உழவர் திருநாள் விடுமுறை முடிந்து, அன்றுதான் பள்ளி திறந்தது. முதல்வகுப்பே, அறிவியல் ஆசிரியர் வேதிவாசனின் வகுப்பு என்பதால், மாணவர்கள் ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் அமர்ந்திருந்தனர்.
அறிவியல் தத்துவங்களை எளிமையாக கற்பிக்கும் திறன் படைத்தவர், ஆசிரியர் வேதிவாசன்.
கவர்ச்சியான குரல்வளமும், மாணவர்கள் மீது அவர் கொண்டிருந்த தீரா அக்கறையும்தான் மாணவர்களின் ஆர்வத்திற்கு காரணம்.
காலந்தவறாமையை கண்டிப்புடன் கடைபிடிக்கும் வேதிவாசன், சரியாக வகுப்பு தொடங்குவதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்னதாகவே வகுப்பறைக்குள் நுழைந்தார்.
அனைத்து மாணவர்களும் எழுந்து நின்று ஆசிரியருக்கு காலை வணக்கம் தெரிவித்தனர். அவரும் மாணவர்களுக்கு வணக்கும் தெரிவித்தவுடன், வகுப்பினை நேரத்திற்கு தொடங்கினார்.
அன்று, நேரிடையாக பாடப்பகுதிக்குச் செல்லாமல், மாணவர்களின் விடுமுறைக்கால அனுபவங்களைக் கேட்டறிந்தார்.
மாணவன் தென்னரசு, தன் முறைக்காக காத்திருந்தான். அவன், எல்லாப் பாடத் தேர்வுகளிலும் முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைக்கும் மாணவன்.
ஒழுக்கமும் அவனிடத்தில் சேர்ந்திருந்ததினால் அனைத்து ஆசிரியர்களுக்கும் பிடித்த மாணவன். சகமாணவர்களுக்கும்தான்!
அப்போது, தென்னரசுவிடம், “உன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்” என்று ஆசிரியர் வேதிவாசன் கேட்டார்.
உடனே, “ஐயா! உழவுத்தொழிலின் இன்றியமையாமை மற்றும் உழவர்களின் பெருமைகளை விரிவாக தெரிந்து கொண்டேன். அத்தோடு உழவுத்தொழிலில் ஈடுபடுத்தப்படும் கால்நடைகளைப் பற்றியும் அறிந்து கொண்டேன்”, என்றான் தென்னரசு.
அவனுக்கு பாராட்டினை தெரிவித்தார், ஆசிரியர் வேதிவாசன்.
உடனே, “ஐயா எனக்கு ஒரு சந்தேகம்” என்றான் தென்னரசு.
அதனை மகிழ்வுடன் வரவேற்ற ஆசிரியர், “உனது சந்தேகத்தை கேள்”, என்றார்.
தென்னரசுவின் சந்தேகம்
“ஐயா, பொருட்களை வாங்குவதற்காக கடைத் தெருவிற்கு சென்றிருந்தேன். அங்கு பறக்கும் பலூன் இருப்பதைப் பார்த்தேன். அவை பல வண்ணங்களில் அழகாக இருந்தன. அதில்தான் எனக்கு சந்தேகம்”, என்றான் தென்னரசு.
“என்ன சந்தேகம்?” என்று கேட்டார் ஆசிரியர்.
“ஐயா, நாம் வாயினால் ஊதும் பலூனிலும் காற்றுதான் இருக்கிறது. அந்த கடைக்காரர் விற்ற பலூனிலும் காற்றைத்தான் அடைத்து விற்றார். ஆனால் அந்த பலூன் மட்டும் தானாக பறக்கிறது. நம் வாயினால் ஊதப்பட்ட பலூன் தானாக பறப்பதில்லையே?”என்றான் தென்னரசு.
தன் மாணவன் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனிப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைந்த வேதிவாசன் பறக்கும் பலூன் கேள்விக்கான பதிலைச் சொல்ல ஆரம்பித்தார்.
பறக்கும் பலூன் – காரணம் என்ன?
நம் வாயினால் ஊதும் பொழுது வெளி வருவது, கார்பன்-டை-ஆக்சைடு வாயு. காரணம், நாம் உட்கொள்ளும் உணவு, ஆக்சிஜன் மூலம் செரிக்கப்பட்டு, ஆற்றலாக மாற்றப்படுவதோடு, கார்பன்-டைஆக்சைடு வாயுவாகவும் வெளி வருகிறது.
நம்மால் ஊதப்படும் பலூனில் கார்பன்-டைஆக்சைடுதான் இருக்கும். இந்த வாயுவின் அடர்த்தி அதிகம் என்பதால், இந்த பலூன் பறப்பதில்லை.
ஆனால் அந்த கடைக்காரர் விற்ற பலூனில், ஹீலியம் வாயு அடைக்கப்பட்டிருக்கும். அதன் அடர்த்தி, வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜன், கார்பன்-டைஆக்சைடு உள்ளிட்ட வாயுக்களின் அடர்த்தியைவிட, மிகமிகக் குறைவு என்பதால்தான், அந்த பலூன் உயர பறக்கிறது.
என்ன புரிகிறதா?” என மாணவர்களை பார்த்து கேட்டார் ஆசிரியர்.
சிலரது தலை அசைவுடன், மாணவர்களின் முகத்தை கண்ட வேதிவாசனுக்கு புரிந்தது; `இன்னும் சற்று விளக்கம் தேவை` என்பது.
எனவே, மேலும் தொடர்ந்த ஆசிரியர், “நீரால் நிரப்பப்பட்ட ஒரு பிளாஸ்டிக் குவளையை (water can), ஒரு வாளி தண்ணீரில் போட்டால் என்னவாகும்?” என கேட்டார்.
“அந்த நீர் நிரம்பிய குவளை மூழ்கி வாளியின் அடிப்பகுதியை சென்றடையும்” என மாணவர்கள் பதிலளித்தனர்.
“சரி, காலியான பிளாஸ்டிக் குவளையை, ஒரு வாளி தண்ணீரில் போட்டால் என்னவாகும்?” என கேட்டார் வேதிவாசன்.
அதற்கு, “அந்த குவளை, வாளியில் இருக்கும் தண்ணீரில் மூழ்காது, தண்ணீரின் மேற்பரப்பிலேயே மிதக்கும்” என மாணவர்கள் பதிலளித்தனர்.
“சரியாக சொன்னீர்கள்! நீர் இல்லா பிளாஸ்டிக் குவளை உள்ளே காற்றுதான் இருக்கும், இதன் அடர்த்தி, வாளியில் இருக்கும் தண்ணீரின் அடர்த்தியை காட்டிலும் மிகவும் குறைவு.
அப்படியே, அதை நீரில் அமிழ்த்தினாலும், அந்த குவளை அமிழாமல் நீரின் மேற்பரப்பை வந்தடையும்.
இதற்கு காரணம், அடர்த்திமிகு தண்ணீர் மூலக்கூறுகள், லேசான காற்று அடங்கிய குவளையை மேல்நோக்கி உந்துவதே!. என்ன புரிகிறதா?” என ஆசிரியர் கேட்க, மாணவர்கள் பலத்த குரலில் “புரிகிறது” என்றனர்.
“இதே தத்துவத்தின் அடிப்படையில்தான், ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூனும், வளிமண்டலத்தில் இருக்கும் அடர்த்திமிகு காற்று மூலக்கூறுகளால் உந்தப்பட்டு உயர மேலே செல்கிறது” என்றார் ஆசிரியர் வேதிவாசன்.
ஆசிரியர் சொன்னவைகள் அனைத்தும் புரிந்தவனாய், “ஹீலியம் போன்று வேறு ஏதேனும் வாயுவை பலூனில் பயன்படுத்த முடியுமா? ஐயா” என தென்னரசு கேட்டான்.
“முடியும்! ஹைட்ரஜன் வாயுவை பலூனில் பயன்படுத்தலாம். ஆனால், ஹைட்ரஜன் வாயு எளிதில் தீப்பற்றி (வெப்பத்தால்) வெடிக்கும் பண்பு கொண்டது. எனவே, அதனை கையாளுவது சுலபமல்ல” என்று சொன்னார் வேதிவாசன்.
தான்சொன்ன விளக்கத்தை மாணவர்கள் புரிந்து கொண்டனர் என்பதை அவர்களது முகபாவனையில் இருந்தே உணர்ந்த, வேதிவாசன் அடுத்து பாடத்திற்கு சென்றார்.
சென்னை, அலைபேசி: 9941091461
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!