ஊர் தலைவர் வீரமணி தன் பிறந்த நாளன்று, தனது கட்சி தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோருக்கு பிரியாணி விருந்து வைத்தார்.

விருந்து சாப்பிட்டு புறப்பட்டவர்களுக்கு, ஆளுக்கொரு மரக்கன்று அவரது கையால் கொடுத்தார்.

அவரது தோட்டத்தில் வேலை பார்க்கும் ராமையனும் மரக்கன்று வாங்க வரிசையில் வந்தான்.

“ராமையா! உனக்கெதுக்கு மரக்கன்று? உனக்கு சொந்தமா வீடு இல்ல, நிலமும் இல்ல, வாடகை வீட்டுல இருக்கிறவனுக்கு மரக்கன்று எதுக்கு? அப்பிடியே வாங்கீட்டுப் போனாலும் வீட்டு ஓனர் நட சம்மதிப்பாரா?” வீரமணி நக்கலாகக் கேட்க ராமையன் முகம் வாடிப்போனது.

“ஐயா! நீங்க சொல்றது வாஸ்தவம் தான், எனக்கு சொந்த வீடு இல்லதான், வாடகை வீட்டில இருந்தாலும் மரக்கன்று நடக்கூடாதுன்னு விதி எதுவும் கிடையாது, வீட்டு உரிமையாளரோட அனுமதி வாங்கி மரத்த நடுவேன் அய்யா” பணிவாய் சொன்னான் ராமையன்.

“அடேய்! அந்த வாடகை வீட்டில நிரந்தரமா நீ குடியிருக்கப் போறதில்ல, இந்த மாமரக்கன்று அஞ்சு வருஷத்திலேயே காய்க்கும், நீ நட்டு வளர்த்துவ, அதோட பலன வேற யாரோ தானே அனுபவிக்கப் போறாங்க”

“ஐயா, உங்க சொத்து உங்க பேரனுக்கு, அவனுக்கு உங்களத் தெரியும், அதுக்கப்பறம் வர்ற சந்ததிக்கு உங்கள தெரியுமா? அது மாதிரி தான், மரக்கன்று நடுறது நம்ம வேல, அதோட பலன யாரோ எடுத்தாலும் மரத்த நடுறப்போ கிடைக்கிற சந்தோஷம் அது ஒண்ணு போதுங்கய்யா!” அவனது பதிலில் வாயடைத்து ஒன்றுக்கு இரண்டு மரக்கன்று கொடுத்தார் வீரமணி.

M.மனோஜ் குமார்
சென்னை
கைபேசி: 9789038172