பறவைகளின் அலகுகள்

பறவைகளின் அலகுகள் பற்றி அறிவோம்

பறவைகளின் அலகுகள் அவற்றின் வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு உள்ளன. பறவைகளின் அலகுகள் பல வகை. அவற்றின் சிறப்புகளைத் தெரிந்து கொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

பறவைகளுக்கு பொதுவாக பற்கள் காணப்படுவதில்லை. அவைகள் தங்களின் அலகுகளாலே உணவினை உண்கின்றன. வெவ்வேறு வகையான பறவைகள் வெவ்வேறு வகையான அலகுகளைக் கொண்டுள்ளன.

பறவைகளின் அலகுகள் வடிவங்கள்

பறவைகளின் உணவுப் பழக்கத்தைப் பொறுத்து அவற்றின் அலகுகளின் வடிவமானது மாறுபடுகிறது. பறவைகளின் வெவ்வேறு அலகுகளைப் பற்றிந் தெரிந்து கொள்வோம்.

குறுகிய மற்றும் வளைந்த அலகு

பழங்களை உண்ணும் பறவைகள் இவ்வகையான அலகுகளைப் பெற்றுள்ளன.

 

குறுகிய மற்றும் வளைந்த அலகினை உடைய கிளி
குறுகிய மற்றும் வளைந்த அலகினை உடைய கிளி

 

குறுகிய மற்றும் வளைந்த அலகானது கடினமான பழங்கள், பருப்புக்கள், கொட்டைகள் ஆகியவற்றை உடைத்துத் திறக்க உதவுகிறது. கிளிகள் இவ்வகையான அலகினைப் பெற்றுள்ளன.

குறுகிய மற்றும் கடினமான அலகு

தானியங்கள் மற்றும் விதைகளை உணவுகளாகக் கொண்டுள்ள பறவைகள் இவ்வகை அலகினைக் கொண்டுள்ளன.

 

குறுகிய மற்றும் கடினமான அலகினை உடைய மயில்
குறுகிய மற்றும் கடினமான அலகினை உடைய மயில்

 

குறுகிய மற்றும் கடினமான அலகுகள் தானியங்கள் மற்றும் விதைகளை நசுக்க உதவுகின்றன. புறாக்கள், மயில்கள் மற்றும் சிட்டுக்குருவிகள் இவ்வகை அலகுகளைக் கொண்டுள்ளன.

நீண்ட கூரிய வளைந்த அலகு

கம்மிங் பறவை எனப்படும் ஓசினிச்சிட்டு, தேன்சிட்டு போன்றவை பூவில் உள்ள மகரந்தத்தை உணவாக உட்கொள்பவை.

 

நீண்ட கூரிய வளைந்த அலகினை உடைய ஓசினி சிட்டு
நீண்ட கூரிய வளைந்த அலகினை உடைய ஓசினி சிட்டு

 

 

தேன் சிட்டு
தேன் சிட்டு

 

இவைகள் பூக்களில் உள்ள மகரந்தங்களை உண்ணுவதற்கு ஏற்றவாறு நீண்ட கூரிய வளைந்த அலகினைக் கொண்டுள்ளன.

வலிமையான கூரிய கொக்கி அலகு

மாமிசத்தை உண்ணும் பறவைகளான கழுகு, பருந்து போன்றவை வலிமையான கூரிய கொக்கி வடிவ அலகினைக் கொண்டுள்ளன.

 

வலிமையான கூரிய கொக்கி அலகினைக் கொண்ட பருந்து
வலிமையான கூரிய கொக்கி அலகினைக் கொண்ட பருந்து

 

கழுகு
கழுகு

 

இப்பறவைகள் அவற்றின் இரைகளான எலிகள், தவளைகள், பாம்புகள் உள்ளிடவைகளின் மாமிசத்தை கிழித்து உண்ண இவ்வகையான அலகினைப் பயன்படுத்துகின்றன.

பரந்த மற்றும் தட்டையான அலகு

தண்ணீரில் வாழும் பறவைகளான வாத்துக்கள் பரந்த மற்றும் தட்டையான அலகினைப் பெற்றுள்ளன. இவற்றின் அலகின் இருபுறங்களிலும் துளைகள் உள்ளன.

 

பரந்த மற்றும் தட்டையான அலகினை உடைய வாத்து
பரந்த மற்றும் தட்டையான அலகினை உடைய வாத்து

 

தண்ணீர் பறவைகள் பூச்சிகள், புழுக்கள் மற்றும் நீர்வாழ் தாவரங்கள் கொண்ட மண் கலந்த கலங்கிய தண்ணீரினை உட்கொள்கின்றன.

அவ்வாறு உட்கொள்ளும்போது பூச்சிகள், புழுக்கள் மற்றும் நீர்வாழ் தாவரங்கள் உட்கொள்ளப்பட்டு மண் மற்றும் தண்ணீரானது துளைகளின் வழியாக வெளியேற்றப்படுகின்றன.

பரந்த நீண்ட கூரிய அலகு

சிலநீர் வாழ் பறவைகளான கொக்குகள் மற்றும் கூழைக்கடா போன்றவை பரந்த நீண்ட கூரிய அலகினைக் கொண்டுள்ளன.

 

பரந்த நீண்ட கூரிய அலகினை உடைய கூழைக்கடா
பரந்த நீண்ட கூரிய அலகினை உடைய கூழைக்கடா

 

இவை பரந்த நீண்ட கூரிய அலகுகளைப் பயன்படுத்தி நீரில் வாழும் மீன்கள், தவளைகள் மற்றும் நண்டுகளை உணவாக உட்கொள்கின்றன.

வலுவான உளி வடிவ அலகு

மரங்கொத்தி வலுவான உளி வடிவ அலகினைக் கொண்டுள்ளது.

 

வலுவான உளி வடிவ அலகினை உடைய மரங்கொத்தி
வலுவான உளி வடிவ அலகினை உடைய மரங்கொத்தி

 

இவ்வலகினைக் கொண்டு மரங்கொத்தி மரத்தண்டுகளில் துளையிட்டு உள்ளிருக்கும் பூச்சி, புழுக்களை வெளியே இழுத்து உணவாக உட்கொள்கிறது.

பறவைகளின் அலகுகள் பல வகை. இயற்கையின் படைப்பு அருமை.

வ.முனீஸ்வரன்

 

தமிழ்நாட்டை தாயகமாகக் கொண்ட பறவைகள்

இந்திய மாநில பறவைகள் பற்றித் தெரியுமா?

ஆப்பிரிக்கா சவானாவின் பிரபலமான பறவைகள்


Comments

“பறவைகளின் அலகுகள் பற்றி அறிவோம்” மீது ஒரு மறுமொழி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.