பறவைகளின் பாதங்கள் மற்றும் நகங்கள் அவற்றின் வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு உள்ளன. அவற்றின் சிறப்புகளைத் தெரிந்து கொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.
பறவைகள் தங்களின் பாதங்கள் மற்றும் நகங்களை, இரையைப் பிடிக்கவும், தங்களைப் பாதுகாக்கவும் மற்றும் மரங்களின் கிளைகளில் அமரவும் பயன்படுத்துகின்றன.
அவைகள் தங்களின் பாதங்களை, மேலே ஏறவும், நடக்கவும் மற்றும் தாவவும் பயன்படுத்துகின்றன. பறவைகள் இரண்டு கால்களையும், நான்கு கால் விரல்களையும் கொண்டுள்ளன.
வெவ்வேறு வகையான பறவைகள் வெவ்வேறு வகையான கால்களைக் கொண்டுள்ளன.
மாமிசம் உண்ணும் பறவைகள்
கழுகுகள் மற்றும் பருந்துகள் தவளைகள், எலிகள் உள்ளிட்டவைகளை பிடித்து இரையாக உட்கொள்ளும் வழக்கத்தினைக் கொண்டுள்ளன.

அவைகள் தங்களின் இரைகளை கூரிய வளைந்த நகங்களால் பிடித்து உண்ணுகின்றன. இப்பறவைகளில் மூன்று விரல்கள் முன்னாலும் ஒரு விரல் பின்னாலும் அமைந்துள்ளன.
பிடித்து அமரும் பறவைகள்
காகம், புறாக்கள் மற்றும் சிட்டுக்குருவிகள் போன்ற பறவைகளில் மூன்று விரல்கள் முன்னாலும், ஒரு விரல் பின்னாலும் அமைந்துள்ளன.

இவைகள் தங்கள் விரல்களால் மரக்கிளைகளையும், மின்கம்பிகளையும் இறுகப் பிடித்து அமருகின்றன. இதனையே நாம் பிடித்து அமருபவை என்கிறோம்.
இவைகள் பிடித்து அமர்ந்தபடியே உறங்குகின்றன. இவைகள் பின்னால் உள்ள விரலை நம்முடைய கட்டை விரலைப் போலவும் முன்னால் உள்ள விரல்களை நம்முடைய ஏனைய விரல்களைப் போலவும் பயன்படுத்துகின்றன.
கீறும் பறவைகள்
கோழிகள் மற்றும் சேவல்கள் போன்றவை நிலத்தினைக் கீறி புழுக்கள், பூச்சிகள் மற்றும் தானியங்களை உண்கின்றன.

இவைகள் உறுதியான கால்களையும் மற்றும் கூர்மையான மற்றும் கடினமான நகங்களையும் கொண்டுள்ளன. இவை நிலத்தினைக் கீறி உணவினை உண்ண உதவுகின்றன.
நீந்தும் பறவைகள்
வாத்துகள் உள்ளிட்ட நீந்தும் பறவைகள வலைப்பின்னல் பாதத்தினைக் கொண்டுள்ளன. அவைகள் முன்புறத்தில் மூன்று விரல்களையும், பின்புறத்தில் ஒரு விரலையும் கொண்டுள்ளன.

முன்புறத்தில் உள்ள மூன்று விரல்களும் மடிக்கக்கூடிய சருமத்தால் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் இவற்றின் பாதங்கள் பார்ப்பதற்கு தட்டையாக இருக்கும். இப்பாதங்கள் துடுப்புகள் போல் செயல்பட்டு அவை நீந்துவதற்கு உதவுகின்றன.
வாடி பறவைகள்
கொக்குகள் உள்ளிட்ட பறவைகள் தண்ணீரில் நடந்து சென்று உணவினைத் தேடுகின்றன. இவ்வாறு தண்ணீரில் நடந்து சென்று உணவினைத் தேடுபவை வாடி பறவைகள் என்று அழைக்கப்படுகின்றன.

இவ்வகைப் பறவைகளின் கால்கள் நீண்டும் மெலிந்தும் விரல்கள் அகண்டும் காணப்படுகின்றன. இவ்வகைக் கால்கள் நீரில் அவற்றின் உணவினைத் தேட உதவுகின்றன.

நகங்கள் பறவைகள் நீர்நிலைகளின் மண்ணில் புதையுண்டு போகாமல் அவற்றைப் பாதுகாக்கின்றன.
ஏறும் பறவைகள்
மரங்கொத்தி, கிளி போன்ற பறவைகள் மரத்தில் ஏறும் தன்மையினை உடையவை.

அவற்றில் இரண்டு விரல்கள் மேற்புறமும், இரண்டு விரல்கள் கீழ்புறமும் அமைந்து உள்ளன. இவ்விரல்கள் மரத்தினை பிடித்து ஏறவும் மரத்தினை பிடித்துக் கொள்ளவும் உதவுகின்றன.
பறவைகளின் பாதங்கள் மற்றும் நகங்கள் பல வகைகளில் அமைந்து அவற்றின் வாழ்க்கைக்கு உதவுகின்றன. இயற்கையின் படைப்பு அருமை.
https://www.inidhu.com/%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf/
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!