தலைமையாசிரியர் உடனான சந்திப்பு முடிந்து வெளியே வந்தார் வேதிவாசன். இன்னும் பதினைந்து நிமிடங்களில் அவர் ஒன்பதாம் வகுப்பிற்கு செல்ல வேண்டும்.
அவரது அலுவலக அறைக்கு சென்று வரவேண்டும் என்றால் நேரம் எடுக்கும். அத்தோடு ஒன்பதாம் வகுப்பறையோ அக்கட்டிடத்தின் இரண்டாவது மாடியிலேயே இருந்தது.
ஆக, நேராக ஒன்பதாம் வகுப்பறையை நோக்கி நடக்க தொடங்கினார் வேதிவாசன். வகுப்பறையை நெருங்கும் போதே சமூகஅறிவியல் ஆசிரியர், சமூகதாசனின் குரல் கணீரென ஒலித்துக் கொண்டிருந்தது.
தன் உடல்பாவனை மற்றும் இனிமையான குரல் வளத்தால் வரலாற்றை தெளிவுற போதிக்கும் சமூகதாசனின் கற்பிக்கும் உத்தியில் மயங்காதவர்கள் எவரும் இல்லை. அறிவியல் ஆசிரியர் வேதிவாசனும்தான்.
இந்நிலையில், வரலாறு வகுப்பு முடிய இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தது. எனவே, வகுப்பின் வெளியே நின்ற வேதிவாசன் தன் காதுகளால் சமூகதாசனின் சொற்களையும், கண்களால் வானத்தையும் பார்த்து இரசித்து கொண்டிருந்தார்.
அப்போது, சீனப்பயணி யுவான் சுவாங் (சுவான் சாங்; Xuan zang) மற்றும் போர்ச்சுகீசிய நாடு காண்பயணி வாஸ்கோடகாமா (Vasco da Gama) ஆகியோரது இந்திய வருகை பற்றிய வரலாற்று செய்திகளை தொகுத்து சொல்லிக் கொண்டிருந்தார் சமூகதாசன்.
மேலும், அக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நெடும் பயணங்கள் எல்லாம் தரை மற்றும் கடல் வழியாக அமைந்திருந்ததையும் சுட்டிக்காட்டி சமூகதாசன் கற்பித்துக் கொண்டிருந்ததை, வேதிவாசனும் கேட்டுக் கொண்டிருந்தார்.
அதேசமயத்தில் வேதிவாசனின் கண்களோ ஆகாயத்தில் அணி வகுத்து பறந்து சென்ற பறவை கூட்டங்களையும் கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தது.
அப்போது ‘கிர்ர்ர்ர்….’ எனும் மணிச்சத்தம் ஒலிக்க, அந்த வகுப்பு முடிந்ததை அனைவரும் உணர்ந்தனர். வகுப்பிலிருந்து சமூகதாசன் வெளியேவர, வேதிவாசன் வகுப்பிற்குள்ளே நுழைந்தார். இருவரும் தங்களது இனிய புன்னகையை பரிமாறிக் கொண்டனர்.
வகுப்பிற்குள் நுழைந்ததும், பாடத்தை துவங்கி நடத்திக் கொண்டிருந்தார் வேதிவாசன். அன்றைய பாடம், உயிர் வேதிச்சேர்மமான புரதங்கள் பற்றியதாக இருந்தது.
சுற்றுலா
அரைமணி நேரம் சென்றிருக்கும். வாசலில் ஒரு நோட்டு புத்தகத்துடன் வந்து நின்றார் அலுவலக உதவியாளர். வேதிவாசனோ உதவியாளர் வந்ததை உணராமல் கற்பித்தலில் மூழ்கியிருந்தார்.
வகுப்பறையின் வாசல் அருகே அமர்ந்திருந்த சிலமாணவர்கள் மட்டும் உதவியாளர் நின்று கொண்டிருப்பதை பார்த்துவிட்டனர். ஆனால் அதை ஆசிரியரிடம் தெரிவிக்கும் துணிவு அவர்களிடம் இல்லாமல் போனது.
உதவியாளரும், வேதிவாசன் ஆழ்ந்து கற்பித்து கொண்டிருப்பதை இடைமறித்து தகவலை சொல்லவும் சற்றே தயங்கினார். இப்படியாக சிலநிமிடங்கள் நகர்ந்தது.
அப்பொழுது கரும்பலகையில் எழுதியிருந்தவற்றை அழிப்பதற்காக திருப்பும் போது, வாசற் கதவருகில் நின்றிருந்த உதவியாளரை கண்டு கொண்டார் வேதிவாசன்.
உடனே “உள்ள வாங்க”, என அழைக்க, உதவியாளரும் உள்ளே வந்தார். அவர் கொண்டு வந்திருந்த நோட்டு புத்தகத்தை வேதிவாசனிடம் கொடுத்தார். அதை வாங்கி அவர் படித்துக் கொண்டிருக்க, வகுப்பறையில் மெல்லிய சலசலப்பு தோன்றியது.
பொதுவாக உதவியாளர் இது போன்று நோட்டு புத்தகத்தை கொண்டு வந்து ஆசிரியரிடம் கையொப்பம் வாங்கிச் சென்றால், ஏதாவது சிறப்பு விடுமுறையாக இருக்கலாம்.
அல்லது ஏதேனும் பள்ளி நிகழ்ச்சியாக இருக்கலாம். அல்லது அந்த வார சனிக்கிழமை அரைநாள் பள்ளிக்கூடமாக இருக்கலாம்.
சனிக்கிழமை பள்ளிகூடம் என்றாலும், அன்று சீருடை அணிந்து வரவேண்டி இருக்காது. வண்ண உடையிலேயே வரலாம். அதுவும் ஒருவகையில் மகிழ்ச்சிதான்!
மேற்குறிப்பிட்டவற்றில் எது ஒன்றாக இருக்கும்? என்ற குழப்பத்தில் மாணவர்கள் தங்களுக்குள் கருத்துகளை பரிமாறிய காரணத்தால்தான் அந்த சலசலப்பு தோன்றியது.
சத்தம் சிறிது அதிகரிக்கவே, வேதிவாசன் தலைநிமிர்ந்து மாணவர்களை ஒருமுறை சுற்றுமுற்றும் பார்த்தார். அடுத்த வினாடியே மீண்டும் வகுப்பறையை அமைதி கவ்விக் கொண்டது.
பின்னர் நோட்டு புத்தகத்தில் கையொப்பம் இட்டுக்கொடுக்க, அதை வாங்கிகொண்டு அங்கிருந்து புறப்பட்டார் உதவியாளர். மாணவர்களோ ஆவலுடன் வேதிவாசனையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
மாணவர்களின் மனநிலையை உணர்ந்த வேதிவாசன், அந்த செய்தியை சொன்னார். “வர வெள்ளிக்கிழமை நாம வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு போறோம்.
எல்லோரும் காலை ஏழு மணிக்கெல்லாம் பள்ளிக்கு வந்திடுங்க. எட்டுமணிக்குள் பள்ளியிலிருந்து பேருந்து புறப்படும்” என வேதிவாசன்கூற, மாணவர்களிடையே ஒருவித மகிழ்ச்சியும், உற்சாகமும் பொங்கிற்று.
உடனே சில மாணவர்கள், அச்சரணாலயத்தை குறித்தும், வெளிநாட்டு பறவைகள் குறித்தும் கேள்வி எழுப்பினர். சிலர், அன்றைய நிகழ்ச்சி அட்டவணை மற்றும் சுற்றுலா கட்டுரை குறித்தும் கேள்வி எழுப்பினர்.
மாணவர்களின் எல்லா கேள்விகளுக்கும் விடையளித்தார் வேதிவாசன்.
பறவைகளின் வெளிநாட்டு பயணம்
அப்பொழுது, மாணவன் இராமு எழுந்து நின்று “ஐயா, அக்காலத்துல யுவான் சுவாங், வாஸ்கோடகாமா போன்றவர்கள் நம்ம நாட்டுக்கு தரை மற்றும் கடல் வழியாகவே வந்ததாக, வரலாற்று ஆசிரியர் இன்னிக்கு சொல்லி தந்தாரு.
மனுசங்க பல உத்திகளை பயன்படுத்தி திசையை கண்டுபிடிச்சு வெளிநாடுகளுக்கு போறாங்க. ஆனா, ஆகாயமார்க்கமா வெளிநாட்டுல இருந்து பறவைகள் கூட்டம் இங்க வருதே! அதுக்கெல்லாம் எப்படி வழி தெரியுது?” எனக் கேட்டான்.
பறவைகளின் வெளிநாட்டு பயணம் பற்றி நல்ல வினா என மகிழ்ந்த வேதிவாசன், “புவிக்கு காந்தபுலம் இருக்கா?” என மாணவர்களைப் பார்த்துக் கேட்டார். “இருக்கு ஐயா” என்றனர் மாணவர்கள்.
“சரி, ஒரு காந்த ஊசியை கட்டி தொங்க தொங்கவிட்டா அது பூமியோட எந்த திசையைக் காட்டும்?” என மாணவர்களைப் பார்த்துக் கேட்டார். அதற்கு மாணவர்கள் “வடக்கு தெற்கு திசையைக் காண்பிக்கும்” என்று ஒருமித்த குரலில் கூறினர்.
“சரியா சொன்னீங்க. நெடுந்தூரப் பயணத்தை மேற்கொள்ளும் பறவைகளின் மூளை அல்லது கண்களில் ஒரு சிறப்பு வேதிப்பொருள் இருக்கு. அது, காந்த ஊசியைப் போல செயல்பட்டு, பறவைகள் செல்ல வேண்டிய திசையை சரியாக் காட்டுது.
குறிப்பா சொல்லனும்னா, சீபரா ஃபின்செஸ் (Zebra finches) எனும் பறவையின் கண்ணுல ‘Cry4’ எனும் புரதம் இருக்கு. கிரிப்டோக்ரோம் (cryptochromes) புரதவகையை சேர்ந்த, Cry4 புரதம் தான் காந்த புலத்தை உணரும் வேதிப்பொருளாக செயல்பட்டு பறவைகள் செல்ல வேண்டிய திசையைக் காட்டுது” என வேதிவாசன் கூறினார்.
மாணவர்கள் அமைதியாக கவனித்துக் கொண்டிருக்க வேதிவாசன், ஆனா இந்த ‘Cry4’ புரதம் தொலைதூர பயணம் மேற்கொள்ளாத பறவையோட கண்களிலும் இருக்கிறதாம். அதனால ‘Cry4’ புரதத்த பற்றிய ஆய்வுகள் இன்னும் தேவைப்படுகிறது.”
அப்போது மாணவன் கந்தன் எழுந்து “ஐயா, இந்த பறவைகள் ஏன் நெடுந்தொலைவு பயணத்தை மேற்கொள்ளுது?” என வினவினான்.
“காலநிலைதான் காரணம். நாம் கோடைகாலத்தில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்ச்சியான இடங்களுக்கு போவது மாதிரி தான்.
பனிகாலத்துல வாழ்வதற்கு சாதகமான இடத்தை நோக்கி பறவைகள் பயணம் செய்யுது. தெரியுமா?



கனடா, பர்மா, ஆஸ்திரேலியா போன்ற பல்வேறு நாடுகளில் இருந்தும், நீர்க்காகம், நாரை, நீர்க்கோழி, கூழைக்கடா போன்ற பறவைகள் நம்ம நாட்டுக்கு வருது.” என வேதிவாசன் பதில் கூறினார்.
பறவைகளின் வெளிநாட்டு பயணம் பற்றி மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருக்க, கிர்ர்ர்ர்… என மணியோசை ஒலித்தது. அடுத்து பத்தாம் வகுப்பிற்குச் செல்ல வேண்டியிருந்ததால் வேதிவாசன் அங்கிருந்து பறந்தார்.
முனைவர்.ஆர்.சுரேஷ்
சென்னை.
அலைபேசி: 9941091461