பற்படாகம் – மருத்துவ பயன்கள்

பற்பாடகம் முழுத் தாவரமும் கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. மலமிளக்கும்; பசியைத் தூண்டும்; வியர்வையைப் பெருக்கும்.

உடலைத் தேற்றும்; காய்ச்சல் தணிக்கும்; உடல் வெப்பத்தைக் குறைக்கும்; அழுகலகற்றும்; தாகம், பித்த நோய்களை போக்கி கண்களுக்கு குளிர்ச்சி உண்டாக்கும்.

நேராக வளரும் மிகச் சிறு செடி வகைத் தாவரம். 1 ½ அடி வரை உயரமானது. மென்மையானது. மிகவும் மென்மையான கம்பி போன்ற பல கிளைகளைக் கொண்டது.

வேர்கள், தடித்தவை; சிவப்பு நிறமானவை; இலைகள் நீண்டு மெலிந்த ஊசி போன்றவை. வெண்மை நிறமான சிறு பூக்களை நுனியில் தொகுப்பாகக் கொண்டவை.

விதைகள் சிறியவை. முட்டை வடிவமானவை. சொரசொரப்பானவை. தாவரத்துடன் நீரைச் சேர்த்துக் கசக்கினால் வழவழப்பான சாறு கிடைக்கும்.

மணற்பாங்கான தோட்டங்களில் தானே வளரும் தாவரம்; தமிழகம் முழுவதும் மழைக் காலங்களில் களைச் செடியாக வளர்கின்றது.

காடுகள் அழிக்கப்பட்ட சமவெளிப் பகுதிகளில் அபரிதமாக வளர்கின்றது. முழுத் தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. இது காய்ந்த நிலையில் நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் சுரத்துடன் கூடிய பேதி குணமாக 2கிராம் பற்பாடகத்தைப் பசுமையானதாகச் சேகரித்துக் கொள்ள வேண்டும். அதனைத் தண்ணீரில் நன்றாகக் கழுவி அம்மியில் அரைத்து 200 மிலி மோரில் கலக்கி உள்ளுக்கு கொடுக்க வேண்டும். தினமும் காலை, மாலை வேளைகளில் 3 நாள்களுக்கு இவ்வாறு கொடுத்து வரவேண்டும்.

காய்ச்சல் குணமாக பற்பாடகம் முழுத் தாவரம், கண்டங்கத்திரி இலைகள், ஆடாதோடை இலைகள், தோல் நீக்கிய சுக்கு, விஷ்ணுகிரந்தி முழுத் தாவரம், வகைக்கு 10 கிராம் சுத்தம் செய்து நன்றாக நசுக்கி ஒரு லிட்டர் நீரில் போட்டு ¼ லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு வேளைக்கு 50 மிலி வீதம் நான்கு வேளைகள் குடிக்க வேண்டும்.

கீல் வாயு குணமாக காய்ந்த பற்படாகம் வேர் 100 கிராம் நசுக்கி ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வரவேண்டும்.

கண் எரிச்சல் குணமாக முழுத் தாவரத்தையும் அரைத்து பசையாக்கி பாலில் கலந்து தலை, உடலில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து இளஞ்சூடான நீரில் குளிக்க வேண்டும். வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்யலாம்.