பறவைகள் கேட்ட பழமொழிகள்

பறவைகள் கேட்ட பழமொழிகள் என்ற தலைப்பில் குழந்தைகளுக்கு பழமொழிகள் பலவற்றை கதைகள் மூலம் விளக்கப்போகிறேன்.

அந்த வனத்தின் அழகும் செழுமையும் ஆண்டு முழுவதும் நன்றாகவே இருக்கும். மழைக்காலங்களில் பெய்யும் கனமழையின் போதும் மழைநீர் ஆற்றில் வெள்ளமென நிமிடத்தில் ஓடிவிடும்.

உயரமான மலைப்பகுதியில் அமைந்த அந்த அன்பு வனத்தில் உள்ள விலங்குகளும் பறவைகளும் “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்று எங்கோ மனிதர்கள் கூறியதைக்கேட்டு வந்த வயதான காகம் கருங்காலன் அங்கிருந்த அனைவரையும் கூட்டமாக அழைத்து தான் கேட்டு வந்த மனிதர் பேசிய இந்த வார்த்தைகளை விளக்கமாக கூறியதன் விளைவாகத்தான் தற்போது அந்த அழகு வனம் அன்பு வனமாக மாறியுள்ளது.

இதற்கெல்லாம் காரணமான காக்கை கருங்காலனுக்கே மிகமிக அதிக வயதாகிவிட்டதால் முன்பு போல நாட்டுப்பக்கம் செல்வதில்லை.

தனது இளமை காலத்தில் மனித வாழ்விடங்களில் தங்கி, அவர்களிடமிருந்து தான் கற்றுக் கொண்ட நல்ல கருத்துக்களை அங்குள்ளவர்களுக்கு அலுப்பில்லாமல் சொல்லிக் கொண்டேயிருப்பது ஒன்றைத் தான் அதனுடைய வேலையாக கொண்டுள்ளது.

அன்பு வனத்தின் தலைவனான சிங்கம் செவத்தையனும் இப்பொழுதெல்லாம் பிற உயிர்களை அடித்து உண்பதை விட்டுவிட்டு அனைவருடன் அன்புடன் பழகலானது.

இதுபோலவே அனைவரும் தமது இயல்பான குணத்தைவிட்டு அன்பு வாழ்வையே மேற்கொண்டனர்.

ஆனாலும் அந்த வனத்திலுள்ள சின்னஞ்சிறிய பறவைகளும் குட்டிகுட்டி விலங்குகளும் தத்தமது இயல்பான குணங்களுடன் அடிக்கடி ஒருவருக்கொருவர் சண்டையிடுவதை வழக்கமாக்கி கொண்டிருந்தனர்.

இதனைக் கண்டு வருத்தம் கொண்ட தலைவனான செவத்தையன் சிங்கத்திற்கு ஆலோசகரான நரி நல்லான் இதற்கான ஒரு தீர்வினை சொன்னதும் செவத்தையன் உள்ளம் மகிழ்ந்து நரியை பாராட்டியது.

“நரியாரே நீர் சொன்னதை இதோ இப்போதே அனைவருக்கும் தெரிவித்து அடுத்த நடவடிக்கையில் இறங்கிவிட வேண்டியதுதான். உடனே காட்டினில் அறிவிப்பினை அறிவிக்கச் செய்து இன்று மாலை அந்திசாயும் நேரம் வட்டம் பாறையின் அருகே அன்பு வனத்தில் வாழும் அனைவரும் கூட ஏற்பாடு செய்யுங்கள்”, என்று கூறியது.

தலைவனின் அறிவிப்பு  காடு முழுவதும் குரங்கு குப்பன் மூலமாக வெளியானது. அன்று மாலை வேளை மஞ்சள் வெயில் மலையடிவாரம் முழுவதும் தங்கமாக மாற்றிக் காட்டிக் கொண்டிருந்தது.

கீழ்திசையில் நிலவு தன் முகத்தை மெல்ல காட்டியபடி எழுந்து வந்து கொண்டிருந்தது. அந்த வட்டப்பாறையினை சுற்றி காட்டிலுள்ள விலங்குகள் அனைவரும் தத்தமது குடும்பத்துடன் அமர்ந்தபடி இருக்க, சுற்றியிருந்த மரக்கிளைகளில் பறவைக்கூட்டமும் அமர்ந்திருந்தன.

வட்டப்பாறையின் மேலேறி நரி நல்லான் பேச ஆரம்பித்தது. “அன்பு வனத்தின் ஆன்றோர்களே, இதோ நம் தலைவர் உங்களிடம் ஒரு கருத்தினை கூறி உங்களது அனைவரின் ஆலோசனையின்படி நமது வனத்தின் எதிர்கால நலத்திற்காக சில செயல்களை செய்ய எண்ணம் கொண்டுள்ளார்.

எனவே அனைவரும் அமைதியாக அவரது கருத்தினை கேட்டு பின் அவரவர் தனிப்பட ஆலோசனைகளை வெளிப்படையாக கூற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

உங்களின் ஆலோசனைகளுக்குப்பின் சரியான முடிவினை நம் தலைவர் கூறுவார்” என்று கூறிவிட்டு அன்பு வனத்தின் தலைவனான செவத்தையன் சிங்கத்தை பேச அழைத்தது.

செவத்தையன் சிங்கமும் கம்பீரமாக அந்த வட்டப்பாறையின் மேலேறி பேசலானது. “அன்பு வனத்தின் அன்புக்குரியவர்களே ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்று நமது கிழவன் கருங்காலன் காகம் சொல்லிய நாளிலிருந்து நாம் அனைவரும் அன்பு வனத்தினை அழகுவனமாக மாற்றி, காப்பாற்றிக் கொண்டு வந்து கொண்டிருக்கின்றோம்.

ஆனால் நமது குழந்தைகள் இவை எதுவும் அறியாமல் நமது இயல்பான அடிப்படை குணங்கள் மேலேறிட அடிக்கடி சண்டையிட்டு வருவதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே,

“ஆமா ஆமா தலைவர் சொன்னது சரிதான்”,

“தலைவரே சின்னஞ்சிறுசுக அப்படித்தான் இருக்கும் வளரவளர சரியாகிவிடும்”,

“இதெல்லாம் ஒரு பிரச்சனையா? இதுக்குத்தான் எல்லாரையும் கூப்பிட்டாராக்கும்” என ஆளாளுக்கு பேசலனார்கள்.

அங்கிருந்த அனைவரையும் சிங்கம் செவத்தையன் “நண்பர்களே சற்று அமைதியாக நான் கூறுவதை முழுவதுமாக கேட்டு பின் உங்களது கருத்துக்களை ஒவ்வொருவராக கூறுங்கள்”, என்று சொல்லி அமைதிபடுத்திவிட்டு தொடர்ந்து பேசலானது.

“நண்பர்களே நமது குழந்தைகளுக்கு இந்த இளம் வயதிலேயே தக்க அறிவினை புகட்டினால் அவர்களும் ஒற்றுமையாக வாழத் தொடங்கிவிடுவார்கள்.

அதற்காக மனிதர்கள் தமது குழந்தைகளை பள்ளிக்கூடம் என்ற ஓரிடத்தில் கூட்டி அங்கு ஒருவரால் நல்லவற்றை கற்றுக் கொடுத்து வளர்ப்பதைப் போல நமது குழந்தைகளுக்கு இங்கே பாடம் சொல்லிக் கொடுக்கலாம்”, என நினைக்கிறேன் என்று கூறி முடித்தது.

“ஆஹா நல்ல காரியம் உடனே செய்யுங்கள்” என அனைவரும் ஒரே கருத்தினை கூறவும் மீண்டும் தலைவனான செவத்தையன் சிங்கம் தொடர்ந்து “ஆம் நண்பர்களே ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? என்பது மனிதர்கள் தங்களது குழந்தைகளின் நற்பண்புகள் குறித்து கூறும் பழமொழியாகும்.

அதற்கேற்ப நாமும் நம் குழந்தைகள் நல்லவற்றை கற்றுக் கொள்ள பள்ளிக்கூடம் நடத்தலாம்.  அந்தப் பள்ளிக்கூடத்தில் நமது குழந்தைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக் கொடுக்க காகம் கருங்காலனே தகுதியானவர் என நான் நினைக்கிறேன்”, என்றும் கூறியது.

“ரெம்ப சரி, ரெம்ப சரி” என அனைவரும் கூறினர்.

“தினமும் அன்பு வனத்தின் குஞ்சுகளும் குட்டிகளும் மாலை வேளையில் கூட வேண்டும்.

தாத்தா கருங்காலன் காகம் காட்டும்வழியில் பாடம் படிக்க வேண்டும்”,  என்று தலைவனான செவத்தையன் தனது அறிவிப்பினை அப்போதே கூறி கூட்டத்தை நிறைவு செய்தது.

காகம் கருங்காலன் எழுந்தது “நமது தலைவரின் எண்ணப்படியே நமது அன்பு வனத்தின் வருங்காலத்தை அறிவும் ஆற்றலும் கொண்டதாக மாற்ற என்னால் முடிந்ததை மனமுவந்து செய்து தருகிறேன்.

குழந்தைகள் அனைவரும் நாளை மாலை இதே இடத்தில் கூட வேண்டும்; இப்போது சென்று வாருங்கள்” என்று கூறியபின்பு கூட்டம் கலைந்து சென்றது.

மறுநாள் மாலை வேளையில் அன்பு வனத்தின் பிஞ்சுகளான குட்டிகளும் குஞ்சுகளும் வெகு ஆர்வத்துடன் அங்கே கூடின.

“என்னதான் நடக்கிறது” என வேடிக்கை பார்க்கவென சில பெரியவர்களும் சற்று தள்ளி நின்று கொண்டிருந்தனர்.

காகம் கருங்காலன் எழுந்து பேசலானது.  “அன்பு வனத்தின் அருமை குழந்தைகளே நீங்கள் குட்டியாகவோ குஞ்சாகவே இருக்கலாம்! ஆனால் கண்டிப்பாக புத்திசாலியாக இருக்க வேண்டும் என்பதற்காக நமது தலைவர் இப்படியொரு ஏற்பாட்டினை செய்துள்ளார்.

நான் சொல்வதை கவனமாக கேளுங்கள் தினசரி மாலை வேளையில் அனைவரும் இங்கே தவறாது கூட வேண்டும்.

அதற்கு முன் பகல் பொழுதினில் அருகிலுள்ள நகர் பகுதிக்கு சென்று அங்கு வாழும் மனிதர்களின் வாழ்க்கை முறையை கவனியுங்கள்.

மனிதர்கள் அவ்வப்போது இயல்பாகவே பழமொழிகள் என்ற சிலவற்றை பேசுவது வழக்கம். அதனை கவனித்து இங்கு வந்து குட்டி விலங்குகள் மற்றும் பறவைகள்  கேட்ட பழமொழிகள் பற்றிக் கூற வேண்டும்.

அதிலுள்ள நல்ல கருத்துக்கள் குறித்து நான் உங்களுக்கு விளக்கமளிப்பேன்.  எனவே நாளை பகற்பொழுதில் நகர்ப்பகுதிக்கு சென்று மாலையில் தவறாது இங்கு வாருங்கள்” என்று கூறியது.

“சரி தாத்தா.  இப்ப நீங்க எங்களுக்கு ஏதாவது சொல்லுங்க!” என்று பறவைகளில் சற்று பெரியதாக இருந்த குட்டி மயில் மங்கம்மா கேட்டது.

“ஆமா, ஆமா தாத்தா இப்ப ஏதாவது சொல்ல வேண்டும்” என பலரும் சத்தமிட்டனர். அனைவரையும் அமைதிபடுத்தி பின் காகம் கரிகாலன் பேசலானது.

நமது வனத்திற்கு “அன்புவனம்” என்ற பெயர் எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து இப்போது கூறுகிறேன். கவனமா கேளுங்கள் என கூறியபடி தொடர்ந்து பேசலானது காகம் கருங்காலன்.

“நான் உங்களைப் போல சிறுவனாக இருந்தபோது நகரத்து மக்களுடன் பகற்பொழுதினை கழிப்பதற்காக விரும்பிச் செல்வேன்.  அப்படியான ஒரு நாளில் அங்கிருந்த பள்ளிக்கூடம் ஒன்றில் உள்ள இளம் மாணவர்களுக்கு “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்ற பழமொழியை கூறி விளக்கமாக அதற்கான கதை ஒன்றையும் கூறியதைக் கேட்டேன்.

அவர் கூறிய கதையில் கூறப்பட்ட சம்பவங்கள் எனது எண்ணத்தை மாற்றி அமைத்தது.   உடன் இங்கே வந்து தலைவராக இருந்த செவத்தையன் சிங்கத்திடம் நடந்ததை கூறினேன்.

அதைகேட்ட சிங்கமும் அன்றே அனைவரையும் அழைத்து நான் நகர மக்களிடம் கேட்ட “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்ற பழமொழி குறித்து விளக்கமாக கூறி அதை நாமும் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஆணையிட்டார்.

அன்று முதல் நமது வனம் அனைவரும் ஒற்றுமையுடன் வாழும் அன்பு வனமாக மாறியது. சரி நீங்கள் நாளை பகற்பொழுதில் கண்டு கேட்ட பழமொழிகளுடன் வாருங்கள், இப்போது செல்லுங்கள்” என்று கூறிவிட்டு மெதுவாக நடக்கலானது.

மறுநாள் பொழுது விடிந்ததும் அந்த வனத்தின் குஞ்சுகளும், குட்டிகளும் நகரப் பகுதிகளுக்குச் செல்லத் துவங்கின.

பின்னர் வந்த நாட்களில் குஞ்சுகளும், குட்டிகளும் நாளும் ஒவ்வொரு பழமொழியைக் கேட்டு வந்து வட்டப்பாறையில் காக்கை கருங்காலன் முன்னிலையில் கூறின.

பறவைகள் கேட்ட பழமொழிகள்

அடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள்

தூங்கியவன் கன்று கடாக்கன்று

கைக்கு எட்டிய தூரம் கைலாசம்! வாய்க்கு எட்டிய தூரம் வைகுந்தம்!

உள்ளது சொன்னால் அற்றது பொருந்தும்

கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு

ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்

பெண் புத்தி பின் புத்தி

மண்ணாங்கட்டி மாப்பிள்ளைக்கு எலும்பியம்மா பொண்ணு

யானைக்குப் பானை சரி

பந்திக்கு முந்தி படைக்குப் பிந்தி

ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம்

இருந்த கால் மூதேவி நடந்த கால் சீதேவி

பெண் என்றால் பேயும் இரங்கும்

பெற்றவள் வயிற்றைப் பார்ப்பாள் பெஞ்சாதி மடியைப் பார்ப்பாள்

அதையும்தான் சொல்வானேன் வாயும்தான் நோவானேன்

இலவு காத்த கிளி போல

பூசாரி பொய்யும் புலவனார் பொய்யும் ஆசாரி பொய்க்கு அரை பொய்க்கு ஆகாது

பகையாளி குடியை உறவாடி கெடு

உப்பிருந்த பாண்டமும் உளவிருந்த நெஞ்சமும் தப்பிடாமல் தண்டுண்டு உடையும்

உழவும் தரிசும் ஓரிடத்திலே ஊமையும் செவிடனும் ஒரு மடத்திலே

அறம் ப‌டித்தவன் அங்காடி போனால் விற்கவும் மாட்டான் வாங்கவும் மாட்டான்

பிழைக்கிற பிள்ளைக்கு பிச்சிப்பூ நஞ்சா

நரியினார் பட்டபாடு நாளை நாம் படுவோம்

கோழி முட்டைக்கு தலையுமில்லை கோவிலாண்டிக்கு உறவுமில்லை

கக்கின பிள்ளை தக்கும்

சாறு மிஞ்சினால் பாறை சாந்து மிஞ்சினால் குப்பை

நடக்க மாட்டாதவன் சித்தப்பா வீட்டில் பெண் எடுத்தானாம்

அதிகப் படிச்ச மூஞ்சுறு கழுநீர் பானையில் விழுந்ததாம்

நடப்பது எல்லாம் நன்மைக்கே

ஆற்றிலே போட்டு குளத்திலே தேடுதல்

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று

ஆதாயம் இல்லாமல் ஐயர் ஆற்றைக் கட்டி அழுவாரா

கண்டது கற்க பண்டிதன் ஆவான்

ஆண்டிகள்  மடம் கட்டியது போல

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டது போல

வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்

அஞ்சுக்கு இரண்டு பழுதில்லை

இனி வரும் வாரங்களில் ஒவ்வொரு பழமொழி பற்றிப் பார்ப்போம்.

 

இராசபாளையம் முருகேசன்

கைபேசி: 9865802942

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.