பரோட்டா சால்னா பரோட்டாவிற்கு அருமையான தொட்டுக்கறி ஆகும். இதனை சுவையாகவும், எளிமையாகவும் வீட்டிலேயே செய்யலாம்.
ஹோட்டலில் தரப்படும் சால்னா போல் நம்மால் செய்ய முடியுமா என்ற சந்தேகத்துடன் இருப்பவர்கள் இதனை முயற்சிக்கலாம்.
பரோட்டா செய்வது எப்படி? எனத் தெரிந்து கொள்ள, இங்கே சொடுக்கவும்.
தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (சிறியது)
தக்காளி – 1 எண்ணம் (நடுத்தரமானது)
உப்பு – தேவையான அளவு
மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
மல்லி இலை – 1 கொத்து
கறிவேப்பிலை – 2 கீற்று
மசாலா தயார் செய்ய
மசாலா தயார் செய்ய தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் – 10 எண்ணம்
தக்காளி – 1 எண்ணம் (பெரியது)
இஞ்சி – முக்கால் சுண்டு விரல் அளவு
வெள்ளைப் பூண்டு – 4 பற்கள் (பெரியது)
தேங்காய் துருவல் – ஒரு குழிக்கரண்டி அளவு
மல்லி இலை – ½ கொத்து
கறிவேப்பிலை – 2 கீற்று
பச்சை மிளகாய் – 1 எண்ணம் (பெரியது)
பெருஞ்சீரகம் – 1½ ஸ்பூன்
பட்டை – சுண்டு விரல் அளவு
கிராம்பு – 1 எண்ணம்
ஏலக்காய் – 1 எண்ணம்
பிரிஞ்சு இலை – ¼ எண்ணம்
நல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்
தாளிதம் செய்ய
நல்ல எண்ணெய் – 2 ஸ்பூன்
பெருஞ்சீரகம் – ¼ ஸ்பூன்
பட்டை – அரை சுண்டு விரல் அளவு
கிராம்பு – 1 எண்ணம்
ஏலக்காய் – 1 எண்ணம்
கடல்பாசி – சிறிதளவு
பிரிஞ்சு இலை – சிறிதளவு
பரோட்டா சால்னா செய்முறை
முதலில் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நேராக வெட்டிக் கொள்ளவும்.
தக்காளியை அலசி சிறு துண்டுகளாக்கவும்.
பச்சை மிளகாயை அலசி இரண்டு துண்டுகளாக்கவும்.
பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி நேராக வெட்டிக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டினை சுத்தம் செய்து விழுதாக்கிக் கொள்ளவும்.
மல்லி இலை, கறிவேப்பிலையை அலசி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
வாணலியில் மசாலா தயார் செய்ய தேவையான நல்ல எண்ணெய் ஊற்றி, அதில் பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சு இலை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர் அதனுடன் சின்ன வெங்காயத்தைச் சேர்த்து கண்ணாடிப் பதத்திற்கு வதக்கவும்.
அதனுடன் தக்காளி மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.
ஓரளவு வதங்கியதும் மல்லி இலை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பின்னர் அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து வதக்கவும்.
நன்கு வதக்கியதும் இஞ்சி-பூண்டு விழுதினைச் சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை வதக்கி, கலவையை ஆறவிட்டு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து, நல்ல எண்ணெய் ஊற்றி, பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சு இலை, கடல்பாசி சேர்த்து வதக்கவும்.
பின்னர் அதனுடன் பெரிய வெங்காயம், கறிவேப்பிலையைச் சேர்த்து வதக்கி கண்ணாடிப்பதம் வந்ததும், அதனுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
அதனுடன் அரைத்த மசாலாவைச் சேர்த்து ஒருசேரக் கிளறி, அதனுடன் தேவையான உப்பு, தண்ணீர், மிளகாய்த்தூள், மஞ்சள் பொடி சேர்க்கவும்.
கலவை கொதித்ததும், அடுப்பினை சிம்மிற்கும் சற்று கூடுதலாக வைத்து, தேவையான பதம் வந்ததும், அடுப்பினை அணைத்து விட்டு, மல்லி இலையைத் தூவவும்.
சுவையான பரோட்டா சால்னா தயார்.
இதனை பரோட்டா, தோசை, இட்லி, சப்பாத்தி எல்லாவற்றிற்கும் தொட்டுக் கொள்ளலாம்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் புதினா இலைகளை சேர்த்து வதக்கி, மசாலா தயார் செய்து, சால்னா தயார் செய்யலாம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!