியை சேர்த்து பருப்பு வடையினைத் தயார் செய்யலாம்.

விருப்பமுள்ளவர்கள் மல்லி இலையைச் சேர்த்து பருப்பு வடையினைத் தயார் செய்யலாம்.

 ஜான்சிராணி வேலாயுதம்

 

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.