பறவைகள் என்றவுடனே நம் எல்லோரின் நினைவிற்கு வருவது பறத்தல் என்பதே. இயற்கை பறவைகளுக்குக் கொடுத்த அற்புத பரிசு பறத்தல் ஆகும்.
உலகில் உள்ள சுமார் 9,000 வகையான பறவைகளில் பெரும்பாலானவை பறக்கும் தன்மையைக் கொண்டுள்ளன.
நெருப்புக்கோழி, பென்குயின், ஈமு, கிவி உள்ளிட்ட சிலப்பறவைகள் மட்டுமே பறக்காத பறவைகள் ஆகும்.
இவ்வாறு பறவைகள் பறப்பதற்கு இயற்கை சில தனிப்பட்ட தகவமைப்புகளைக் கொடுத்துள்ளது. அவற்றை பறவைகளும் அவற்றின் தகவமைப்பும் என்ற இக்கட்டுரையில் பார்ப்போம்.
பறவைகளும் அவற்றின் தகவமைப்பும்
பறவைகள் பறக்க உதவுபவை
பறவைகள் பறப்பதற்கு அவற்றின் இறக்கைகளும், அவற்றின் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட உடலமைப்பும் உதவுகின்றன.
பறவையின் உடலானது படகு போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
பறவையின் உடலானது மெல்லிய தட்டுக்கள், வெற்று எலும்புகள் மற்றும் உறுதியான தசைகள் ஆகியவற்றால் ஆனது.
மெல்லிய தட்டுக்கள் மற்றும் வெற்று எலும்புகள் பறவைகளின் குறைவான முயற்சியால் நீண்ட நேரம் பறக்க உதவுகின்றன.
உறுதியான தசைகள் பறவைகள் தங்களின் சிறகுகளை மேல்நோக்கி, கீழ்நோக்கி அல்லது முன்னோக்கி, பின்னோக்கி நகர்த்த உதவுகின்றன.
ஆக, பறவைகள் பறக்க அவற்றின் வெற்று எலும்புகள், இறக்கைகள், உறுதியான தசைகள் மற்றும் சிறகுகள் உதவுகின்றன.
பறவைகள் பறக்கும்போது அதனுடைய இறகுகளை மேல்நோக்கியும், கீழ்நோக்கியும் இழுக்க வேண்டும்.
பறவையானது முதலில் வானத்தில் பறக்க ஆரம்பிக்கும்போது அதனுடைய இறகுகளை மேல்நோக்கியும், பின்நோக்கியும் நகர்த்தும். இந்நிகழ்வு மேலெழும்புதல் (up stock) என்று அழைக்கப்படுகிறது.
பறவையானது வானத்திலிருந்து தரையை நோக்கி கீழிறங்கும்போது அதனுடைய இறகுகளை கீழ்நோக்கியும், முன்னோக்கியும் நகர்த்தும். இந்நிகழ்வு கீழிறங்குதல் (down stock) என்று அழைக்கப்படுகிறது.
பறவைகளின் இறகினாலான வாலானது பறக்கும்போது அதனுடைய திசையை மாற்ற உதவுகிறது.
பறவைகளின் இறகுகள்
இறகுகள் என்பவை பறவைகளின் உடலில் முக்கியமானவை ஆகும். வெவ்வேறு வகையான பறவைகள் வெவ்வேறு வகையான இறகுகளைக் கொண்டுள்ளன.
இறகுகள் பறவைகள் பறப்பதற்கு உதவுவதோடு அவற்றின் உடல் வெப்பத்தை பாதுகாக்கவும், அவைகளுக்குக்கான தனிப்பட்ட வடிவத்தை கொடுக்கவும் செய்கின்றன.
பறவைகளின் உடலானது மூன்று வகை இறகுகளால் மூடப்பட்டுள்ளது. அவை
பறக்க உதவும் இறகுகள்,
கீழ் உள்ள இறகுகள்,
உடல் இறகுகள் ஆகியவை ஆகும்.
பறக்க உதவும் இறகுகள்
இவ்வகை இறகுகள் நீளமானவை மற்றும் தட்டையானவை ஆகும். இவை பறவைகளின் வாலிலும், இறக்கைகளிலும் காணப்படுகின்றன. இவை பறவைகள் மேலெழும்பவும், பறத்தலின்போது தங்களை நடுநிலைப்படுத்தவும் உதவுகின்றன.
கீழ் உள்ள இறகுகள்
இவை குட்டையாகவும் மென்மையாகவும் இருக்கின்றன. பறவைகளின் உடலானது இவ்வகை இறகுகளால் முழுவதும் போர்த்தப்பட்டுள்ளது.
இவைகள் பறவைகளின் சருமத்திற்கு நெருக்கமாக அமைந்து பறவைகளின் உடலின் வெப்பத்தைப் பாதுகாக்கின்றன. பறவைகள் குஞ்சுகளாக உள்ள போது இவ்வகை இறகுகளே அதிகம் காணப்படுகின்றன.
உடல் இறகுகள்
இவ்வகை இறகுகள் கீழ் உள்ள இறகுகளுக்கு மேலே அமைந்துள்ளன. இவை பறவைகளின் உடலினை குளிர் மற்றும் காற்றிலிருந்து பாதுகாக்கின்றன. இவைகளே பறவைகளுக்காக வடிவத்தினைக் கொடுக்கின்றன.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!