பற்பசையில் கார்பன்

பற்பசையில் கார்பன் என்றவுடன், அன்றாடம் நாம் பயன்படுத்தும் பற்பசையில் கார்பன் உள்ளதா? என ஆச்சர்யப்படுகின்றீர்களா? ஆர்ச்சர்யத்திற்கான விடையைக் கண்டுபிடிக்கத் தொடர்ந்து படியுங்கள்.

பழங்காலத்தில் மனிதர்கள் தங்கள் பற்களைச் சுத்தம் செய்ய கரி எனப்படும் கார்பனைப் பற்பொடியாக பயன்படுத்தி உள்ளார்கள். குறிப்பாக கிரேக்கர்கள் இம்முறையைப் பின்பற்றி உள்ளார்கள்.

நம் நாட்டிலும் கரியை (சாம்பல்) பற்பொடியாக அன்றைக்கு முதல் இன்றைக்கு வரை பயன்படுத்துகிறோம். இத்தாலி, கேமரூன், நைஜீரியா, தான்சானியா, வங்கதேசம் மலேசியா போன்ற நாடுகளிலும் இவ்வழக்கம் நடைமுறையில் இருந்திருக்கிறது.

பிற்காலத்தில் நவீன வளர்ச்சியின் காரணமாக கரியைத் தவிர்த்து வேதிப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டு பற்பொடியும், பற்பசையும் உருவாக்கப்பட்டன. அதனையே தற்போது உலகமெங்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கரியை மீண்டும் பற்களைச் சுத்தம் செய்யும் பொருளாக உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன்விளைவாய் தற்போது கரி சேர்க்கப்பட்ட பற்பசை தயார் செய்யப்பட்டு விற்பனைக்கும் வந்திருக்கிறது.

கரி சேர்க்கப்பட்ட பற்பசையின் நன்மைகள் யாவை? ஏதேனும் தீமைகள் உண்டா? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? வாருங்கள் அறிவோம்.

சுவை மற்றும் நறுமணம் அற்ற கிளர்வுற்ற கரி (activated charcoal) எண்ணற்ற நுண்துளைகள் கொண்ட (porous) பொருளாகும். இதனால் அதன் புறப்பரப்பு அதிகரிப்பதுடன் பிறபொருட்களைக் கவரும் பண்பும் (absorpition) அதிகரிக்கின்றது.

இதன் காரணமாக நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகள் மற்றும் பற்கரை போன்றவற்றை கிளர்வுற்ற கரி பரப்பு கவர்ந்து உடலில் இருந்து நீக்குகிறது.

எனவே கிளர்வுற்ற கரியை பற்பசையில் சேர்ப்பதால் பல நன்மைகள் கிடைப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கரி பற்பசையின் நன்மைகள்

வாயின் துர்நாற்றம் நீக்கப்பட்டு தூய்மை உண்டாகிறது.

பற்சொத்தை மற்றும் ஈறு சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கப்பட்டு வாயின் ஆரோக்கியம் பேணப்படுகிறது.

பற்கள் வெண்மையாக்கப்படுகின்றன.

மேலும் கரி விலை மலிவான பொருள் ஆதலால் கரி சேர்க்கப்பட்ட பற்பசையின் விலையும் குறைவு.

அதே நேரத்தில் மேற்கண்ட மருத்துவ நன்மைகளின் ஐயப்பாடும் இத்துறை சார்ந்த சில நிபுணர்களால் எழுப்பப்பட்டுள்ளன. அவை

நோய் கிருமிகளை பரப்பு கவர்ந்து வெளிக் கொண்டுவரும் கரி, உட்கொள்ளப்படும் மருந்துகளையும் பரப்பு கவர்ந்து வெளிக் கொண்டு வருகிறதா? அப்படி நிகழுமாயின் உட்கொள்ளப்படும் மருத்தின் விளைவுகள் அற்றுப் போகும் அல்லவா?

வாயில் உள்ள தீங்கிழைக்கும் நுண்ணுயிரிகளை நீக்கும் கரி ஆரோக்கியத்தை உண்டாக்கும் நுண்ணுயிரிகளையும் நீக்கலாம். இதனால் உண்டாகும் பாதிப்புகள் யாவை?

கரி ஒரு சாணைப் பொருள் (abrasive) ஆகும். எனவே தொடர்ந்து இப்பசையைப் பயன்படுத்தினால் பற்சிப்பி (enamel) பாதிக்கப்படுமோ?

இக்கேள்விகளுக்கான விடைகள் முறையான ஆராய்ச்சிகளின் மூலம் கிடைத்த பின்னரே, கரி பற்பசையின் முழுமையான நம்பகத்தன்மையை உறுதியுடன் கூறமுடியும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அதுவரையில் இப்பற்பசை பயன்பாட்டில் கவனம் தேவை என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

– முனைவர்.ஆர்.சுரேஷ்
ஆராய்ச்சியாளர்
பகுப்பாய்வு மற்றும் க‌னிம வேதியியல் துறை
கன்செப்ஷன் ப‌ல்கலைக்கழகம், சிலி
WhatsApp +91 9941633807

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.